Pages

Wednesday, April 20, 2022

திருக்குறள் - அடக்கமுடைமை - அடக்கம் அமரருள் உய்க்கும்

 திருக்குறள் - அடக்கமுடைமை - அடக்கம் அமரருள் உய்க்கும் 


முதலில் நாம் வசிக்கும் இந்த பூமிதான் உலகம். இதுதான் உலகத்தின் மையம். எல்லாம் நம் பூமியை சுற்றி வருகிறது என்று நினைத்தார்கள். 


பின், அது சரி அல்ல, நாம் பூமி நடுவில் இல்லை. சூரியன் தான் நடுவில் இருக்கிறது. பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன்ன. இவை அனைத்தும் சேர்த்தது சூரிய குடும்பம் என்று நினைத்தார்கள். நம் சூரியனும், மற்ற கோள்களும்  தான் உலகம் என்று நினைத்தார்கள். 


பின், அது சரி அல்ல. இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் நம் சூரியனும் ஒன்று. இது போல் கோடிக்கணக்கான சூரியன்கள் இருக்கின்றன, அவற்றிற்கும் நம் பூமி போல் கோள்கள் இருக்கின்றன என்று கண்டு கொண்டார்கள்.  இவை அனைத்தும் சேர்ந்தது பால் வெளி அல்லது milky way என்று கண்டு கொண்டார்கள். 


பின், அது சரி அல்ல, நாம் இருக்கும் universe மட்டும் தான் உண்மை அல்லது ஒரே ஒரு universe தான் இருக்கும் என்று எப்படி நினைக்க முடியும்? ஒரு பூமி இல்லை, ஒரு சூரியன் இல்லை, ஒரு பால் வெளி இல்லை...எல்லாம் பலவாக இருக்கும் போது பிரபஞ்சம் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது universe அல்ல multiverse என்கிறார்கள். பல பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்கிறார்கள். நாம் இருப்பது ஒரு பிரபஞ்சத்தில். நாம் எவ்வளவு முயன்றாலும் மற்ற பிரபஞ்சங்களை காணவே முடியாது என்கிறார்கள். காரணம் அவற்றில் இருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரவே சேராது என்கிறார்கள். 


சரி, அதுக்கும் இந்த அடக்கமுடைமைக்கும் என்ன சம்பந்தம்?


வள்ளுவர் சொல்கிறார், சுவர்க்கம், நரகம் என்று ஒன்று அல்ல பல இருக்கின்றது என்கிறார். செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ப நாம் ஏதோ சொர்கதிலோ அல்லது ஏதோ ஒரு நரகத்திலோ சென்று பிறப்போம் என்கிறார். 


இந்த பூமியில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நல்லது மட்டுமே இருக்கும் உலகங்கள் இருக்கின்றன. அவற்றை சொர்க்கம் என்கிறோம். கெட்டது மட்டுமே இருக்கும் உலகங்கள் இருக்கின்றன, அவற்றை நரகங்கள் என்கிறோம். 


அடக்கமாக இருந்தால் தேவர்கள் வாழும் உலகில் செல்லலாம். இல்லாவிட்டால் இருண்ட உலகம் ஒன்று இருக்கிறது. அங்கே சென்று பிறப்போம் என்கிறார். 


பாடல் 


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_95.html


(pl click the above link to continue reading)


அடக்கம் = அடக்கம் 


அமரருள் = தேவர்கள் வாழும் உலகில் 


உய்க்கும் = சென்று சேர்க்கும் 


அடங்காமை = அடக்கம் இல்லாமல் இருத்தல் 


ஆரிருள் = இருள் சேர்ந்த உலகில் 


 உய்த்து விடும் = சேர்த்து விடும். 


இங்கு, அடக்கம், அடங்காமை என்பதற்கு பரிமேலழகர் அடக்கமாகிய அறம் என்றும், அடங்காமையாகிய பாவம் என்றும் உரை செய்கிறார். 


சரி, அடக்கம் என்றால் என்ன? யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் இருப்பதா? மறுமொழி பேசாமல் மெளனமாக இருப்பதா? தன் திறமையை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பதா?


இல்லை, பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். .


"மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் " 


என்று. 


உடம்பை கொஞ்சம் முயன்றால் கட்டுப் படுத்தி விடலாம். மொழி இன்னும் கொஞ்சம் கஷ்டம். மனம் இருக்கிறதே, அதை கட்டுப் படுத்துவது என்பது மிகக் கடினம். மேலும், மனம் தீ நெறியில் சென்றால் யாருக்குத் தெரியப் போகிறது? 


மாற்றான் பொருளை மனதில் தனக்கு வேண்டும் என்று நினைத்தால் தெரியவா போகிறது?


பொறாமை, பேராசை, பொருந்தா காமம் இதெல்லாம் வெளியே தெரியாது. எனவே மனம் அது நினைத்தபடி அலைந்து திரியும். 


இவற்றை, தீய வழியில் செல்ல விட்டால், அவை நம்மை பாவத்தில் அழுத்தி, பின் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும் என்கிறார். 


திருக்குறளில் பல்வேறு நரகங்கள் பற்றி கூறுவார். பின்னால் அவற்றை எல்லாம் பார்க்க இருக்கிறோம். 


மன, மொழி, மெய்யை அடக்கி தீ நெறியில் செல்லாமால் தடுத்து விட்டால் அது நம்மை சொர்க்கத்தில் சென்று சேர்க்கும் என்கிறார். 


அடக்கம் என்றால் என்ன, 


எதை அடக்க வேண்டும், 


எங்கு செல்லாமல் அடக்க வேண்டும், 


ஏன் அடக்க வேண்டும், 


அடக்கினால் என்ன பலன்


எல்லாம் ஒண்ணே முக்கால் அடியில். 




No comments:

Post a Comment