Pages

Saturday, April 30, 2022

திருக்குறள் - அடங்கியான் தோற்றம்

திருக்குறள் - அடங்கியான் தோற்றம் 


பொதுவாக அற நூல்கள் அதைச் செய், இதைச் செய்யாதே என்று உபதேசம் செய்யும். பெரும்பாலான உபதேசங்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராவிட்டால் "...கேக்க நல்லா இருக்கு...பாக்கலாம் ..." என்று தள்ளி வைத்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்.


படித்து ஒரு புண்ணியமும் இல்லை. 


நேரம் விரயம் ஆனதுதான் மிச்சம். 


ஆனால், திருக்குறள் அப்படி இல்லை. எது முடியுமோ அதைதான் சொல்லும். ஆண் பெண் இன்பமாகட்டும், பொருள் சேர்ப்பது ஆகட்டும், சண்டை பிடிப்பது, வேலை செய்வது என்று எதை எடுத்தாலும் எது முடியுமோ அதைத்தான் சொல்லுவார். .


அதனால்தான் முதலில் இல்லறத்தை வைத்து, பின் துறவறத்தை வைத்தார். 


இல்லறத்தையும் வைத்து அது கூடவே அடக்கமுடைமை, புலன் அடக்கம் என்று சொன்னால் எப்படி ?


கல்யாணம் பண்ணிவிட்டு, புலன் அடக்கம் என்றால், அதற்கு கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாமே? 


வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல் என்று சொல்லிவிட்டு பின் அடக்கமுடைமை என்று சொல்கிறாரே என்று நாம் நினைப்போம். 


அப்படி அல்ல என்று சொல்கிறார். 



பாடல் 


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_30.html


(Pl click the above link to continue reading)



நிலையின் திரியாது = தன் நிலையில் இருந்து மாறாமல் 


அடங்கியான் = அடங்கியவனின் 


தோற்றம் = தோற்றம் 


மலையினும் = மலையை விட 


மாணப் பெரிது = மிகப் பெரியது 


அடக்கம் உடமை பற்றித் தானே சொல்கிறார். எங்கே வேறுபடுகிறார் என்று நாம் தேடுவோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் நமக்குப் புரியவே புரியாது. 


"நிலையின் திரியாது அடங்கியான்" என்றால் என்ன? 


நிலை என்றால் இல்லறம் என்ற நிலை. பிரமச்சரியம், துறவு என்பது மற்ற நிலைகள். இங்கே இல்லறம் என்ற பால் என்பதால், நிலை என்பது இல்லறம் என்பதைக் குறிக்கும் என்று உரை எழுதுகிறார். 


இல்லறம் என்ற நிலையில் இருந்து திரியாமல். இல்லறத்துக்கு என்று சில இன்பங்கள் அனுமதிக்கபட்டு இருக்கிறது. கணவன் மனைவி இன்பம் துயித்தல், விருந்தோடு இருந்து உண்டல், என்பன அனுமதிக்கப் பட்டது. அதை அனுபவிக்கலாம். அதைத் தாண்டி போகக் கூடாது. "திரியாது".  என்றால் பிறழாது. 


அடுத்தது, "அடங்கியான்". இல்லறத்துக்கு இன்பம் அனுமதிக்கப்பட்டது என்பதற்காக  அதில் போய்க் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு அளவுக்கு மேல் போகாமல், போதும் என்ற திருப்தி வர வேண்டும்.  விருந்து அனுமதிகப்பட்டது என்பதற்காக அறுபது வயதில், என்பது வயதில் லட்டைக் கொண்டு வா, பாயசம் கொண்டு வா, முறுக்கைக் கொண்டு வா என்று சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. வயது ஆக ஆக, இன்பத்தின் மேல் உள்ள பற்று குறைய வேண்டும். அடங்க வேண்டும். .


"மலையின் மாணப் பெரிது". மலையை விட மிகப் பெரியது. இது என்ன பெரிய உதாரணமா? மலையை விடப் பெரியது என்று யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்தானே?


மலை எப்படி அவ்வளவு பெரிதாக ஆனது ? யாரும் செய்தார்களா? இல்லை. அது தானே உயர்ந்தது. அது போல,  புலன்களை அடக்கியவன் தானே உயர்வான். 


மலை எவ்வளவு உயர்ந்தாலும், அது தான் உயர்ந்து விட்டேன் என்று காட்டிக் கொள்ளாது. அடக்கமாக இருக்கும். அதுதான்  அதன்  கம்பீரம். 


இல்லற இன்பங்களை அனுபவித்து, அதன் மூலம் புலன் அடக்கத்தைப் பெற்றவன் அது போல உயர்ந்து கம்பீரமாக இருப்பான் என்பது இன்னொரு செய்தி. 


வள்ளுவர் இன்பங்களை மறுக்கவில்லை. மாறாக, ஆண்டு அனுபவிக்கச் சொல்கிறார். 


இன்பம் துயிக்கும் போது இரண்டு விடயங்களை மனதில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார். 


ஒன்று, ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும். 


இன்னொன்று, ஒரு அளவுக்கு மேல் போகக் கூடாது. 


இதைவிட ஒரு நடைமுறைக்கு உகந்த உபதேசம் வேறு என்ன இருக்க முடியும். 


இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  இல்லறத்தின் ஊடாக நம்மை துறவறத்துக்கு தயார் செய்கிறார். 


அனுபவித்து விட்டாய் அல்லவா? திருப்தி தானே...வா அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று கை பிடித்து அழைத்துச் செல்கிறார். 


நேரே துறவறம் என்று ஆரம்பித்து இருந்தால், "ஐயோ, இல்லறத்தில் என்னெனவோ இன்பங்கள் இருக்கிறதே...அதை எல்லாம் விட்டு விட்டு வந்து விட்டோமே" என்று அந்த நினைப்பாகவே இருக்கும். துறவு பாழ்படும். 


ஒண்ணே முக்கால் அடியில் என்ன ஒரு ஆழமான சிந்தனை. 










No comments:

Post a Comment