Pages

Tuesday, May 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே 


வெளியில் விளையாடி விட்டு பையன் தளர்ந்து வருகிறான். 


அம்மாவுக்குத் தெரியும். பையன் பசியோடு வந்திருப்பான் என்று. 


"கொஞ்சம் இரு, சூடா உனக்கு சாப்பிட கொண்டு வருகிறேன்" என்று சமையல் அறைக்குள் செல்கிறாள். 


பையன் , சோபாவின் மேலே காலை நீட்டி படுத்துக் கொள்கிறான். கையில் செல் போன். எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறான். 


கொஞ்ச நேரம் ஆச்சு. சாப்பாடு ஒண்ணும் வர்ற வழியா தெரியல...எழுந்து உட்கார்ந்து கொள்கிறான், பசி, சாப்பாடு வரப் போகிறது என்ற ஆர்வம் ..."என்னம்மா ஆச்சு...எவ்வளவு நேரம்...". 


"இதோ முடிஞ்சிருச்சு...இரண்டே நிமிடம்" என்று அம்மா குரல் கொடுக்கிறாள். 


நேரம் போனது. இன்னும் சாப்பாடு வந்த பாடில்லை. பையனுக்கு பொறுமை போய் விட்டது...எழுந்து நேரே சமையல் அறைக்கே போய் விடுகிறான். "என்னதான் செய்ற...இவ்வளவு நேரமா" என்று. அவன் அவசரம் அவனுக்கு. 


இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்ததுக்கும் என்ன சம்பந்தம்?


இருக்கு. சொல்கிறேன். 


பாடல் 




புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப

புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.


படிக்க சற்று கடினமாய் இருக்கும். சீர் பிரித்தால் எளிதாக விளங்கும். 


சீர் பிரித்த பின் 


புளிங்குடிக் கிடந்து வாகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று


தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னையாள்வாய் எனக்கு அருளி 


நளிர்ந்த சீருலகம்  மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப 


பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப அரி காண வாராயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_3.html


(pl click the above link to continue reading)


புளிங்குடிக் கிடந்து = திருப் புளிக் குடியில் பள்ளி கொண்டு 


வாகுணமங்கை இருந்து  = வாகுர மங்கை என்ற தலத்தில் வீற்று இருந்து 


 வைகுந்தத்துள் நின்று = வைகுந்தத்துள் நின்று 


தெளிந்த என் சிந்தை  = என் சிந்தையை தெளிவித்து 


அகம் கழியாதே = என்னை விட்டு நீங்காமல் 


என்னையாள்வாய் = என்னை ஆள்பவனே 


எனக்கு அருளி  = எனக்கு அருளிச் செய்து 


நளிர்ந்த சீருலகம்  =   குளிர்ந்த இந்த சீரிய உலகம் 


மூன்றுடன் வியப்ப = மூன்று உலகோடு வியப்ப 


நாங்கள் = நாங்கள் 


கூத்தாடி = கூத்து ஆடி 


நின்று ஆர்ப்ப  = நின்று ஆர்பரிக்க 


பளிங்கு = பளிங்கு போன்ற 


நீர் முகிலின் = நீரைக் கொண்ட மேகத்தின் 


பவளம் போல் = பவளம் போன்ற 


கனிவாய் சிவப்ப = அதரங்கள் சிவந்து இருக்க 


அரி காண வாராயே. = என்னைக் காண வா 


இதற்கு வைணவ பெரியவர்கள் எழுதிய உரை மெய் சிலிர்க்க வைக்கும். அவர்கள் சொன்னதை நான் எளிமைப் படுத்திச் சொல்கிறேன். 


நமக்கு இறைவன் அருள் வேண்டும். 


அதற்காக முயற்சி செய்கிறோம். ஆனால், நமக்கு அதுவே முழு நேர வேலை இல்லை. அதற்கு நடுவில் பல வேலைகள் இருக்கிறது. 


