Pages

Sunday, August 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

     

திருவாசகம் - திரு அம்மானை  -   கல்லைப் பிசைந்து கனி ஆக்கி



முதலில் பாடலைப் படித்து விடுங்கள். பொருள் எல்லாம் அப்புறம் பார்க்கலாம். படிக்கும் போதே மனதை உருக்கும். பொருளைத் தாண்டி நேரே உணர்வைத் தொடும் பாடல்கள். 




பாடல் 


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,

வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி,

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை

வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை,

தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும்

ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!


வாழ்வின் ஓட்டத்தில் மனம் இறுகி விடுகிறது. துன்பங்கள், வெறுப்பு, கவலை, பயம், ஏமாற்றம், ஆசை எல்லாம் சேர்ந்து நம்மை அலைகழித்து நம் மனதை கல் போல ஆக்கி விடுகின்றன. 


எதை நம்புவது, ,யாரை நம்புவது என்று பயம். எல்லாவற்றிலும் ஒரு சந்தேகம். விடை காண முடியாத குழப்பங்கள். 


படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்கு நேரம் கிடைப்பது இல்லை. 


என்னதான் செய்வது. திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த பிள்ளை போல் கலங்கி நிற்கிறோம். 


அப்படித்தான் நின்றார் மணிவாசகர். இறைவன் எனக்கு அருள் செய்தான் என்கிறார். 


எப்படி?


"கல்வி அறிவு ஒன்றும் இல்லாத, நாயினும் கீழான என்னை, அவன் மேல் பைத்தியம் பிடிக்க வைத்து, கல் போன்ற என் மனதை கனி போல் மேன்மையாக்கி, அதை பிசைந்து, அவனுடைய கருணை வெள்ளத்தில் ஆழ்த்தி, என் முன் வினைகளை தடுத்து, என்னை ஆட்கொண்டான்" 


என்கிறார். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


(pl click the above link to continue reading)




கல்லா மனத்துக்  = கல்வி அறிவு இல்லாத மனமுடைய 


கடைப்பட்ட = கீழான, தாழ்ந்த 


நாயேனை, = நாய் போன்றவனை 


வல்லாளன் = வலிமை மிக்கவன் 


தென்னன் = தென்னாடு உடையவன் 


பெருந்துறையான் = திருபெருந்துறையில் உறைபவன் 


பிச்சு ஏற்றி, = பித்தம் பிடிக்க வைத்து 


கல்லைப் பிசைந்து = கல் போன்ற என் மனதை பிசைந்து 


கனி ஆக்கி = கனி போல அதை மேன்மையாக்கி 


தன் கருணை = அவனுடைய கருணை என்ற


வெள்ளத்து அழுத்தி = வெள்ளத்தில் அழுத்தி , 


வினை கடிந்த = என்னுடைய வினைகளை அறுத்து 


வேதியனை, = வேதத்தின் தலைவனை 


தில்லை நகர் புக்கு = சிதம்பரத்தில் நுழைந்து 


சிற்றம்பலம் மன்னும் = சித்ற்றம்பலத்தில் நிலைத்து நிற்கும் 


ஒல்லை விடையானை  = விடை என்றால் எருது. ஒல்லை என்றால் விரைந்து. விரைந்து வரும் எருதின் மேல் அமர்ந்தவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = அம்மானை பாட்டில் பாடுவோம் 


மணிவாசகர் அடிக்கடி தன்னை 'நாய்' என்று குறைத்துச் சொல்லுவார். நாய் நன்றி உள்ள பிராணிதானே. அதில் என்ன கேவலம்? 


அது அல்ல. 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். உயர்ந்த நூல்களை வாசிக்கிறோம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அப்புறம் என்ன செய்கிறோம்? அதில் சொன்னபடி செய்வது இல்லை. மறுபடியும் மறுபடியும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம். படித்ததால் ஒரு பலனும் இல்லை. 


நாயும் அப்படித்தான். எவ்வளவு தான் அதை கழுவி, குளிப்பாட்டி, உயர்ந்த உணவுகளை கொடுத்தாலும், சந்தர்பம் வந்தால் தெருவுக்கு ஓடும், கண்டதிலும் வாய் வைக்கும், இன்னொரு நாயைக் கண்டால் குலைக்கும். 


நம் உரிமையாளன் நமக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறான். எப்படி சிறந்த உணவை நமக்கு தந்திருக்கிறான். நான் இந்த தெருவோரம் இருக்கும் அசிங்கத்தை உண்ணலாமா என்று அது நினைக்காது. அதன் இயற்கை அது. 


எனவேதான், அந்த குணம் பற்றி தன்னை நாய் என்று குறைத்துச் சொல்லுவார். 


இராமன் மிதிலைக்கு வருகிறான். ஊருக்கு வெளியில் உள்ள கோட்டையில் உள்ள கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து "பாற்கடலை விட்டு இலக்குமி இங்கு வந்து இருக்கிறாள்...நீ சீக்கிரம் வா" என்று அழைப்பது போல கை நீட்டி அழைப்பது போல காற்றில் அசைந்தன என்பார் கம்பர். 


"ஒல்லை வா" 

‘மை அறு மலரின் நீங்கி  யான் செய் மா தவத்தின் வந்து.

செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர். கமலச் செங் கண்

ஐயனை. ‘ஒல்லை வா’ என்று    அழைப்பது போன்றது அம்மா!



"ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய்" 


"கல்லா மனத்து" என்பதை கல்வி அறிவு இல்லாத மனம் என்பதை விட கல் போன்ற மனம் என்று பொருள் சொல்வது சிறப்பாக இருக்கும். 


"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரிநாதர். 


இறைவனை அடைய கல்வி ஒரு தடை. 


"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகரே பாடி இருக்கிறார். எனவே, கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு தடை இல்லை.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் இறைவனை வெகு சீக்கிரத்தில், ஆறே நாளில் அடைந்தவர் கல்வி அறிவு சற்றும் இல்லாத கண்ணப்ப நாயனார்.



வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து

நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று

ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


என்பார் பட்டினத்தார். 


"திருநீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மைத் தொடாதே" என்று சொன்னதால், கட்டிய மனைவியை தொடாமல் இருந்த திருநீலகண்ட நாயனார் ஒரு குயவர். 


"கல்வி எனும் பல் கடல் பிழைத்தும்" என்பார் மணிவாசகர். 


முதலில் சொன்னது போல் பொருள், உரை எல்லாம் விட்டு விடுங்கள் . 


பாடலைப் படித்துப் பாருங்கள். 


மனதை ஏதோ செய்யும். 


அப்படி எல்லாம் ஒன்றும் செய்யவில்லையே என்றால், இன்னும் காலம் வரவில்லை என்று அர்த்தம். 


வரும். 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



1 comment: