Pages

Wednesday, July 6, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்

 

 திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


)


எவ்வளவோ பொறுமையாக இருக்கிறோம். இருந்தும் நமக்கு சிலர் ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள். பதிலுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் தாங்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்ற எண்ணம் நமக்கு வரலாம். 


பொறுமையாக இருப்பதை ஏதோ ஏமாளித்தனம் என்று நினைத்து விடக் கூடாது என்று நினைக்கலாம். 



பொறுமைக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்று நினைத்த வள்ளுவர் பூமியைக் காட்டுகிறார். 


நமக்கு நீர் வேண்டும் என்று பூமியை கடப்பாரை, இயந்திரம் கொண்டு துளைக்கிறோம். பூமியின் உள்ளே நிலக்கரி, தங்கம் போன்றவை இருக்கும் என்று வெடி வைத்து பூமியைப் பிளக்கிறோம். அப்படி செய்பவர்களை பூமி வாய் பிளந்து விழுங்கி விடுவதில்லை. தனக்கு துன்பம் செய்தவர்களையும் அந்த பூமி தாங்கிப் பிடிக்கிறது. விட்டு விடுவது இல்லை. 


அது போல

நமக்குத் துன்பம் தருபவர்களையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே தலையாய அறம் என்கிறார். 



பாடல் 


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html



(please click the above link to continue reading)



அகழ்வாரைத் = அகழ்தல் = குழி தோண்டுதல். தன்னைத் தோண்டுபவர்களை 


தாங்கும் = தாங்கி நிற்கும் 


நிலம்போலத் = நிலம் போல 


தம்மை = தம்மை, ஒருவரை 


இகழ்வார்ப் = இகழ்பவர்களை 


பொறுத்தல் = பொறுத்துக் கொல்லுதல் 


தலை = தலையாய அறம் 


இகழ்தல் என்றால் மிகையான சொல்லுதலும், செய்தலும் என்பார் பரிமேலழகர். 


பொறுமை என்றால் என்ன? நமக்கு தீமை செய்தவர்களுக்கு பதிலுக்கு தீமை செய்யாமல் இருபதுதானே பொறுமை. வேறு என்ன பொறுமை இருக்க முடியும். 


நமக்கு நன்மை செய்பவர்களிடம் நாம் ஏன் பொறுமை காட்ட வேண்டும்?


பொறுமை என்பது நல்ல குணம் என்றால் அதை எப்போது கடை பிடிக்க வேண்டும்?  


பொறுமை இல்லாமல் இருத்தல் என்பது என்ன? அவசரப் பட்டு காரியம் செய்வது. அது தானே பொறுமைக்கு எதிர்ப்பதம்? அவசரப் பட்டு, சிந்திக்காமல், உணர்ச்சி வசப்பட்டு காரியம் செய்வது சரியா? 


நாம் ஏன் பொறுமை இழக்கிறோம்? அதில் ஏதோ ஒரு சுகம், அல்லது நன்மை இருபதால்தானே பொறுமை இழந்து ஏதோ செய்கிறோம் அல்லது சொல்கிறோம்? பொறுமை இழப்பதால் என்ன நன்மை இருக்க முடியும்? ஏன் பொறுமை இழக்கிறோம்? பொறமை இழக்காமல் இருந்தால் என்ன பலன் என்றெல்லாம் ஆழமாக சிந்தித்து விடை தருகிறார் வள்ளுவர். 


ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


நம் வாழ்வின் நோக்கம் வீடு பேறு. அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தின் ஒரு கூறு பொறுமை. 


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் 


The dogs bark but the caravan proceeds 


என்று. 


ஒட்டகத்தின் மேல் அமர்ந்து நெடும் தூரம் செல்பவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள். அவர்கள் போகிற வழியில் சில நாய்கள் அவர்களைப் பார்த்து குரைக்கும். 


ஆஹா, என்னைப் பார்த்து குரைக்கிறாயா நாயே, என்று ஒட்டகத்தின் மேல் இருந்து இறங்கி நாயைத் துரத்திச் சென்று அதைப் பார்த்து நாலு குரை குரைத்து விட்டு வருவார்களா யாராவது? 


நாய் பாட்டுக்கு குரைத்துக் கொண்டு இருக்கும். நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டே போக வேண்டும். குரைப்பது நம் வேலை அல்ல. நாம் போகும் தூரம் நீண்டது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் போய்ச் சேர முடியாது. 


இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 


பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்கு செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. 





No comments:

Post a Comment