இறைவனுக்கு நமக்கு அருள் செய்ய வேண்டும்.


இறைவனுக்கு வேறு வேலை என்ன? அப்படியே இருந்தாலும், அவனுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விடயம் இல்லை. நமக்கு அருள் செய்வது ஒன்றுதான் அவனுக்கு ஒரே வேலை. 


எப்படா இவனுக்கு அருள் செய்வோம் என்று இறைவன் தவித்துக் கொண்டு இருப்பானாம்.


முதலில் சயனித்துக் கொண்டு இருந்தானாம். ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. இந்த பக்தனோ நம்மிடம் வரவே மாட்டேன் என்கிறான்.  பொறுமை இழந்து, பெருமாள் எழுந்து உட்கார்ந்து விட்டார். பக்தன் வருகிறானா, எங்கே வருகிறான் என்று பார்பதற்கு. 


பக்தன் வருவதாகக் காணோம். பெருமாளுக்கு இன்னும் பொறுமை போய் விட்டது. எழுந்து நின்று கொண்டாராம். ஒருவேளை அவன் வந்தால் நாம் ஓடிப் போய் அவனுக்கு அருள் செய்யலாம் என்று. 


புளிங்குடிக் கிடந்து

 வாகுணமங்கை இருந்து

 வைகுந்தத்துள் நின்று


கிடந்து, இருந்து, நின்று பகவான் தவிக்கிறான். எப்படியாவது அடியவனுக்கு அருள் செய்து விடமாட்டோமா என்று. 


பக்தனுக்கு ஒரு கவலையும் இல்லை. 


அவன் பாட்டுக்கு netflix, whatsapp என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். 


பத்தா குறைக்கு அவன் இறைவனிடம் சொல்கிறான் 


"இங்க பாரு...நீ பெரிய ஆள். இந்த உலகமே உன்னைப் பார்த்து வியக்கிறது. இப்ப உனக்கு என்ன பிரச்சனை? எனக்கு அருள் செய்யணும். அது தானே? நான் வரணுமுன்னு ஏன் நீ எதிர்பாக்குற...நீயே வந்து அருள் செய்துட்டுப் போயேன். மழை யார் கேட்டுமா பெய்கிறது. அது பாட்டுக்கு பெய்கிறது. உன்னைப் பார்த்தாலும் அந்த நீர் கொண்ட கரு முகில் போலத் தான் இருக்கிறது. நீ பாட்டுக்கு அருள் செய்யேன்" 


" காண வாராயே"


"நான் உன் கிட்ட வரல. ..எனக்கு அறிவு இல்லை. நீ என் கிட்ட வரலாம்ல...என்னைப் பார்க்க நீ வரலாம்ல...அதுக்கு என்ன தடை ?"


என்கிறான். .


இதெல்லாம் ஒரு அன்யோன்யம். கடவுளிடம் ஒரு அன்பு, நேசம், பாசம், உரிமை. 


இறைவனை அனுபவித்தல் என்பார்கள் வைணவர்கள். அது ஒரு அனுபவம். 


சொன்னால் புரியாது. அனுபவிக்க வேண்டும்.


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் எழுதி விளக்கினாலும் புரியாது. ஒரு துண்டு கற்கண்டை வாயில் போட்டால் புரிந்து விடும். அதுதான் அனுபவம். .


"நீ சொல்லு. எனக்கு பிடித்து இருந்தால் நான் வாயில் போடுகிறேன்" என்றால் நடக்காது. சொல்லிப் புரியாது. அனுபவம் ஒன்றேதான் வழி. 


பிரபந்தம் போன்ற நூல்கள் நம்மை அந்த அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள். அதில் சொல்லுக்கு பொருள் தேடக் கூடாது. அனுபவங்களை, உணர்சிகளை பிடித்துக் கொள்ள வேண்டும். 


அந்த அனுபவம் வாய்க்க குருவருள் துணை செய்யட்டும். 












No comments:

Post a Comment