Pages

Wednesday, April 6, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க 


நமக்கு ஒரு ஊருக்குப் போக வேண்டும். 


வண்டி ஒரு குறித்த சமயத்தில் கிளம்பி விடும். காலாகாலத்தில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும். ஊர் போய் சேர முடியும். 


இன்னும் நேரம் இருக்கு, இன்னும் நேரம் இருக்கு என்று காலம் தாழ்த்திக் கொண்டே போனால், வண்டியைக் கோட்டை விட்டு விடுவோம் அல்லவா?


சரி, வண்டியைப் பிடிச்சாச்சு. போற வழியில், ஒரு டீ குடித்துவிட்டுப் போகலாம் என்று வண்டியை நிறுத்துகிறோம். கொஞ்ச நேரம் போகிறது. 


இன்னும் கொஞ்ச தூரம் போன பின், போற வழிக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு போனால் என்ன. படிசுகிட்டே போகலாமே என்று ஒரு புத்தகக் கடையில் வண்டியை நிறுத்துகிறோம். 


அப்புறம்,  துணி வாங்க.  shoe பாலிஷ் போட என்று அங்கங்கே நிறுத்தி போனால் என்ன ஆகும்? வண்டி போய் விடும் அல்லவா?


போனால் என்ன? அடுத்தவண்டியில் போனா போச்சு என்று நினைக்கலாம். 


ஒரு வேளை வேற வண்டியே இல்லாவிட்டால்? இப்போது உக்ரைன் நாட்டில் சண்டை நடக்கிறது. மக்கள் அந்த நாட்டை விட்டு அருகில் உள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். அப்படி நாட்டை விட்டு போகிறவர்களை கூட்டிக் கொண்டு போக வண்டி இருக்கிறது. ஒரு வண்டியை விட்டால் அடுத்து எப்போது வண்டி வரும் என்று தெரியாது. அதற்குள் வேறு என்னவெல்லாம் நடக்கும் என்றும் தெரியாது. 


நம் பிறவியும் அப்படித்தான். வீடு பேறு என்ற இடத்துக்குப் போக வேண்டும். 


அதற்கு வழி பார்க்காமல், பராக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கல்யாணம், பிள்ளை, கணவன்/மனைவி, சொத்து, உறவு, சினிமா, whatsaap என்று பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறோம். 


வண்டி போய் விடும். உயிர் ஒரு நாள் போய் விடும். உடம்பில் வலு போய்விடும். அப்புறம் எழுந்தால் உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழ முடியாது நேத்து படித்தது இன்று மறந்து விடும். 


ஒரு அவசரம் வேண்டாமா?


அவங்கள்ளெல்லாம் போகலையே, அவங்களும் அதே ஊருக்குதான போகணும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் இருக்க வேண்டியது தான். 


பாடல் 


நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_63.html


(pl click the above link to continue reading)



நிற்பார் நிற்க = யாத்திரைக்கு புறப்படமால், நிற்பவர்கள் நிற்கட்டும் 


நில் லா உலகில் = நிலை இல்லா இந்த உலகில் 



நில்லோம் = நான் நிற்க மாட்டோம் 


இனி நாம் செல்வோமே = இனிமேலாவது செல்லத் தலைப் படுவோம் 



பொற்பால்= அழகால் 


ஒப்பாந் திருமேனிப் = தனக்குத் தானே ஒப்புமை உடைய மேனியை உடைய 


புயங்கன் = பாம்பை அணிந்த கைகளை உடையவன் 


ஆள்வான் பொன்னடிக்கே = நம்மை ஆள்பவன் திருவடிகளுக்கே 


நிற்பீர் = வரிசையில் நிற்பீர் 


எல்லாந் தாழாதே = காலம் தாழ்த்தாமல் 


நிற்கும் பரிசே = நீங்கள் நினைத்து நின்ற பரிசே 


 ஒருப்படுமின் = ஒன்றாக வாருங்கள் 


பிற்பால் = அப்புறம் 


நின்று = வராமல் நின்று 


பேழ்கணித்தால் =  வருந்தினால் 


பெறுதற் கரியன் பெம்மானே. = பெறுவதற்கு அரியவன் அவன் 



சும்மா, காலத்தை விரயம் பண்ணிக் கொண்டு இருக்காதீர்கள் . உடனே புறப்படுங்கள் என்கிறார் மணிவாசகர். 



No comments:

Post a Comment