Pages

Saturday, May 14, 2022

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர்

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர் 


நீண்ட தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு இரயிலில் போகிறோம். போகிற தூரம் எவ்வளவு என்று தெரியாது.  எப்போது போய்ச் சேருவோம் என்று தெரியாது. ஆனால், போகிற வழியில் எவை எவை வரும் என்று தெரியும். வழியில் உள்ள ஊர்கள் பெயர் தெரியும். அங்கு என்ன விசேடம் என்று தெரியும். இந்த ஊர் வந்து விட்டால், அடுத்து என்ன ஊர் வரும் என்று தெரியும். 


"ஓ, இந்த ஊர் வந்துருச்சா, இங்க முறுக்கு நல்லா இருக்கும். அடுத்து அந்த ஊர் வரும், அங்கே அல்வா நல்லா இருக்கும்," என்று நமக்குத் தெரியும். 


இது நாம் அனுபவதில் கண்டது தானே?


சில சமயம் இரவு இரயிலில் போவோம். வண்டியில் ஏறிய சில நிமிடங்களில் தூங்கிப் போய் இருப்போம். அதி காலை. எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. வண்டி பாட்டுக்கு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. வெளியே நல்ல இருட்டு. இன்னும் முழுவதும் விடியவில்லை. 


இரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே இருக்கிறோம். சட்டென்று ஒரு சின்ன இரயில் நிலையம் வருகிறது. வண்டி நிற்காமல் போனாலும், அது எந்த ஊர் என்று வாசித்து விடுகிறோம். 


"அடடா, இந்த ஊர் வந்தாச்சா, அப்படினா நாம இறங்குற இடம் இன்னும் அரை மணியில் வந்து விடும் " என்று அரக்க பறக்க சாமான்களை அள்ளி எடுத்துக் கொண்டு இரயில் பெட்டியின் வாசலுக்கு அருகில் வந்து நிற்போம் அல்லவா? இறங்கத் தயாராக இருப்போம் அல்லவா.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்கை என்ற இரயில் பயணம் சென்று கொண்டே இருக்கிறது. .


நடு நடுவே ஊர்கள் வருகின்றன. 


ஒரு நாள் முடி நரைக்கிறது. அது ஒரு ஊர். 


பல் சொத்தை விழுகிறது. அது ஒரு ஊர். 


தோலில் கொஞ்சம் சுருக்கம் வருகிறது. அடுத்த ஊர். 


சமீபத்தில் கேட்டது, படித்தது நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. மறந்து போய் விடுகிறது.  அடுத்த ஊர். 


முன்ன மாதிரி வேகமா நடக்க முடியல. ஓட முடியல. மூச்சு வாங்குது. அடுத்த ஊர். 


இப்படி ஒவ்வொரு ஊராக வர வர...நாம் இறங்கும் இடம் நெருங்கி விட்டது என்று அறிய வேண்டாமா?


மூட்டை முடிச்சை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாராக வேண்டாமா? 


நான் செல்லும் ஊர் வரவே வராது என்று யாராவது இருப்பார்களா? 


பாடல் 


ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்

கோடுகின்றார்; மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_14.html


(Please click the above link to continue reading)



ஓடுகின்ற = வேகமாக ஓடுகின்ற 


நீர்மை = தன்மை. பத்து வயது பையன் ஓடுவான். என்பது வயது ஆள் ஓட முடியமா? 


 சேத்திரத் திருவெண்பா இது போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்டது. மூல நூலை தேடிப் படியுங்கள். நான் சொன்னதற்கு மேலேயும் உங்களுக்கு பல விடயங்கள் புலப்படலாம். 



ஒழிதலுமே = ஒழிந்து போய் விடும். ஓட முடியாத காலம் ஒன்று வரும். 


உற்றாரும் = உறவினர்களும் 


கோடுகின்றார் = கோடுதல் என்றால் வளைதல். நேராக இருந்த அவர்கள் இப்போது வேறு மாதிரி இருக்கிறார்கள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை" 


மூப்புங் குறுகிற்று = மூப்பு அருகில் வந்து விட்டது. நமக்கு எங்கே மூப்பு வரும் என்று இருந்தோம். இப்போது அருகில் வந்து விட்டது. 


