Pages

Wednesday, April 6, 2022

திருக்குறள் - கேடும் பெருக்கமும்

திருக்குறள் - கேடும் பெருக்கமும் 


மிக மிக பிரமிப்பூட்டும் குறள்களில் இதுவும் ஒன்று. 


ஒரு மனிதனால் எப்படி இந்த அளவு சிந்திக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. சிந்திப்பது மட்டும் அல்ல, அதை ஒண்ணே முக்கால் அடியில் எப்படி சொல்லவும் முடிகிறது. 


அவர் சொல்வதை நாம் நம்பலாம், அல்லது நம்பாமல் இருக்கலாம். ஆனால், அந்த சிந்தனையின் ஆழம் நம்மை எங்கோ கொண்டு செல்லும். 


மேலும் காலம் தாழ்த்தாமல், குறளுக்கு செல்வோம். .


பாடல் 


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


கேடும் = கெடுதலும் 


பெருக்கமும் = நன்மையும், செல்வமும் 


இல்லல்ல = இல்லாதவை அல்ல 


நெஞ்சத்துக் = மனதில் 


கோடாமை = நடுவு நிலைமை தவறாமல் இருத்தல் 


சான்றோர்க்கு அணி = சான்றோருக்கு சிறந்த அணிகலன் 


மேலோட்டமாக பொருள் சொல்வது என்றால் 


"வாழ்க்கைனா நல்லது கெட்டது நாலும் இருக்கத்தான் செய்யும். நடுவு நிலைமை தவறாமல் இருப்பது பெரியவர்களுக்கு அழகு"


இதுல என்ன பெரிய பிரமாண்டம் இருக்கிறது?  நாம கூட இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கலாமே. இதுக்கு எதுக்கு ஒரு வள்ளுவர்?


விரித்து பொருள் காண்போம்.


ஒருவன் ஏன் அறம் தவறி நடக்கிறான்?


ஏதோ வறுமை, அல்லது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டு விட்டான். பிள்ளையை பெரிய படிப்பு படிக்க வைக்க நினைப்பது தவறா? பெண்ணை ஒரு பெரிய நல்ல இடத்தில் கட்டி கொடுக்க நினைப்பது தவறா? உடம்பு சரி இல்லாத பெற்றோரை ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க நினைப்பது தவறா? ஆசைப் பட்ட பெண்டாடிக்கு நாலு நகை நட்டு வாங்கித் தர நினைத்தது தவறா?


அதற்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்து நாலு காசு பார்த்தால் என்ன ஆகி விடப் போகிறது என்று நினைத்து தானே பலர் தவறு செய்கிறார்கள்?


அதாவது நடுவு நிலை தவறி நடந்தால் இப்போது உள்ளை துன்பத்தை நீக்கி விட முடியும் என்று நினைக்கிறார்கள். சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறார்கள். 


பரிமேலழகர் உரை செய்கிறார் 


"தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன"


நமக்கு வரும் கேடும், பெருக்கமும் நாம் முன் செய்த நல் மற்றும் தீவினையால் வந்தவை. அது இப்போது வந்தது என்று நினைக்கக் கூடாது. முன் செய்த வினை இப்போது வந்து நிற்கிறது. 


ஒரு நல்லவன் துன்பப் படுகிறான் என்றால் சான்றோர் என்ன நினைப்பார்கள் என்றால், அவன் மடையன், அவன் அறிவு இல்லாதவன், அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று நினைக்க மாட்டார்கள். .ஏதோ அவன் முன் செய்த வினை அவனை வாட்டுகிறது என்று நினைப்பார்களாம. 


அதேபோல் கெட்டவன் சந்தோஷமாக இருந்தால் ஏதோ அது அவன் சாமர்த்தியம் என்று நினைக்க மாட்டார்கள். அவன் முன் செய்த நல் வினை என்று நினைப்பார்களாம்.


எனவே, ஒருவன் தன் சாமர்த்தியத்தால், அறிவால், திறமையால், ஊக்கத்தால் தான் பெரிய ஆள் ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. அதே போல வறுமை வந்தாலும், ஏதாவது தவறானவற்றைச் செய்து வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. என்ன செய்தாலும் செய்த வினை விடாது. 


பரிமேலழகர் மேலும் சொல்கிறார் 


"அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக்"


அதாவது அந்த இன்பமும், துன்பமும் ஏதோ இப்போதுதான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு 



" கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். "


நமக்கு வரும் கேடும். பெருக்கமும் நாம் செய்த முன்வினைப் பயனால் வந்தது என்று உறுதியாக நம்ப வேண்டும். (ஒருதலைக் கண் என்றால் உறுதியாக என்று அர்த்தம்) 




"அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்."


நாம் தவறான வழியில் பொருள் சேர்த்தாலும் நாம் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் அனுபவித்தே தீருவோம்.


என் வறுமையை போக்குகிறேன் என்று தவறு செய்தால், அந்த வினையும் சேர்ந்து கொள்ளும். 


இலாபமோ, நட்ட்டமோ, இன்பமோ, துன்பமோ என்ன ஆனாலும் தவறு செய்வதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும். 


நம் சாமர்த்தியத்தால் எதுவும் நடந்து விடாது என்று அறிய வேண்டும். 


எவ்வளவோ பெரிய புத்திசாலிகளை காலம் புறம் தள்ளி இருக்கிறது. ஒன்றும் படிக்காதவனை தலையில் வைத்து கொண்டாடி இருக்கிறது. 


பெரிய பணக்காரன் எல்லாம் இழந்து ஏழ்மையில் இறந்து இருக்கிறார்கள். 


ஒன்றும் இல்லாதவன் தொட்டதெல்லாம் தங்கமாகி பெரும் பணக்கார்களாக ஆகி இருக்கிறார்கள். 


வரும் போது வரும். போகும் போது போகும். 


அதற்காக நாம் தவறான வழியில் செல்லக் கூடாது என்கிறது குறள். 


நாம் நமக்கு வரும் துன்பத்தை சகித்து இருந்து விடுவோம். பிள்ளையை ஒரு சாதரண கல்லூரியில் சேர்த்து விடலாம். பிரச்னை ஒன்றும் இல்லை. 


ஆனால், இந்த உறவுக் காரர்கள் கேலி செய்வார்களே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்களே என்று நினைத்து அவர்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க எப்படியோ காசு சம்பாதித்து பெரிய கல்லூரிக்கு அனுப்பி, பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணி ஏதேதோ செய்கிறோம். 


வள்ளுவர் சொல்கிறார், இந்த அக்கம் பக்கம், உறவு, whatsapp நண்பர்கள் இவங்க என்ன நினைபாங்க என்று கவலைப் படாதே. 


சான்றோர், அதாவது படித்தவர்கள், நல்லவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசி என்கிறார். 


உன் வறுமையை துன்பத்தை கண்டு அவர்கள் உன்னை இகழ மாட்டார்கள். மாறாக, இந்த வறுமையிலும், துன்பத்திலும் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக வாழ்கிறானே என்று உன்னைப் போற்றுவார்கள் என்கிறார். 


"சான்றோருக்கு அணி". 


அவங்களுக்கு அது தான் சிறப்பு. 


நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். யாருடைய எண்ணம் நமக்கு முக்கியம் என்று. 


எவ்வளவு ஆழமான குறள்!



No comments:

Post a Comment