திருக்குறள் - அடக்கமுடைமை - தொகுப்புரை
இதுவரை நாம் சிந்தித்த அதிகாரங்கள்
கடவுள் வாழ்த்து
வான் சிறப்பு
நீத்தார் பெருமை
அறன் வலியுறுத்தல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணை நலம்
புதல்வரைப் பெறுதல்
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய் நன்றி அறிதல்
நடுவு நிலைமை
அடுத்ததாக அடக்கமுடைமை பற்றி கடந்த சில நாட்களாக சிந்தித்தோம்.
அடக்கம் என்றால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போவது அல்ல. செல்வம் உள்ளவர்களைக் கண்டால், பதவியில், அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டால் பயந்து அடங்கிப் போவது அல்ல அடக்கம் உடைமை. புலன்களை அடக்குவதே அடக்கம் உடைமை.
மேலும், இல்லறத்தில் உள்ளவன் புலன்களை அடக்குதல் என்பது முடியாத ஒன்று மட்டும் அல்ல தேவை இல்லாததும் கூட. திருமணம் செய்து விட்டு நான் புலன் அடக்கம் செய்கிறேன் என்று கூறினால் அது சரி வராது. எனவே, இல்லறத்தில் உள்ளவனுக்கு அடக்கம் உடைமை என்பது புலன்கள் அவன் கட்டுக்குள் இருப்பது என்று பரிமேலழகர் உரைப் பாயிரத்தில் குறிப்பிடுகிறார். ஒரு ஒழுங்கு வரைமுறையோடு இன்பம் துயித்தல் பற்றி கூறுகிறார்.
இனி அடக்கமுடைமை அதிகாரத்தின் தொகுப்புரையை காணலாம்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_12.html
(pl click the above link to continue reading)
முதல் குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் தேவர்களில் ஒருவனாகச் செய்யும். அடங்காமை இருண்ட நரகத்தில் தள்ளிவிடும்.
இரண்டாவது,
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங்கு இல்லை உயிர்க்கு.
எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்து மறந்தாலும் புலன்கள் இழுத்துக் கொண்டு ஓடிவிடும். உயர்ந்த, ,விலை மதிப்புள்ள பொருளை எப்படி காவல் செய்வோமோ அது போல இருபத்தி நான்கு மணி நேரமும் அடக்கத்தை காவல் செய்ய வேண்டும்.
மூன்றாவது,
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
அடங்குதலே அறிவான செயல் என்று அறிந்து அடங்கி இருப்பவனின் பெருமை நல்லோர்களால் அறியப்பட்டு அது அவனுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.
நான்காவது,
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
தன்னுடைய நிலையில் இருந்து பிறழாமல் இன்பங்களை அனுபவித்து, பின் அவை போதும் என்று அடங்கியவனின் பெருமை மலையை விடப் பெரியது என்றார். .
இங்கே ஒரு செய்தி சொல்ல மறந்து விட்டேன்.
உயர் வேண்டும் என்றால் அடங்கு என்கிறார். இது கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறது அல்லவா. அடங்கினால் உன் பெருமை மலை போல் உயரும் என்கிறார். நாம் இதற்கு எதிர் மறையாக சிந்திப்போம், செய்வோம். நாமே நம் பெருமை சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி அறிவார்கள், சொல்வார்கள் என்று முடிந்தவரை சுய விளம்பரம் செய்ய முயற்சி செய்வோம். அது தவறு. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிலைத்து நிற்காது.
அடங்கினால் உயரலாம் என்பது ஆழமான கருத்து.
அடங்கினால் எப்படி உயர முடியும்?
இராமாயணத்தில், அனுமன் தன்னைப் பற்றி இராமனிடம் கூறும் போது, "எங்கள் அரசன் சுக்ரீவனுக்கு ஏவல் கூவல் பணி செய்வேன்" என்கிறான். அவன் வகிப்பதோ மந்திரி பதவி. அவன் அறிவும், ஆற்றலும் அளவிட முடியாதது. இருந்தும், ஏதோ எடுபிடி வேலை செய்கிறவன் என்று தன்னைத் தாழ்த்திச் சொல்கிறான்.
பதினாலாயிரம் பாடல் எழுதிய கம்பன், தன் இலக்கியத்தை ஏதோ சிறு பிள்ளை கிறுக்கியது மாதிரி என்கிறான்.
ஞான மார்கத்தில் உச்சம் தொட்ட மணிவாசகர் "நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு" என்று தன்னை நாயினும் கீழாக சொல்லிக் கொள்வார்.
இவர்கள் உயரவில்லையா? அவர்கள் அவ்வளவு பணிவோடு இருக்கிறார்கள் என்றால் நாம் எவ்வளவு இருக்க வேண்டும் ?
