Pages

Monday, July 31, 2023

திருக்குறள் - தன் மேல் காதல்

 திருக்குறள் - தன் மேல் காதல் 


நாம் ஏன் பிறருக்கு தீமை செய்கிறோம்?  


நம்மை நாம் காதலிக்காததால் என்கிறார் வள்ளுவர். 


இது என்ன புதுக் கதை? நம்மை நாம் காதலிப்பதா? 


உலகிலேயே நமக்கு மிக நெருக்காமான நபர் யார் என்றால் அது நாம்தான். நம்மையே நாம் விரும்புகிறோமா? நம் அழகு, அறிவு, திறமை, குணம், பேச்சு, நடை, உடை, பாவனை...இதில் எவ்வளவு நாம் நம்மை விரும்புகிறோம்?


நம்மில் நமக்கு பிடிக்காத குணங்கள் எவ்வளவு இருக்கிறது? 


நாம் நம்மை காதலிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் காதல் மற்றவர்கள் மேலும் படரும். எனக்கு எது துன்பம் தருகிறதோ, அது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்று நான் சிந்திப்பேன். அந்தத் துன்பத்தை மற்றவர்களுக்கு தர மாட்டேன். 


அடிப்படை என்ன என்றால், நாம் நம்மை காதலிப்பது இல்லை. 


பாடல் 


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_31.html


(please click the above link to continue reading)


தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தானே 


காதலன் ஆயின் = காதல் செய்வான் என்றால் 


எனைத்தொன்றும் = எவ்வளவு சிறிய அளவாயினும் 


துன்னற்க = செய்யாமல் இருக்க 


தீவினைப் பால் = தீயவினைகளின் பக்கம், தீய வினைகளின் பகுதியில் 


நீ உன்னை விரும்புகிறாயா, அப்படி என்றால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதே என்கிறார்.


ஏன்?


பிறருக்கு தீங்கு செய்தால் அந்த தீமையின் பலன் உனக்கு வரும். நீ வருத்தப்படுவாய். அந்த வருத்தத்தை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. காரணம், நீ உன்னை விரும்பிகிறாய். 


மாற்றாக, உனக்கு உன் மேல் விருப்பு இல்லை என்றால், உனக்கு ஒரு துன்பம் வந்தாலும், நீ அதை சகித்துக் கொள்வாய். நீ ஒருவனை அடிக்கிறாய். அவன் உன்னை பதிலுக்கு அடிக்கிறான். நீ என்ன நினைப்பாய்?  நான் அடித்தேன், பதிலுக்கு அடித்தான் என்று அதற்கு ஒரு சமாதனம் சொல்வாய். அடியின் வலியும், அவமானமும் பெரிதாகத் தெரியாது. 


முதலில் நீ உன்னை காதலிக்கத் தொடங்கு. நீ உன்னை விரும்புபவன் என்றால் மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் துன்பம் நினைக்காதே. 


இன்று முதல் நமக்கு ஒரு புது காதலன், காதலி கிடைத்தார் என்று எண்ணிக் கொள்வோம். நம்மையே நாம் விரும்ப ஆரம்பிப்போம்.  


எவ்வளவு இனிமையான விடயம். 



1 comment:

  1. It’s really very unique way of thinking . Very nice 👍

    ReplyDelete