Pages

Tuesday, July 5, 2022

திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை

 திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை 


'பிறனில் விழையாமை' என்ற அதிகாரம் பற்றி சிந்தித்தோம். 


அதற்கு அடுத்து பொறையுடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


பொறை என்றால் பொறுமை. பொறையுடைமை என்றால் பொறுமையுடன் இருத்தல். 


பொறுமை இல்லாமல் நாம் செய்யும் சில காரியங்கள் எவ்வளவு பெரிய சிக்கல்களில் கொண்டு போய் விடுகின்றன. 


பொறுமை இழந்து ஒரு சொல் சொல்லி விடுவோம். பின் வாழ்நாள் எல்லாம் அதை நினைத்து வருந்துவோம். 


அது போல்தான் சில செயல்களும். அந்த ஒரு நொடியில் பொறுமை இழந்து பொறுக்க முடியாமல் ஒன்றை செய்துவிட்டு ஆயுள் முழுவதும் வருந்துவோம். 


வீட்டில் மட்டும் அல்ல. வெளியிலும், அலுவலகத்திலும், அக்கம் பக்கத்தில், சமூக பெரு வெளியில் பொறுமை தவறும் சமயங்கள் வரலாம். 


பொறுமை இழந்து நீங்கள் சொன்ன அல்லது செய்த காரியம் ஏதாவது ஒன்று நல்லதாக் முடிந்து இருக்கிறதா? 


இந்த அதிகாரத்தை ஏன் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்துக்குப் பின் வைக்க வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_5.html


(pl click the above link to continue reading)



ஒருவனுக்கு உச்ச பச்ச கோபம் எப்போது வரும்? எப்போது பொறுமை அற்றுப் போய் விடும்? தன் மனைவியை மற்றொருவன் கவர்ந்து கொண்டால், தவறனா முறையில் உறவு பாராட்டினால் எந்த ஆடவனாலும் சகிக்க முடியாது. அந்த இடத்திலும் பொறுமை வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். போர் நடந்தது. இராவணன் அனைத்தும் இழந்து நிற்கிறான். ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்போம்? இராவணனை இரண்டு துண்டாக அங்கேயே வெட்டிப் போட்டு இருக்க மாட்டோமா? 


அங்கே இராமன் பொறுமை காட்டுகிறான். 'இன்று போய் நாளை வா'  என்று இராவணனை அனுப்பி வைக்கிறான். 


தன் மனைவியை, எல்லோர் இருக்கும் சபையில் துகிலுரியச் சொன்ன துரியோதனன் மீது பொறுமையாக இருந்தான் தர்மன். "கை விரல் கண் மலர் மேல் பட்டால் கையை தண்டிக்க முடியுமா', ஏதோ பிழை செய்து விட்டான். துரியோதனன் நம் உறவினன் என்று அவன் மேல் பொறுமை காட்டினான். 


நமக்கு ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால் அது இரண்டு வழியில் நிகழலாம் என்கிறார் பரிமேலழகர் உரைப்பாயிரத்தில். 


தெரியாமல் செய்யலாம், தெரிந்து வேண்டும் என்றே செய்யலாம். 


எப்படி இருந்தாலும் பொறுமை காட்ட வேண்டும் என்று சொல்கிறது இந்த அதிகாரம். 


நாளை முதல் அதிகாரத்துக்குள் போவோம். 


அதற்கு முன், இந்த பொறுமை பற்றி என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசியுங்கள். நீங்கள் பொறுமை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் அதில் என்னவெல்லாம் சொல்வீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பின், வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.



No comments:

Post a Comment