Pages

Tuesday, July 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா 


கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு விடயத்தில் வாக்குவாதம் நிகழும். அப்போது குழந்தை அழுதால், இருவரும் தங்கள் சண்டையை மறந்து விட்டு, பிள்ளையை தூக்க ஓடுவார்கள் இல்லையா? 


அது போல 


ஒரு சமயம் ஆதி சேடனுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரு வாக்குவாதம் வந்தது...பெருமாளுக்கு சேவை செய்வதில் யார் உயர்ந்தவர் என்று. இரண்டு அடியவர்களுக்கு இடையில் போட்டி என்றால், ஆண்டவன் என்ன செய்வான் பாவம். இருவரையும் சமாதனம் செய்ய தான் ஒரு குழந்தை வடிவம் எடுத்தாராம். அந்த குழந்தை வடிவைப் பார்த்ததும், இருவரும், தங்கள் போட்டியை மறந்து, அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார்களாம். இப்படி ஒரு கதை கருட புராணத்தில் இருக்கிறது. குழந்தை வடிவம் கொண்ட பெருமாள் "பால சயன" வடிவில் திருச் சிறுபுலியூர் என்ற இடத்தில் சேவை சாதிக்கிறார். 


திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார். 


இறைவன் எந்த வடிவம் கொண்டவன்?  அவனுக்கு என்று ஒரு உருவம் இருக்கிறதா?  அப்படி என்றால் நம் சிற்றறிவால் அவனை கண்டு கொள்ள முடியுமா?  முடியாது என்பது சமய முடிவு. 


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் ...


"பெருமாளே நீ எந்த வடிவு உள்ளவன்?  மேகம் போன்றவனா? தீ போன்றவனா? நீரா? மலையா ? அல்லது வேறு ஏதாவது உருவமா?  உன் உருவம் உன் உருவம் தான். அதற்கு இணையாக எதைச் சொல்வது? திருமகள் விரும்பும் அருள் நிறைந்தவனே, உன் திருவடிகளே சரணம்" 


என்று. 


பாடல் 


கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,


பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,


திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,


அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


கருமாமுகி லுருவா! = கரு + மா + முகில் + உருவா = கருமையான பெரிய மேக உருவமா? 


கனலுருவா! = கனல் + உருவா = தீயின் உருவமா? 


புனலுருவா = புனல் + உருவா = நீரின் உருவமா? 


பெருமால்வரை யுருவா! = பெரு + மால் + வரை + உருவா? = பெரிய மலை போன்ற உருவமா? 


பிறவுருவா! = வேறு ஏதேனும் உருவமா?  


நினதுருவா = உன்னுடைய உருவமா ?



திருமாமகள் = அழகிய திருமகள் 


மருவும் = சேரும் 


சிறு புலியூர்ச் = சிறு புலியூர் 


சல சயனத்து = சயனித்து இருப்பவனே 



அருமாகட லமுதே! = அமுதம் நிறைந்த கடல் போன்றவனே 


உன தடியே = உனது அடிகளே 


சர ணாமே. = சரண் நாமே 


மேகத்தை நாம் பார்த்தால், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது போல காட்சி அளிக்கும். மான் போல, மயில் போல என்று எப்படி வேண்டுமானாலும் அது தோன்றும். அது மட்டும் அல்ல, பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உருவம் மாறும். 


அதற்கென்று ஒரு உருவம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் சொல்ல முடியாது. 


அது போல இறைவனும். இருக்கு, ஆனால் இல்லை. 


தீச் சுடரும், நீரும் அப்படித்தான். உருவம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் இது இன்ன வடிவம் என்று கூற முடியாது. 


மலையும் அப்படித்தான். நாம் அதை பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருந்தால், அதன் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். இங்கிருந்து பார்த்தால் ஒரு வடிவம், கொஞ்ச தூரம் போய் அங்கிருந்து பார்த்தால் வேறு வடிவம். 


நான் சொல்லும் வடிவம் தான் சரி என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். 


அங்கிருந்து பார்த்தால் அப்படி. இங்கிருந்து பார்த்தால் இப்படி. நேற்று பார்த்தால் ஒரு மாதிரி. இன்று வேறு மாதிரி. 


இதை நம்மால் பற்ற முடியாது. 


அறிவினால் இதை ஆராய்ந்து அறிய முடியாது. 


அன்பினால் திருமகள் அவனைப் பற்றி விட்டாள் என்கிறார் ஆழ்வார். எனவே, நமக்கும் அதுதான் வழி என்று அவன் திருவடிகளை சரண் அடைகிறார் அவர். 


அன்பினாலும், பக்தியாலும் உணர முடியும் என்று கூறுகிறாரோ?



3 comments:

  1. அருமையான விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ஏழே நிமிடத்தில் பாராட்டு...:). நன்றி.

      Delete