Pages

Sunday, May 29, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அனுமன் தன்னைப் பற்றி  மேலே சொன்ன மூன்று பாடல்களில் சீதையிடம் சொல்லி முடிக்கிறான். 


இப்போது சீதை அனுமன் சொன்னதை எல்லாம் கேட்டு மனதில் நினைக்கிறாள். இன்னும் வாய் திறந்து பேசவில்லை. 


என்ன நினைக்கிறாள் ?


"இவனைப் பார்த்தால் அரக்கன் மாதிரி இல்லை. தன் ஐந்து புலன்களையும் வென்று நல் நெறியில் நிற்கும் ஒரு யோகி போல இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒருவேளை ஏதோ ஒரு தேவனாக இருக்க வேண்டும். அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன. அவன் பேச்சில் ஒரு தூய்மை இருக்கிறது. குற்றம் அற்றவனாகத் தெரிகிறான்...." என்று. 



பாடல் 


என்று அவன் இறைஞ்ச நோக்கி,

    இரக்கமும் முனிவும் எய்தி,

‘நின்றவன் நிருதன் அல்லன் :

    நெறி நின்று பொறிகள் ஐந்தும்

வென்றவன் : அல்லன் ஆகில்,

    விண்ணவன் ஆதல் வேண்டும் :

நன்று உணர்வு : உரையும் தூயன் :

    நவை இலன்போலும்! ‘என்னா.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


(pl click the above link to continue reading) 


என்று அவன் இறைஞ்ச = அவ்வாறு எல்லாம் அவன் (அனுமன்) பணிவோடு சொல்லி நிற்க 


நோக்கி = அவனை நோக்கி 


இரக்கமும் = கருணையும் 


முனிவும் = கோபமும் (ஏன் என்று கீழே விரிவாக காண்போம்) 


எய்தி = அடைந்து 


நின்றவன் = இங்கே நிற்பவன் 


நிருதன் அல்லன்  = அரக்கன் அல்லன் 


நெறி நின்று = நல்ல வழிகளில் நின்று 


பொறிகள் ஐந்தும் = ஐந்து புலன்களையும் 


வென்றவன் = வென்றவன் 


அல்லன் ஆகில், = அப்படி இல்லாவிட்டால் 


விண்ணவன் ஆதல் வேண்டும் : = வானில் உள்ள தேவனாக வேண்டும் 


நன்று உணர்வு  = அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன 


உரையும் தூயன்  = அவன் பேச்சும் தூய்மையாக இருக்கிறது 


நவை இலன்போலும்! ‘என்னா. = குற்றமற்றவன் போலத் தெரிகிறான் என்று எண்ணினாள் 


"இரக்கமும், முனிவும் எய்தினள்"...இரக்கம் சரி. கோபம் ஏன் வர வேண்டும்?


சில சமயம் நமக்கு வேண்டியவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் மாட்டிக் கொண்டால் நமக்கு அவர்கள் மேல் இரக்கம் வரும், அதே சமயத்தில் கோபமும் வரும்..."என்னத்துக்குப் போய் அந்த வேலையை செஞ்சு இப்படி சிக்கலில் மாட்ட வேண்டும். ...இதெல்லாம் தேவையா...சொன்னா கேக்குறது இல்லை" என்று அவர்கள் மேல் கோபப் பட்டு இருக்கிறோமா இல்லையா? 


வீட்டில் ஏதோ ஒரு பொருள் உயரத்தில் இருக்கிறது.  'அதை கொஞ்சம் எடுத்துத் தாங்க' என்று மனைவி கணவனிடம் சொல்கிறாள். அவன் ஏதோ வேலை மும்முரத்தில் இருக்கிறான். "வர்றேன்" அப்படின்னு பதில் மட்டும் வருது. மனைவிக்கு அவசரம். அவளே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மேலே உள்ள பொருளை எடுக்க முயல்கிறாள். பொருள் கொஞ்சம் பளுவானது. நிலை தடுமாறி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு லேசாக வீங்கிக் கொள்கிறது. 


