திருவாசகம் - திரு அம்மானை - ஒரு முன்னுரை
இளங்கன்று பயம் அறியாது என்று சொல்லுவார்கள். அது போல திருவாசகம் போன்ற மிக உயரிய நூல்களுக்கு நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.
படிக்கப் படிக்க அது மேலும் மேலும் உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. எங்கு நிறுத்துவது, இவ்வளவுதான் என்று அறுதியிட்டு கூற முடியாமல் இருக்கிறது.
எங்காவது தொடங்க வேண்டுமே....
ஒரு சமுதாயம் இறை உணர்வு உள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பெண்களுக்கு இறை உணர்வு இருக்க வேண்டும். அவர்கள்தான் பிள்ளை வளர்க்கும் போது அந்த இறை உணர்வை பிள்ளைகளுக்கு இளமையில் இருந்தே ஊட்டுவார்கள்.
தாலாட்டில், உணவு ஊட்டும் போது, குளிப்பாட்டும் போது, கதை சொல்லி தூங்க வைக்கும் போது அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை, கதைகளை சொல்லுவார்கள். அந்த பாடல்களும், கதைகளும் இறை உணர்வு சம்மந்தபட்டதாய் இருந்தால், தங்களை அறியாமலேயே அந்த விதையை அவர்கள் பிள்ளைகள் மனதில் தூவி விடுவார்கள். பிள்ளைகள் அறியாமலேயே அவர்களுக்குள் அது வளர்ந்து வரும். .
பின்னாளில் எத்தனை தத்துவங்கள் வந்து மோதினாலும், அந்த இளம் வயது உணர்வு மிக ஆழமாக இருக்கும். அசைக்க முடியாது.
சரி, இந்த தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பள்ளிக் கூடத்தில் பாட திட்டமாக வைத்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்றால் அது கடினம். அதுவும் அந்தக் காலத்தில், குருகுல வாசம் உள்ள காலத்தில், பெண் பிள்ளைகளை அனுப்பி பாடம் சொல்லித் தருவது எப்படி?
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
(pl click the above link to continue reading)
பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் அந்தத் தத்துவங்களை எளிய , சந்தம் நிறைந்த பாடல்களாக மணிவாசகர் அமைத்துத் தருகிறார்.
ஊஞ்சல் ஆடும் போதும், பூ கொய்யும் போது , அம்மானை ஆடும் போது என்று பெண்கள் செய்யும் செயல்களோடு பாடல்களை அமைத்துத் தருகிறார் அடிகளார்.
அவர்கள் விளையாட்டுப் போக்கில் அதைப் பாடுவார்கள். நாளடைவில் அது மனப்பாடம் ஆகி விடும். அர்த்தம் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக அர்த்தம் புலப் படத் தொடங்கும். கொஞ்சம் ஆர்வம் பிறக்கும். ஒரு தேடல் வரும். அப்படியே அது அவர்களை நன்னெறியில் இட்டுச் செல்லும்.
என்ன ஒரு ஆழமான சிந்தனை!
அம்மானை என்பது இளம் பெண்கள் மூன்று அல்லது ஐந்து கற்களை வைத்து மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும் ஒரு வித விளையாட்டு.
மேலே போன கல் கீழே வருவதற்குள் கீழே உள்ள கற்களை ஏதோ ஒரு விதிப்படி கையில் எடுக்க வேண்டும். அதற்குள் மேலே சென்ற கல் கீழே வரும். அதையும் தரையில் விழாமல் பிடிக்க வேண்டும்.
அதில் ஒரு இலயம் வேண்டும். ஒரு கட்டு வேண்டும்.
மணிவாசகர் அந்த இலயத்தோடு பாடல்களை அமைக்கிறார்.
அதில் காதல், சிருங்காரம், போன்ற உணர்வுகள் உண்டு. அது அந்தப் பெண்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும்.
அதில் இருந்து அப்படியே பக்திக்குள் கொண்டு செல்லும் இரசவாதம் மணிவாசகர் ஒருவரால் மட்டுமே முடியும்.
அப்படி அமைந்த பத்துப் பாடல்களைக் சிந்திக்க இருக்கிறோம்.
வாருங்கள்.
No comments:
Post a Comment