நாடுகின்ற = போகின்ற 


நல்லச்சிற் றம்பலமே = இங்கே கொஞ்சம் சீர் பிரிக்க வேண்டும். நல் + அச்சு + இற்று + அம்பலமே என்று. நல்ல அச்சு என்றால் தேரின் பளுவை தாங்கும் அச்சாணி. இங்கே, இந்த உடம்பைக் குறிக்கும். இற்றுப் போதல் என்றால் உடைந்து போதல். உடம்பு தளர்ந்து போகும். நல் அச்சு இற்றுப் போய் விட்டால் தேரைக் கொண்டு போய் அது இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அது இனி நகராது. அது போல, உடம்பு இற்றுப் போய் விட்டால் இந்த உடம்பை எங்கு போய் வைப்பது? அது தான் அம்பலம். பொதுவான இடம். எது? சுடுகாடு. எல்லோருக்கும் பொதுவான இடம். 


 நண்ணாமுன் = அங்கே போய்ச் சேரும் முன் 


நன்னெஞ்சே = நல்ல நெஞ்சே 


தில்லைச்சிற் றம்பலமே சேர். = தில்லை சிற்றம்பலேமே சேர் 


சொல்லும் பொருளும் அவ்வளவுதான். 


கொஞ்சம் இலக்கணம் படித்தால் பாடலை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். 


முயற்சி செய்வோம். 


"உற்றாரும்" என்பதில் உள்ள 'ம்' உயர்வு சிறப்பு உம்மை. உற்றார் கோடுகின்றார்  என்று சொல்லி இருக்கலாம். உற்றாரும் கோடுகின்றார் என்று சொல்வதன் மூலம், அவர்களே மாறிப் போனால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள் என்று யோசித்துக் கொள் என்கிறார். மனைவி, கணவன், பெற்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற உற்றார்களே குணம் மாறிப் போவார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் எப்படி மாறுவார்கள்? 


"மூம்பும் குறிகிற்று" : இங்கும் 'ம்' முற்றும்மை. அதாவது மூப்பு வந்து விட்டது என்றால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தம். இனி வருவதற்கு ஒன்றும் இல்லை. விழாவுக்கு அந்த ஊர் MLA வந்தார், ஆட்சியாளர் (கலெக்டர்) வந்தார், ஜனாதிபதியும் வந்திருந்தார் என்றால் எல்லாரும் வந்தாகிவிட்டது என்று அர்த்தம். மூப்பும் வந்து விட்டது. 


"நல்லச்சிற் றம்பலமே" : நல் அச்சு இற்று அம்பலமே. இங்கே அம்பலமே என்பதில் உள்ள ஏகாரம் ('ஏ') பிரி நிலை ஏகாரம். மற்றவற்றில் இருந்து பிரித்து காட்டுவது. 'இல்லை எனக்கு சுடுகாட்டுக்குப் போக பயமாக இருக்கிறது. அங்கே போகப் பிடிக்கவில்லை ...நான் போக மாட்டேன்" என்றெல்லாம் சொல்ல முடியாது. அம்பலமே கதி. வேற வழியே இல்லை. 


'சிற்றம்பலமே சேர்' என்பதில் உள்ள ஏகாரம் இன்னொரு பிரிநிலை ஏகாரம். வேற எங்கேயாவது போயிராத. தில்லை சிற்றம்பலதுக்கே போ. வேற இடம் ஒன்றும் இல்லை. 


"மூப்பும் குறுகிற்று" என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிய உம்மை. தேர்வு எப்படி எழுதி இருந்தாய் என்ற கேள்விக்கு "முதல் பரிசும் வாங்கி விட்டேன்" என்று சொன்னால், அதற்கு முன் எழுதிய தேர்வு நன்றாக எழுதி இருந்தேன் என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா. முதலில் நடந்தது தேர்வு எழுதியது. அது இறந்த காலம். முதல் பரிசு வாங்கியது அதற்குப் பின் நிகழ்ந்தது. பின் நடந்த ஒன்றில் 'ம்' சேர்த்துச் சொன்னால் அது முன் நடந்ததையும் சேர்த்து கொண்டு வரும். மூப்பும் குறுகிற்று என்றால் இளமை போய் விட்டது என்று அர்த்தம் தானே விளங்கும். 



இலக்கணம் படிக்க படிக்க பாடல்களின் அழகும் ஆழமும் மேலும் தெரிய வரும். 


இன்றைக்கே போய் ஒரு நல்ல இலக்கண நூலை வாங்கிப் படிக்கத் தொடங்குகள், இதுவரை படிக்காமல் இருந்தால்.  உங்கள் இரசனை மேம்படும். 

1 comment:

  1. எல்லாப் பாடல்களுக்குமான உங்களது விரிவான விளக்கங்கள் மிக அருமை.

    ReplyDelete