கணவன் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். 


"அடி பட்டு கிடக்கும் அவளை தூக்கி விடுகிறான். அடி பட்ட இடத்தை தேய்த்து விடுகிறான். "வலிக்குதா, இரத்தம் வருதா" என்று  விசாரிக்கிறான். அதுவரை அன்பு. "நான் தான் வர்றேன்னு சொல்றேன்ல...அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு" என்று அவளை கோபிக்கவும் செய்கிறான். 


இது நடப்பது தானே? 


அன்பும், கோபமும் ஒன்றாக வரும். மனித மனம் விசித்திரமானது. ஏன் என்று காரணம் கேட்கக் கூடாது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்சிகள்எழுவது இயற்கை. 


பெருமையும், பொறாமையும் ஒன்றாக வருவது இல்லையா? 


சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். 


சீதை அனுமனைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கிறாள்?


- அரக்கன் இல்லை 

- தேவன் 

- புலன்களை வென்றவன் 

- நல் வழியில் நிற்பவன் 

- நல்ல உணர்வுகளை உடையவன் 

- தூய சொற்களை உடையவன் 


இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது?  அவள் அனுமனை முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது. பின் எப்படி முடிவு செய்தல் ?


அவன் பேச்சின் மூலம். அனுமனின் மூன்றே மூன்று பாடல்கள் மூலம் அவனின் உயர்வை அவள் அறிந்து கொள்கிறாள். 


இது சீதையிடம் மட்டும் அல்ல. அனுமனை முதன் முதலில் கண்டு சிறிது பேசிய பின் இராமனும் சொல்வான் "யார் கொல்லோ இச் சொல்வின் செல்வன்" என்று. 



பேச்சு ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று நாம் புரிந்து கொள்ள உதவும் பாடல்கள். 


நாம் பேசும் பேச்சு நம் மதிப்பை பல மடங்கு உயர்த்தும். 


பேச்சு சும்மா வந்து விடாது. பேச்சு என்பது ஏதோ அடுக்கு மொழியில் பேசுவது அல்ல. 


தூய்மையான பேச்சு. அது  எப்படி வரும் ?  


புலன்களை வென்று, நல் வழியில் நடந்தால், உள்ளம் தூய்மையாகி, உயர்ந்த சொற்கள் வெளி வரும். அது நம்மை தேவர்களாக உயரச் செய்யும் 


நல்ல சொற்கள் வரவில்லை என்றால், உள்ளம் தூய்மையாக இல்லை என்று அர்த்தம்.  உள்ளம் தூய்மையாக இல்லை என்றால் புலன்கள் நல்ல வழியில் செல்லவில்லை என்று அர்த்தம். அவை நல்ல வழியில் செல்லாமல் இருக்கக் காரணம், அவற்றை நாம் வென்று அடக்கவில்லை என்று காரணம். 


எவ்வளவு பெரிய உயர்ந்த விடயத்தை கம்பன் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். 



இலக்கியம் படிப்பதால் வரும் இன்னொரு நன்மை. நம்மை உயர்த்த இலக்கியங்கள் துணை செய்யும். 


நல்ல கதை. இனிமையான பாடல்கள். அதோடு கூட உயர்ந்த கருத்துக்கள். 


இலக்கியம் சுகமானது. 


"நீ இப்படிச் செய் என்றால் யார்க்கும் பிடிக்காது". இப்படி எல்லாம் செய்ததால் அனுமன் உயர்ந்தான் என்று சொல்லி, அப்படியே விட்டு விட்டால், நாமும் அப்படிச் செய்தால் என்ன என்ற எண்ணம் வரும்.. நம்மை அறியாமலேயே அது நம்மை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும். 

1 comment:

  1. அருமையான விளக்கம். இதைவிட அழகாக சொல்லமுடியாது.
    பார்த்தசாரதி

    ReplyDelete