திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - முன்னுரை
அடக்கம் உடைமை என்ற அதிகாரத்துக்குப் பின் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர்.
ஏன்? அது என்ன முறை?
எவன் ஒருவன் தன் புலன்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்கிறானோ அவனால்தான் ஒழுக்கம் பேண முடியும் என்பதால் முதலில் அடக்கம் உடைமை பற்றி கூறி பின் ஒழுக்கம் உடைமை பற்றிக் கூறுகிறார்.
பாலாகட்டும், இயலாகட்டும், அதிகார முறைமையாகட்டும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு. தர்கரீதியாக, ஒரு ஆற்றோட்டம் போல் எழுதிக் கொண்டு சென்றால் மனதில் எளிதில் நிற்கும்.
ஒழுக்கமா, அடக்கமா எது முதலில் வரும் என்று கேட்டால் இப்போது எளிதாகச் சொல்லி விடலாம். முதலில் புலன் அடக்கம், பின் ஒழுக்கம் என்று.
முதலில் ஒழுக்கம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_15.html
(click the above link to continue reading)
ஒழுக்கம் என்றால் அற வழியில் நடத்தல், உயர்ந்த நூல்கள் கூறிய சிறந்த நெறி முறைகளை கடைபிடித்தல் என்று நாம் அறிவோம்.
சிக்கல் என்ன என்றால், இந்த அறம் இருக்கிறதே அது என்ன என்று எங்கும் முழுவதுமாகச் சொல்லப் படவில்லை. அறங்களை எல்லாம் தொகுத்த ஒரு புத்தகம் இல்லை. அங்கங்கே கோடி காட்டப் படுகிறது. அவ்வளவுதான்.
மேலும், இந்த நூல்களில் சொல்லப்பட்டவை மட்டும்தான் அறமா என்றால் இல்லை. நூல்கள் ஓரளவு எடுத்துச் சொல்லும். அறம் மிகப் பெரியது. ஒரு நூலில் ஓரிரு அறங்களை சொல்வதே மிகக் கடினம். எல்லா அறத்தையும் ஒரு நூலில் சொல்வது என்பது முடியாத காரியம்.
மேலும், எத்தனையோ நூல்கள் நம் கைக்கு கிடைக்காமலேயே போய் விட்டது. அதில் உள்ள அறங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியாது.
மேலும், அத்தனை நூல்களையும் படித்து அதில் உள்ள அறங்களை பட்டியல் இட முடியுமா நம்மால்? ஒரு வாழ்நாள் போதாது.
மேலும், ஒருவேளை எல்லா நூல்களும் கிடைத்து, அவற்றை எல்லாம் நாம் படித்து, அதில் கூறிய அறங்களை எல்லாம் பட்டியல் இட்டுவிட்டோம் என்றே வைத்துக் கொள்வோம், பட்டியல் இருக்கிறது என்பதற்காக அவை எல்லாம் புரிந்து விடுமா? ஒரு சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சர்ச்சைகள் நடக்கின்றன. அத்தனை அற நூல்களில் உள்ள அறமும் தெளிவாக புரிந்து விடுமா?
மேலும், புரிந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம், அவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றம் என்று ஆகும். என்ன செய்வது?
அப்படி என்றால் ஒழுக்கமாக வாழவே முடியாதா?
முடியும். இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம்.
ஒழுக்கம் என்ற சொல், ஒழுகுதல் என்பதில் இருந்து வந்தது.
வீட்டில் கூரை சரி இல்லை என்றால் நீர் ஒழுகி கீழே வரும். எங்கே ஒழுகினாலும் அது கீழேதான் வரும். எங்காவது ஏதாவது திரவம் ஒழுகி கீழ் இருந்து மேலே செல்வதை கண்டு இருகிறீர்களா? இல்லையே?
ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது. மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல்.
நம்மால் எல்லாவற்றையும் படித்து, தெளிய முடியாது. நம்மை விட உயர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழி நடந்து விட்டுப் போவது எளிய வழி.
இரண்டாவது, ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து வர வேண்டும். இப்போதெல்லாம் என்ன ஆகி விட்டது என்றால், கீழே உள்ளவர்களிடம் இருந்து உலகம் படிக்கத் தொடங்கி இருக்கிறது.
உதாரணம் சொன்னால் கூட ஏன் அதில் என்ன தவறு என்று சண்டைக்கு வருவார்களோ என்று ஐயமாக இருக்கிறது. எதுவும் சரி என்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.
மது அருந்துவது, போதை பொருட்களை உட்கொள்வது ஒழுக்கம் அற்ற செயல் என்று வைத்துக் கொள்வோம். எங்கோ ஒருவன், மது அருந்தினால் என்ன? நன்றாகத் தானே இருக்கிறது? மது அருந்துவது என்பது தனி மனித சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று வாதம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
இன்று உலகம் என்ன செய்கிறது என்றால், அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுகிறது. உடையை கிழித்து அணிந்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தன் உடையை தானே கிழித்துக் கொண்டு, அப்படி கிழிந்த உடையை அணிந்து கொண்டு செல்பவனை நம் சமுதாயம் பைத்தியம் என்று கூறியது. இன்று அது ஒரு நாகரீகமாகி விட்டது.
நான் சரி தவறு என்று வாதம் செய்யவில்லை. நாம் யாரிடம் இருந்து படிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், ஒழுகுதல், சொட்டுதல், தெறித்தல் என்றெல்லாம் இருக்கிறது. ஒழுகுதல் என்றால் இடை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது.
ஒழுக்கம் என்பதும் அப்படித்தான். இடைவிடாமல் கடைசிவரை கடைபிடிக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் புலால் உண்பது இல்லை, ஒரு நாள் மது குடிப்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, வெள்ளி செவ்வாய் பொய் சொல்வது இல்லை, என்பதெல்லாம் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் என்றால் இறுதிவரை கைகொள்ள வேண்டும்.
உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்றதை இறுதிவரை அந்தப் பாதையில் செல்வதை ஒழுக்கம் என்கிறோம்.
இராமன் என்ன செய்தான், தர்மன் என்ன செய்தான், கண்ணப்பன் என்ன செய்தான், என்று உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்று அதன் படி வாழ்வது.
நம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களுக்கா பஞ்சம்? நாம் அவர்களை விட்டு விட்டு நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அற நூல்களில் சொல்லியவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்றலாம். மாற்ற வேண்டும். 'நிற்க அதற்கு தக' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார். ஆனால், யார் மாற்றுவது என்பதில் தான் சிக்கல்.
உயர்ந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்தவர்கள், சமுதாய அக்கறை உள்ளவர்கள், எதிர்கால சந்ததி பற்றி சிந்திப்பவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை தேடிப் பிடித்து அவர்கள் சொல்வதை கேட்டு, அதன் படி வாழ்வதுதான் ஒழுக்கம்.
முன்னுரை சற்று நீண்டு விட்டதால், அதிகாரத்துக்குள் நாளை செல்வோம்.
No comments:
Post a Comment