திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 2
பாடல்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_31.html
(pl click the above link to continue reading)
நன்றிக்கு = நன்மைக்கு
வித்தாகும் = விதையாகும்
நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம்
தீயொழுக்கம் = தீய ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும்.
இதில், நன்றிக்கு வித்தாகும் என்ற தொடரில் வித்து (விதை) எப்படி பலவாக பிரிந்து பலன் தருமோ அது போல நல்ல ஒழுக்கமும் பலன் தரும் என்ற இடத்தில் முந்தைய பதிவை நிறுத்தி இருந்தோம்.
எப்படி என்று பார்ப்போம்.
வீட்டில் ஒரு பிள்ளை தினம் தோறும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் படிக்கிறான். அது அவனது ஒழுக்கம். அதனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலை கிடைக்கிறது.
அது அவனுக்கு கிடைத்த பலன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றால் அவன் பிள்ளைகளுக்கு அது உதவும் அல்லவா? அவன் பேரப் பிள்ளைகளுக்கு உதவும் அல்லவா?
அவன் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறானோ அது நன்றாக வளரும். அதில் முதலீடு செய்தவர்கள் பலன் பெறுவார்கள்.
அந்த நிறுவனம் வளரும் போது அங்கு வேலை செய்யும் மறவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் பலன் பெறுவார்கள்.
மேலும், நிறுவனம் வளரும் போது மேலும் பலருக்கு வேலை கிடைக்கும்.
மேலும், அந்த நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் அரசுக்கு வருமான வரி, விற்பனை வரி கிடைக்கும். அந்தப் பணம் ஏழைகளுக்கு பல விதங்களில் பயன் படும் அல்லவா?
ஒரு ஒழுக்கம். ஒருவனிடம் இருந்தால் அதன் பலன் எப்படி பல்கி பெருகுகிறது என்று கவனிக்க வேண்டும்.
சரி, நல்ல ஒழுக்கம் இப்படி பெருகுகிறது என்றால் தீய ஒழுக்கமும் அப்படித் தான் பெருகும். ஒருவன் ஒரு தீமை செய்கிறான் என்றால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் குடும்பம், சுற்றம், நட்பு என்று எல்லோரையும் பாதிக்கும்.
ஒரு தவறுதானே என்று நாம் நினைக்கலாம். முதலில் அப்படித்தான் ஆரம்பிக்கும். பின் பழக்கமாகிவிடும். அதுவே ஒழுக்கமாகிவிடும். பின் தீராத துன்பத்தைத் தரும்.
இராவணன் செய்த ஒரு ஒழுக்கக் குறைவான செயல் அவன் மட்டிலுமா நின்றது? அரக்கர் குலத்தையே வேர் அறுத்தது அல்லவா? அதோடு போயிற்றா, இன்று வரை அவனை ஒழுக்கம் குறைந்தவனாகத் தான் நாம் நினைக்கிறோம். ஒரு நாளும் அந்தப் பழி போகாது.
இதில் பரிமேலழகர் ஒரு நுட்பம் செய்கிறார்.
"என்றும் இடும்பைத் தரும்" என்பதில் உள்ள "என்றும்" என்ற சொல்லைப் பிடித்துக் கொள்கிறார்.
என்றும் என்றால் எதுவரையில் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, இந்த பிறவி மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகள் தோறும் தொடரும் என்கிறார்.
சற்றே விரித்துப் பார்ப்போம்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்பது வள்ளுவம். .
ஒரு பிறவியில் கற்ற கல்வி, ஏழு பிறவிக்கு தொடரும் என்பது கருத்து. அது போல, ஒரு பிறவியில் கொண்ட தீய ஒழுக்கம், "எப்போதும்" துன்பத்தைத் தரும்.
நரகத்தில் கிடந்து அல்லல் பட வேண்டி வரும்.
மறு பிறப்பில் துன்பம் வந்து சேரும்.
அது மட்டும் அல்ல, தீய ஒழுக்கம் உள்ளவனை அவன் காலத்துக்குப் பின்னும் மக்கள் ஏசிக் கொண்டே இருப்பார்கள்.
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனை இன்றும் நாம் நிந்திக்கிறோம் அல்லவா? என்றும் இடும்பை தந்து கொண்டு இருக்கிறது அல்லவா?
கட்டபொம்மன் என்றோ இறந்து விட்டான். இன்றும் அவன் பெயரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி, இறங்குங்கள் என்று தான் சொல்கிறார்கள். இன்றும் கருவுற்ற தாய்மார்கள் அவன் தூக்கில் இடப்பட்ட இடத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணை ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கட்டபொம்மன் மாதிரி வீரனாக பிறக்க வேண்டும் என்ற ஆசையில்.
இன்றும் புகழ் சேர்கிறது அல்லவா?
என்றும் என்பதற்கு "இம்மைக்கும், மறுமைக்கும்" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர்.
தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும். .
நல்லொழுக்கம் என்றும் நன்மை தரும்.
வித்து, என்றும் என்ற இரண்டு வார்த்தைககளில் எவ்வளவு அர்த்தங்களை பொதித்து வைத்து இருக்கிறார் வள்ளுவர்.
No comments:
Post a Comment