ஐந்தாவது,
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றில் கல்வியும் குலமும் அடக்கத்தை தானே போதிக்கும். செல்வம் அவ்வாறு போதிக்காது. செல்வம் இருப்பவன் தானே அறிந்து அடங்காவிட்டால் தன் செல்வ மமதையால் தவறான வழிகளில் செல்வத்தை விரயம் செய்து அழிந்து போவான். அடக்கமாக இருந்தால், அவன் செல்வம் அவனிடமே இருப்பது மட்டும் அல்ல, அது மேலும் பெருகும். இன்னொரு செல்வம் வந்த மாதிரி.
சிலப்பதிகாரத்தில் கோவலனிடம் கோடி கோடியாக செல்வம் இருந்தது. புலனடக்கம் இல்லை. அது அவனை எந்த அளவு துன்பத்தில் ஆழ்த்தியது?
சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் வடிவேலுக்கு அவன் பாட்டி இறந்த காப்பீட்டு தொகையாக மூன்று இலட்சம் கிடைக்கும். அவனிடம் இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி அவன் கூட இருப்பவர்கள் அவனைப் புகழ்வார்கள். அவனும் அதில் மயங்கி, இருக்கின்ற பணத்தையெல்லாம் வட்டிக்கு விட்டு அனைத்தையும் இழப்பதாக கதை. செல்வம் வரும் போது அடக்கம் வராவிட்டால் எல்லாம் போய் விடும். சில சமயம் கடனில் கூட தள்ளிவிடும்.
மேற் சொன்ன ஐந்து குறள்களில் அடக்கத்தின் சிறப்பு கூறினார். ஏன் அடக்கமாக இருக்க வேண்டும், அதனால் வரும் நன்மை என்ன என்று கூறினார்.
ஆறாவது,
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஆபத்து வரும் போது ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொல்வதைப் போல, புலன்கள் தவறான வழியில் செல்லத் தலைப்பட்டால், அவற்றை நம் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர வேண்டும். சாரதி கையில் வண்டி இருக்க வேண்டும். குதிரை இழுக்கும் பக்கம் எல்லாம் போகக் கூடாது.
இங்கே மெய் அடக்கம் பற்றி கூறினார்.
ஏழாவது,
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
எல்லா புலன்களையும் கட்டுப் படுத்துவது நல்லது. அப்படி முடியாவிட்டால், நாக்கு ஒன்றையாவது கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். இல்லை என்றால் துன்பத்திற்கு துணையாக போக வேண்டி வரும்.
எட்டாவது,
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
எவ்வளவு தான் நல்லவை சொன்னாலும், ஒரே ஒரு தீயச் சொல் முன் செய்த அத்தனை நன்மைகளையும் அழித்து விடும். தீய சொல் என்பது சொல்லும், பொருளும் சேர்ந்த ஒன்று. சில சமயம் சொல் இனிதாக இருக்கும், பொருள் தீமையாக முடியும். மற்ற சில சமயங்களில் பொருள் இனிதாக இருக்கும், சொல் தீச் சொல்லாகப் போய் விடும். இரண்டுமே சரியாக இருக்க வேண்டும்.
ஒன்பதாவது,
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
தவறான ஒரு சொல்லினால் ஒருவர் மனம் வருந்தினால், அந்த வருத்தம் வடு போல மாறாது என்றும் நிற்கும். எனவே, கோபம், எரிச்சல் என்று வரும் போது அவசரத்தில், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
ஏழு, எட்டு, ஒன்பது என்ற மூன்று குறள்களில் நாவடக்கம் பற்றி கூறி இருக்கிறார்.
மெய் அடக்கத்திற்கு ஒரு குறள் சொன்ன வள்ளுவர், நாவட்டக்கதுக்கு மூன்று குறள்கள் சொல்லி இருக்கிறார். அதில் இருந்தே தெரிகிறது அல்லவா, நாவடக்கம் எவ்வளவு முக்கியம் என்று.
இறுதியாக பத்தாவது குறளில், மன அடக்கம் பற்றிக் கூறுகிறார்.
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
கோபத்தை அடக்கி, கற்று, அடங்கியவனின் இனிய முகம் பார்க்கும் காலத்தை எண்ணி அறக் கடவுள் அவன் வரும் பாதை பார்த்து நிற்கும் என்கிறார்.
கோபத்தை காப்பது, கற்பது, அடங்குவது என்பதெல்லாம் மனதின் வேலைகள். எனவே அது மன அடக்கம் ஆயிற்று.
இனி அடுத்த அதிகாரத்துக்குள் செல்லலாம்.
வழக்கம் போல் கேட்பது தான்.
தொடர்ந்து மேல் செல்வோமா அல்லது கொஞ்சம் இடை வெளி விடுவோமா ? தொடர்ந்து படிப்பது என்றாலும் சற்று சலிப்பாகவும், ஆயாசமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. .
பரிமேல் அழகரின் உரையை எளிமை படுத்தி சுவாரஸ்யமாக ஒரு ஒரு குரளாக நீங்கள் விளக்க எங்களுக்கு எது ஆயாசம்? ஆனந்த பாக்கியம் மட்டும் தான். மிக்க நன்றி!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteசிறப்பான விளக்கங்கள்.
ReplyDelete