திருவாசகம் - திரு அம்மானை - தாயான தத்துவனை
திருவாசகத்தில் உள்ள பாடல்களை படித்தால் மிக எளிமையாக இருக்கும். பெரிய சொற் சிக்கல்கள் இருக்காது. சரி, இவ்வளவுதானே. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று எண்ணி மேலே போய் விடுவோம். போய் இருக்கிறேன்.
பின்னாளில் அப்படிப்பட்ட பாடல்களுக்கு மிக ஆழமான, விரிவான அர்த்தங்களை கேட்டு வியந்தது மட்டும் அல்ல, இப்படி எத்தனை பாடல்களை நுனிப் புல் மேய்ந்து விட்டு வந்தேனோ என்ற கவலையும் பட்டிருக்கிறேன்.
சரி, எனக்குத் தெரிந்தது அவ்வளவு, இந்த உரை ஆசிரியருக்கு தெரிந்தது இவ்வளவு. இதுக்கு மேலேயும் பொருள் இருக்கலாம் அல்லவா என்றும் தோன்றும். எதுதான் மணிவாசகர் நினைத்த பொருள் என்ற ஏக்கம் வரும்.
திருவாசகத்துக்குப் பொருளை மணிவாசகரிடமே கேட்டார்கள். இறைவன் திருவடியைக் காட்டி,"இதுதான் பொருள்" என்று கூறி அதில் ஐக்கியமாகி விட்டார் என்பார்கள்.
எனவே, எத்தனை உரை படித்தாலும், அது எதுவும் முழுமையானது அல்ல. உங்கள் தேடல்தான், அனுபவம்தான் உண்மையான பொருளை உணர்த்த முடியும்.
அடுத்த பாடல்
"எப்போதும் மனதில் நினைப்பவர்கள் உள்ளத்தில் இருப்பவனை, நினனையாதவர்களுக்கு எட்டாமல் இருப்பவனை, திருபெருந்துறையில் உறைபவனை, வேதங்களால் போற்றப் படுபவனை, பெண்ணை பாதியாகக் கொண்டவனை, நாய் போன்ற நம்மையும் ஆட்கொண்ட நாயகனை, தாய் போன்றவனை, உலகை எல்லாம் தானாக இருந்து, அவற்றை ஆள்பவனை, அம்மானைப் பாட்டில் பாடுவோம்"
என்கிறார்.
இது என்ன பெரிய விடயமா. எப்போதும் உள்ளதுதானே என்று நினைப்போம்.
பாடல்
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்
பொருள்
(pl click the above link to continue reading)
ஓயாதே = ஓயாமல், இடை விடாமல், அலுப்பு இல்லாமல்
உள்குவார் = உள்ளத்தில் நினைப்பார்
உள்ளிருக்கும் = உள்ளுக்குள்
உள்ளானைச் = இருப்பவனை
சேயானைச் = தூரத்தில் இருப்பவனை
சேவகனைத் = சேவகம் செய்பவனை
தென்னன் = தென்னாடு உடையவனை
பெருந்துறையின் = திருபெருந்துறையில்
மேயானை = உறைபவனை
வேதியனை = வேதங்களால் போற்றப்படுபவனை
மாதிருக்கும் பாதியனை = பெண்ணை பாதியாகக் கொண்டவனை
நாயான நந்தம்மை = நாய்போன்ற நம்மை எல்லாம்
ஆட்கொண்ட நாயகனைத் = ஆட்கொண்ட நாயகனை
தாயான தத்துவனைத் = தாய் போன்றவனை
தானே உலகேழும் = அவனே உலகம் எழும்
ஆயானை = ஆனவனை
ஆள்வானைப் = ஆட்சி செய்பவனை
பாடுதுங்காண் அம்மானாய் = அம்மானையில் பாடுவோம்
கொஞ்சம் உள்ளே போவோம்.
"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்" - உள்குதல் என்றால் நினைத்தல், மனதில் நிறுத்துதல் என்று பொருள் சொல்லலாம். மனத்து அழிதல் என்று பொருள் சொல்கிறார்கள். அதாவது, அந்த ஒன்றைத் தவிர வேறு எதையும் மனம் நினைக்காது. அப்படி இருந்தால், அது எதை நினைக்கிறதோ, அதாகவே ஆகிவிடுகிறது. "ஓயாமல்" என்றால் விடாமல். அப்படி விடாமல் நினைப்பவர்களுக்கு அவன் "உள்ளவன்", அதாவது வெளிப்பட்டு தெரிவான். அப்படி நினைக்காதவர்களுக்கு தெரிய மாட்டான் என்பது குறிப்பு.
அதைத்தான் அடுத்த சொல்லில் கூறுகிறார்.
