மூத்த திருப்பதிகம் - அங்கம் குளிர்ந்து அனலாடும்
பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இறைவன் புகழ் பாடும், நிலையாமை பற்றிக் கூறும், வீடு பேறு பற்றிப் பேசும், இறைவன் அருள் வேண்டி உருகும், அடியவவ்ர்களின் பெருமை பேசும்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதுதான் நான் அறிந்தது.
காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களைப் படிக்கும் போது ஒரு மின்சாரம் தாக்கிய அதிர்ச்சி.
இந்தப் பாடல்களுக்கு என்ன அர்த்தம் (சொற்களின் அர்த்தம் அல்ல), இது எப்படி சாத்தியம், இதனால் நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்று அம்மையார் விரும்புகிறார், அவர் சொல்ல வந்தது என்ன என்று ஆயிரம் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
முதலில் அறுப்பது மூவரில் ஒரே ஒரு பெண் காரைக்கால் அம்மையார்.
பெண் என்றால் நம் மனதில் அன்பு, பாசம், தாய்மை, மென்மை, பொறுமை , கருணை, தியாகம் இவை போன்றவைதான் தோன்றும்.
அடுத்தது, வழிபாடு என்றால் வழிபடும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும், பூ, சந்தனம், குங்குமம், ஊதுபத்தி போன்ற மங்களகரமான பொருட்கள் இருக்க வேண்டும்.
அமைதியாக இருக்க வேண்டும். இறைவன் மேல் பக்திப் பாடல்கள் ஒலிக்க வேண்டும்
அங்கே உள்ளவர்கள் மனதில் ஒரு பக்தியோடு அந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.
இது தானே நாம் அறிந்த ஒன்று. இதில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம். கோவில்களில் மேளம், நாதஸ்வரம் போன்ற இன்னிசைக் கருவிகள் ஒலிக்கலாம்.
காரைக்கால் அம்மையார் காட்டும் சூழலைப் பாருங்கள்.
இடம் - சுடுகாடு
கூட இருப்பவர்கள் - பேய்கள்
சப்தம் - பேய்களின் அலறல் சப்தம்
இறைவன் - சிவ பெருமான் தலையை விரித்துப் போட்டு கையில் தீயோடு ஆடுகிறான்.
அதிலும் பேய் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போகவில்லை.
"மார்பகங்கள் மெலிந்து, நரம்புகள் திரண்டு எழுந்து, ஆழமான ஓட்டைக் கண்கள், ஈ என்று சிரிக்கும் போது வெளிறிய, நீண்ட பற்கள், குழி விழுந்த வயிறு, சிக்கு பிடித்த முடி, இடு காட்டில் அலறும் பெண் பேய் ...அப்படிப் பட்ட காட்டில் கையில் அனல் ஏந்தி அங்கங்கள் குளிர ஆடும் சிவன்"
என்கிறார்.
பக்தி வருகிறதா? பயம் வருகிறது.
இது ஏதோ ஒரு திகம்பர சாமியார் பாடினார் என்றால் கூட ஒரு மாதிரி நாம் ஜீரணித்துக் கொள்ள முடியும். ஒரு பெண் பாடினார் என்பதை எப்படிப் பார்ப்பது.
இந்து சமயத்தில் பெண்களை சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதே இல்லை.
ஒரு பெண் சுடுகாட்டில், பேய்களுக்கு மத்தியில் என்பதை நம்மால் சிந்திக்கக் கூட முடியவில்லை.
பாடல்
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_17.html
(Please click the above link to continue reading)
கொங்கை = மார்பகங்கள்
திரங்கி = வற்றி, மெலிந்து
நரம்பெ ழுந்து = நரம்புகள் புடைத்து எழுந்து
குண்டு கண் = குழி விழுந்த கண்கள் (குண்டும் குழியுமாக இருக்கிறது என்றார் போல்)
வெண்பற் = வெண்மையான பற்கள்
குழிவ யிற்றுப் = குழி விழுந்த வயிறு
பங்கி = தலை முடி
சிவந்து = எண்ணெய் இல்லாமல் செம்படையாக சிவந்து வறண்ட முடி
இரு பற்கள் நீண்டு = இரண்டு கோரைப் பற்கள் நீண்டு வெளியே தெரிய
பரடுயர் = குதிங்கால் உயர்ந்து
நீள்கணைக் கால் = நீண்ட கால்
ஓர் பெண்பேய் = ஒரு பெண் பேய்
தங்கி யலறி யுலறு காட்டில் = தங்கி அலறி உலரும் காட்டில்
தாழ்சடை = விரித்த சடை தரை வரை தாழ்ந்து இருக்கிறது
எட்டுத் திசையும் வீசி = அந்த முடியை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்து = அங்கங்கள் குளிர்ந்து
அனலாடும் = கையில் தீயை ஏந்தி ஆடும்
எங்கள் = எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே. = அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே
மற்ற பேய்கள் எல்லாம் எங்கோ ஓடி விட்டனவாம். இந்த ஒரு பெண் பேய் மாத்திரம் தனித்து இருப்பதால், மற்ற பேய்கள் எங்கே என்று அலறிக் கொண்டு ஓடுகிறதாம்.
இது ஒரு வித்தியாசமான பக்திப் பாடல்.
நாம் மனதில் கொண்ட பிம்பத்தை கலைத்துப் போடும் பாடல்.
சிந்திக்க சிந்திக்க ஒன்றும் புலப்பட மாட்டேன் என்கிறது.
பக்தி என்பது இறைவனை எங்கும் காண்பது, கோவிலில் மட்டும் அல்ல என்று சொல்ல வருகிறாரா ? அல்லது
பயம் நம்மை சுருங்க வைக்கிறது. பயம் இருந்தால் நம்மால் எதையும் முழுவதுமாக அறிய முடியாது. அங்கே பாம்பு இருக்கிறது என்றால் அந்தப் பக்கமே போக மாட்டோம்.
பயங்களில் மிகப் பெரிய பயம் மரண பயம். பல பேர் மரணம் என்ற சொல்லைக் கூட சொல்லப் பயப்படுவார்கள். எதுக்கு அமங்கலமா பேசிக்கிட்டு என்று முகம் சுளிப்பார்கள்.
பயம் இருக்கும் வரை நம் சிந்தனையில் தெள்வு இருக்காது. பயம் என்ற கண்ணாடி மூலமே நாம் உலகைப் பார்ப்போம்.
எதிகாலம் பற்றிய பயம், எனவே செல்வம் சேர்க்க வேண்டும்.
உடல் நிலை பற்றிய பயம்,எனவே அதற்கு வேண்டியதைச் செய்வது.
உறவுகள் பற்றி பயம். எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும்.
அரசாங்கம் பற்றி பயம். ஏதாவது சொன்னால் வம்பு வந்து விடுமோ என்ற பயம்.
பயம் நம்மை சுருங்க வைக்கிறது.
பயத்தை உதறினால் அல்லது நம்மால் வாழ்வை, உண்மையை தரிசிக்க முடியாது என்பதானால் "இங்கே வா, சுடுக்காட்டுக்கு என் கூட வா, பேயைக் காட்டுகிறேன்...முதலில் பயம் வரும். பின் பயம் தெளியும், இறை தரிசனம் கிட்டும்" என்று காட்ட நம்மை அழைத்துச் செல்கிறாரா?
தெரியவில்லை.
சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்.
குருவருள் துணை புரிய வேண்டும், இதைப் புரிந்து கொள்ள.
No comments:
Post a Comment