திருக்குறள் - அழுக்காறாமை - அஃதொப்பது இல்லை - பாகம் 1
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை: அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html
குறள் எண் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html
)
தவறு செய்ய வாய்புகள் கூடிக் கொண்டே போகின்றன. நாம் வாழும் சூழ்நிலை நம்மை தவறு செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.
மற்றவற்றை எல்லாம் விட்டு விடுவோம், இந்த பொறாமை என்ற ஒரு தீய குணத்தை எடுத்துக் கொள்வோம்.
எப்படி நாம் வாழும் சூழ்நிலை நம்மை பொறாமை கொள்ளச் செய்கிறது என்று பார்ப்போம்.
முகநூல் (facebook), instagram, whatsapp போன்ற சமூக வலைதளங்களில் நாம் யார் யாருடனோ தொடர்பு வைத்து இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு முக்கிய செய்தியை, நிகழ்வை பதிவு செய்கிறார்கள்.
அதுவரை சரி.
அடுத்து என்ன நடக்கிறது?
அவன் வீடு வாங்கி விட்டான், அவன் கார் வாங்கி விட்டான், அவன் குடும்பத்தோடு அயல்நாடு சுற்றுலா செல்கிறான், அவன் பிள்ளைக்கு அந்த பெரிய கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது, அவனுக்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது என்று நமக்குள் ஒரு ஆதங்கம் வருகிறது. எனக்கு மட்டும் தான் ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறது என்று கோபம் வருகிறது. எப்படியாவது நாமும் ஏதாவது செய்து பதிவு ஏற்ற வேண்டும் என்று ஒரு வேகம் வருகிறது. அது நடக்காத போது, அவனுக்கெல்லாம் நடக்கிறது , என்று அவன் மேல் பொறாமை வருகிறது.
தங்கள் வாழ்வில் நடக்கும் துன்ப நிகழ்வுகளை யாரும் பறைசாற்றுவதில்லை.
எனக்கு பங்குச் சந்தையில் இவ்வளவு நட்டம், எனக்கு வேலை போய் விட்டது, நான் உடம்ப சரியில்லாமல் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கும் என் மனைவிக்கும் பெரிய வாக்குவாதம், வீட்டில் நிம்மதியே இல்லை என்று யாரும் பதிவு இடுவதில்லை.
நாம் என்ன நினைக்கிறோம், உலகில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. எல்லோரும் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் ஒருவர் மட்டும் தான் இப்படி கிடந்து உழல்கிறோம் என்று ஒரு தன்னிரக்கம் வருகிறது .
அது உண்மை இல்லை என்றாலும், அதை தவிர்க்க முடிவது இல்லை.
என்ன செய்யலாம்? இதை எப்படி எதிர் கொள்வது? சமூக வலைதளங்களுக்குப் போகாமல் இருக்கலாம். நான் போவது இல்லை. அதனால் யார் மேலும் எனக்கு பொறாமை இல்லை. தெரிந்தால்தானே பொறாமை கொள்ள.
எல்லோராலும் அது முடிவது இல்லை.
வள்ளுவர் அதற்கும் வழி சொல்கிறார்.
முதல் குறளில் "பொறாமை இல்லாத குணத்தை இயல்பாக்கிக் கொள்" என்றார்.
ஆனால் அது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை.
வள்ளுவருக்கு அது புரிந்து இருக்கிறது.
சரி, உன்னால் பொறாமையை விட முடியவில்லையா....=பரவாயில்லை, உனக்கு இன்னொரு வழி சொல்லித் தருகிறேன் என்கிறார்.
அவனிடம் சிறந்த ஏதோ ஒன்று இருப்பதால்தானே அவன் மீது பொறாமை படுகிறாய்? உன்னிடம் இல்லை,அவனுக்கு கிடைத்து இருக்கிறது என்பதால்தானே பொறாமை படுகிறாய்?
உலகில் எல்லோரும் உன்னைக் கண்டு பொறாமை படும்படி செய்து விட்டால், உன்னிடம் உலகிலேயே மிகச் சிறந்த ஒன்று இருந்து விட்டால்?
அத்தனை பேரும் உன்னைக் கண்டு பொறாமை படுவார்கள் அல்லவா?
அந்தப் பொருள் என்ன தெரியுமா?
அது தான் பொறாமை இல்லாத குணம்.
அது மட்டும் இருந்து விட்டால், அதை விட சிறந்த ஒன்று வேறு எதுவும் கிடையாது. உன்னைப் பார்த்து மற்றவன் பொறாமை படுவான். நீ யாரைப் பார்த்தும் பொறாமை படத் தேவையே இருக்காது. அது அவ்வளவு உயர்ந்து விடயம் என்கிறார்.
பாடல்
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html
(Pl click the above link to continue reading)
விழுப்பேற்றின் = விழுமிய பேறுகளில்
அஃதொப்பது = அதற்குஇணையானது
இல்லை = இல்லை
யார் மாட்டும் = ஒருவரிடத்தும்
அழுக்காற்றின் = பொறாமையின்
அன்மை பெறின் = தூரத்தை பெற்றால். அதாவது அது கிட்ட கூட இல்லாமல் இருந்தால். அதாவது, பொறாமை இல்லாமல் இருந்தால்.
உலகிலேயே மிகச் சிறந்த், ஈடு இணை இல்லாத செல்வம் யார் இடத்தும் பொறாமை இல்லாமல் இருப்பது.
அது எவ்வளவு பெரிய செல்வம் தெரியுமா? என்று கேட்கிறார் வள்ளுவர்.
இந்தக் குறளுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாக பொருள் சொல்ல வேண்டும்.
பதிவு கொஞ்சம் நீண்டு விட்டதால், அந்த விரிவான உரையை அடுத்த பதிவில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment