சேத்திரத் திருவெண்பா - திருத்துருத்தி யான்பாதஞ் சேர்
ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு வயதான ஆண். மெலிந்த உருவம். எழுந்து நடக்கக் கூட முடியாத வயோதிகப் பருவம். தளர்ந்து போய் இருக்கிறார். அவருடைய மனைவி அவரை தன் மடி மீது படுக்க வைத்து அவருடைய தலையை மென்மையாக கோதி விடுகிறாள். அவளுக்கும் வயதாகி விட்டது.
அவருக்கு பசிக்கிறது. ஆனால், கடினமான உணவு எதையும் விழுங்க முடியாது. கஞ்சி போன்ற திரவ உணவுதான் உண்ண முடியும். மனைவியின் முகம் பார்த்து "கொஞ்சம் கஞ்சி கொண்டு வா" என்கிறார்.
அந்த அளவு பலகீனம்.
வயது எல்லோருக்கும் ஆகும்தானே? அப்படி வயதாகி தள்ளாடுவதற்கு முன் திருத் துருத்தி என்ற தலத்தில் கோவில் கொண்டுள்ள சிவன் திருவடிகளை சேரும் வழியைப் பார் என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.
பாடல்
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post.html
(Pl click the above link to continue reading)
வஞ்சியன = இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாத
நுண்ணிடையார் = சிறிய இடையை உடைய பெண்கள் (மனைவி)
வாள்தடங்கண் = வாள் போன்ற நீண்ட கண்கள்
நீர்சோரக் = நீர் வடிய
குஞ்சி = தலை
குறங்கின்மேற் = மடியின் மேல் (குறங்கு = தொடை)
கொண்டிருந்து = கொண்டிருந்து
கஞ்சி = கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா = அக்கறையுள்ள ஒருத்தி (மனைவி) கொண்டுவா (மனைவியிடம் கஞ்சி கொண்டுவா )
என்னாமுன் = என்பதற்கு முன்
நெஞ்சே = என் மனமே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர் = திருத் துருத்தியான் பாதம் சேர்
குஞ்சி என்றால் முடி.
பரதனுக்கு முடி, உனக்கு கானகம் என்று கைகேயி சொன்ன பின், இராமன் கோசலையை காண வருகிறான். அவன் தூரத்தில் வரும் போதே அவன் முடி மஞ்சன நீராட்டால் நனையவில்லையே என்று கோசலை பதறுகிறாள்.
"குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன்" என்று கம்பன் பேசுவான். குஞ்சி, முடி. இங்கே தலை.
‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ
நெடு முடி புனைதற்கு?’ என்றாள்
சிவன் நடனம் ஆடிய போது, தன் இடது காலை தலை வரை உயர்த்தி ஆடினாராம். அந்த பாதத்துக்கு குஞ்சித பாதம் என்று பெயர். தலையில் பாதம் என்று அல்ல. தலைவரை சென்ற பாதம்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், வாழ் நாள் இருந்தாலும், உடம்பில் வலு இருக்காது.
இப்படி கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பாடல் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.
செல்வம் இன்னும் சேர்க்கவில்லையே, சேர்த்தது இன்னும் போதவில்லையே, இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டி இருக்கிறது, அவன் இவ்வளவு சேர்த்து விட்டான், இவன் அவ்வளவு சேர்த்து விட்டான் என்ற கவலை எல்லாம் பறந்தோடி விடும்.
அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் இனிய பாடல்கள்.
மிகவும் அற்புதமான தமிழ்ப் பாடல்கள் தேடித் தருகிறீர்கள்.தங்கள் நன்முயற்சி தொடர இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்., 🙏
ReplyDelete