Pages

Friday, April 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?


இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. நாம் கேட்டவற்றை அவன் தருவான். நம்மிடம் இருந்து அவனுக்கு வேண்டியது ஒன்றும் இல்லை. நம்மை காப்பது அவன் கடமை. நம்மை என்றால் நம் உயிரை, பொருளை, சந்தோஷத்தை எல்லாம் சேர்த்ததுதான். 


அப்படி என்று நான் நினைத்துக் கொண்டு இருந்த போது, என் மகள் விடயத்தில் ஒரு தலைவனுக்கு பொருத்தமில்லாத ஒரு காரியத்தை நீ செய்யலாமா என்று நம்மாழ்வார் கேட்கிறார். .


அப்படி என்ன திருமால் செய்து விட்டார்?


பாடல் 


தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா

கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்

வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்

கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_29.html



(pl click the above link to continue reading)



தொண்டெல்லாம்  = தொண்டர்கள் எல்லோரும் 


நின்னடி யேதொழு து  = உன் திருவடிகளையே தொழுது 


உய்யுமா கண்டு = உயிவதைக் கண்டு, ஈடேறுவதைக் கண்டு 


தான் = அவள் 


கணபுரம் = திருக்கண்ணபுரம் 


கைதொழப் போயினாள் = (சென்று அல்லது நோக்கி) கைதொழப் போனாள் 


வண்டுலாம் = வண்டு உலவும் கூந்தலைக் கொண்ட 


கோதையென் பேதை = சூதுவாது அறியாத பேதைப் பெண்ணான என் கோதை (மகள்) 



மணிநிறம் = அழகிய மணி போல் ஒளி விடும் நிறத்தை 


கொண்டுதான் = நீ கொண்டு போய்விட்டாய் 


கோயின்மை = கோ + இன்மை = கோ என்றால் அரசன், தலைவன் 


செய்வது தக்கதே? = செய்வதுசரிதானா?


எல்லா பக்தர்களும் உன்னை வழிபட்டு நன்மை அடைகிறார்கள். அதைப் பார்த்து என் மகளும் உன்னை வழிபட்டாள். நீ என்னடா என்றால் அவளுக்கு வரம் தருவதை விட்டுவிட்டு அவள் மேனியின் நிறத்தை எடுத்துக் கொண்டாய். ஒரு தலைவன் செய்யும் செயலா இது ?


அதாவது, அவனையே நினைத்து உண்ணாமல், ,உறங்காமல் மெலிந்து, மேனி நிறம் குன்றிப் போய் விட்டதாம். திருமால் அருள் செய்யாததால் வந்த வினை என்கிறார். 


அருள் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை, இருக்கிறதையும் எடுத்துக் கொண்டு போவது சரியா என்று வினவுகிறார். .


பிரபந்தம் என்பது மிக மிக நெருக்கமான இறை அனுபவம். 


இறைவனுடன் சண்டை பிடிப்பது, கேள்வி கேட்பது, உருகுவது, அழுவது, கூத்தாடுவது என்று உணர்ச்சிகளின் மொத்த வெளிப்பாடு. 


ஆழமான அன்பின் அனுபவம் இருந்தால் அன்றி இவை புரியா. 




No comments:

Post a Comment