Pages

Monday, July 24, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு

 திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு 


தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதால் பலர் தவறு செய்வதில்லை. 


எந்தத் தவறுக்கும் தண்டனையே கிடையாது என்று வைத்துக் கொண்டால், தவறுகள் குறையுமா? கூடுமா?


இன்று பலர் தவறு செய்வதற்கு காரணம், சட்டத்தில் இருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம். ஒரு வேளை மாட்டிக் கொண்டாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், வக்கீலின் சாமர்த்தியம், நிர்வாக குறைபாடுகள் இவற்றில் புகுந்து வெளியே வந்து விடலாம் என்ற தைரியம். 


வள்ளுவர் சொல்கிறார், தப்பிகவே முடியாத ஒரு சட்ட வரைமுறை இருக்கிறது. அது தான் வினைப்பயன். அதில் இருந்து தப்பவே முடியாது. தீவினை செய்தால் அது எங்கு சென்றாலும், விடாது வந்து நம்மைப் பற்றும் என்கிறார். 


பாடல் 


எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_24.html

(click the above link to continue reading)


எனைப்பகை = எந்த விதமான பகையை 


உற்றாரும் = உடையவர்களும் 


உய்வர் = அதில் இருந்து தப்ப வாய்ப்பு இருக்கிறது 


வினைப்பகை = வினை என்ற பகை (தீவினை) 


வீயாது = விடாமால் 


பின்சென்று அடும் = பின் சென்று பற்றும், வெல்லும், பலனைத் தரும் 


நமக்கு ஒரு பகைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிடம் மன்னிப்பு கேட்டால், ஒரு வேளை அவன் நம்மை பெரிய மனது பண்ணி மன்னித்து விடலாம். அல்லது, அவன் ஏதோ ஒரு வகையில் பலம் குன்றி நம்மை ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலைக்கு சென்று விடலாம், அல்லது நாம் மிக பலம் பெற்று அவனுடைய பகை பற்றி கவலைப் படாமல் நிம்மதியாக இருக்கலாம். 


எப்படியாவது தப்பிவிட முடியும். 


ஆனால், ஒருவருக்கு தீவினை செய்து விட்டால், அதனால் வரும் துன்பத்தில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. 


வீயாது என்றால் விடாமல். 


இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் தொடரும். சில சமயம் சிலருக்கு நிகழும் துன்பங்களை பார்க்கும் போது, ஒன்றும் செய்யாத அப்பாவிகளுக்கும் ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது என்று நினைப்போம். யாருக்குத் தெரியும். என்று செய்தோ தீவினையோ இன்று வந்து பிடிக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தானே இருக்கிறான் என்று சலிப்பவர்களுக்கு  வள்ளுவர் சொல்கிறார். இன்று அவன் நல்லா இருக்கலாம்.  அவன் செய்யும் தீவினைகள் அவனை ஒருக்காலும் விடாது. தொடர்ந்து கொண்டே இருக்கும். அவன் வலி குன்றிய நேரத்தில் அவனைப் பிடிக்கும். அப்போது தாங்க முடியாது.


எப்படியாவது தப்பிவிடலாம் என்று எண்ணவே கூடாது.  ஒருக்காலும் தப்ப முடியாது. 


எனவே, தீய வினைகள் செய்ய பயப்பட வேண்டும். 





No comments:

Post a Comment