"சேயானை" - தூரத்தில் இருப்பவன். கண்ணுக்குத் தெரிய மாட்டான். ஓயாமல் உள்ளத்தில் நினையாதவர்களுகுத் தெரியமாட்டான். தெரியமாட்டான் என்றால் இல்லாதவன் என்று பொருள் இல்லை. தூரத்தில் இருப்பான். புளுட்டோ போன்ற கோள்கள் நம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதற்காக அது இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த உலகை யார் படைத்தார்கள் என்று கேட்டால் "இறைவன் படைத்தான்" என்று சொல்லிவிடுவார்கள். அப்படி என்றால் இந்த உலகம் வேறு, இறைவன் வேறா என்ற கேள்வி வரும். உலகம் என்பது இறைவனுக்கு வெளியே உள்ள ஒன்று என்று ஆகி விடுமே?
மணிவாசகர் சொல்கிறார்
"தானே உலகேழும் ஆயானை"
இந்த உலகம் முழுவதும் அவனே தான். தானே உலகமாய் ஆனான். அவன் வேறு, உலகம் வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான்.
சரி, அவனே உலகம் ஆனான் என்றால் அதை நடத்துவது யார்?
"ஆள்வானை"
தானே உலகங்கள் அனைத்தும் ஆகி, அவற்றை வழி நடத்துகிறான்.
"சேவகனை". இறைவன் எப்படி சேவகன் ஆவான் ? அவன் தான் உலகம் அனைத்தையும் ஆள்பவனாயிற்றே.
இருந்தாலும், தன் அடியவர்களுக்காக அவன் குதிரை ஓட்டும் சேவகனாக, பிட்டுக்கு மண் சுமக்கும் கூலித் தொழிலாளியாக, வந்து சேவகம் செய்திருக்கிறான். எனவே "சேவகனை". ஒரு தாய் தன் பிள்ளைக்கு ஆயிரம் சேவை செய்கிறாள். அதற்காக அவள் வேலைக்காரியா? இல்லை, அவள் செய்வது அன்பின் காரணமாக.
அதை அடுத்த வரியில் சொல்கிறார்
"தாயான தத்துவனை". பேசாமல் தாயானவனை என்று சொல்லி இருக்கலாமே? தாய் பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பாள். இருந்தும் அவளுக்கு பல பிள்ளைகள் இருந்தாலோ, அல்லது வயதாகி விட்டாலோ,அல்லது பிள்ளை வேறு இடத்துக்குப் போய் விட்டாலோ அவளால் பிள்ளைக்கு உதவி செய்ய முடியாது. இருந்தும்அவள் மனம் எல்லாம் பில்லையிடம்தான் இருக்கும். உடலால் இல்லாவிட்டாலும், உள்ளாதால் இருந்து கொண்டே இருப்பாள். அவன் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் கசிந்து கொண்டேதான் இருக்கும். எனவே தான் "தாயான தத்துவனை" என்றார்.தத்துவம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அது செயல் பட்டுக் கொண்டே இருக்கும்.
ஒரு ஆண், பெண் இல்லாமல் முழுமை பெறுவது இல்லை. முழுமை பெறாத ஒருவரால் இறைவனை அடைய முடியாது. தானே ஒரு அரைகுறை. எப்படி முழுமுதலான இறைவனை அடைவது?
"மாதிருக்கும் பாதியானை". அவனே பெண் பாதி இல்லாமல் முழுமை அடைய மாட்டான் என்றால் நாம் எம்மாதிரம்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பெண் என்றால் ஏதோ மனைவி, காதலி என்று ஒரு உருவம் அல்ல. பெண் தன்மை. அன்பு, அருள், கருணை, பாசம், இரக்கம் போன்ற குணங்கள். அந்தக் குணங்கள் இல்லாதவரை இறை அனுபவம் கிட்டாது.
பிள்ளை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தாயின் அன்பு ஒரு போதும் குறையாது. அது போல இறைவனும், நம் தகுதி பார்த்து ஆட்கொள்வதில்லை.
"நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்"
நாம் யாராக இருந்தாலும், நம்மை ஆட்கொள்வான்.
படிக்க படிக்க அதன் எளிமையும், அழகும், மனதை அப்படியே கரைத்து விடும்.
பாடலை இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை.
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
அறைகூவி, வீடு அருளும்
வாரா வழியருளி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html
அந்தம் இலா ஆனந்தம்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html
தாய்போல் தலையளித்திட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html
கல்லைப் பிசைந்து கனி ஆக்கி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html
காட்டாதன எல்லாம் காட்டி
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html
)
ஆகா அருமையான பொருள் அற்புதமாக எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி.
ReplyDelete”அருமையில் எளிய அழகே போற்றி”