யாப்பிலக்கணம் - எதுகை, மோனை
ஒரு புலவருக்கு எது கை தவறினாலும் எதுகை தவறக் கூடாது என்பார்கள்.
எதுகை என்றால் என்ன?
ஒரு பாடலில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வந்தால் அது எதுகை.
சில உதாரணங்கள் பார்ப்போம்:
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
என்ற அபிராமி அந்தாதியில்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_30.html
(pl click the above link to continue reading)
உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற
என்று ஒவ்வொரு அடியிலும் முதல் சீரில் இரண்டாவது எழுத்து 'தி' என்று வருகிறது அல்லவா, அது எதுகை.
ஒவ்வொரு அடியிலும் அது வருவதால், அது 'அடி எதுகை' எனப்படும்.
ஒவ்வொரு சீரிலும் வந்தால் அது சீர் எதுகை எனப்படும். அதில் பல வகை இருக்கிறது.
முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்
முதல் சீர் ம் மற்றும் மூன்றாம் சீர்
முதல் மற்றும் நான்கு
என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் இருக்கிறது.
ஒரு பாடலில் ஒவ்வொரு சீரிலும் எதுகை வந்தால் அது முற்றெதுகை எனப்படும்.
மாறாக, இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல், மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தால் அதற்கு மோனை என்று பெயர். அது முதல் எழுத்தாக இருக்கலாம், மூன்றாம் எழுத்தாக இருக்கலாம்...எந்த எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
இதில் கற்க, கசடற, கற்பவை, கற்றபின் என்ற சீர்களில் 'க' என்ற முதல் எழுத்து ஒன்றி வருகிறது. எனவே அது மோனை.
எதுகையைப் போலவே இதிலும் அடி மோனை, சீர் மோனை என்று உண்டு.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
என்ற பாடலில் து என்ற முதல் எழுத்து ஒன்றி வருவதால் அது மோனை, 'ப்' என்ற இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதால் அது எதுகை.
இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்து அளவோடு இருக்க வேண்டும்.
உதாரணமாக
ஆட்டம்
பாட்டம்
என்று வந்தால் அது எதுகை.
ஆட்டம்
பட்டம்
என்று வந்தால் அது எதுகை இல்லை.
ஒலியின் இனிமை குறைகிறது அல்லவா?
கூட்டம், வாட்டம் - எதுகை
கூட்டம், வட்டம் - எதுகை இல்லை
எதுகை மோனை வரும் போது பாடலுக்கு ஒரு இசை நயம் வரும். கீழே உள்ள பாடலை படித்துப் பாருங்கள். ஒரு தாள இலயம் தெரிகிறது அல்லவா?
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அஞ்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும் என்று இல்லை.
ஒரு எழுத்துக்கு இன எழுத்தும் எதுகை மோனையாக வரலாம்.
அது என்ன இன எழுத்து என்று அடுத்த பதிவில் காணலாம்.
அதுவரை, நீங்கள் இரசித்த எதுகை மோனை உள்ள பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரசியமாக இருக்கும்.
சேர்ந்து படிப்போமே....அதுவும் ஒரு சுகம்தான்.
No comments:
Post a Comment