Pages

Tuesday, August 1, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு


வயக்காட்டில் நீர் பாய்ச்சுவார்கள். ஓடை வழி வரும் அந்த நீர் சில சமயம் அந்த ஓடையின் கரையை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்.  சில சமயம் வயலுக்கு பாய்ச்சிய நீர், வரப்பில் எங்கேனும் விரிசல் இருந்தால் அந்த வழியாக வெளியே ஓடிவிடும். 


நீர் இப்படி வெளியே போகிறதே என்று கோபித்துக் கொண்டு, யாரும் மீண்டும் கரையையோ, வரப்பையோ எடுத்துக் கட்டாமல் இருக்க மாட்டார்கள். அது எத்தனை தரம் உடைந்தாலும், அத்தனை தரமும் சரி செய்வார்கள். 


அது போல, ஆராய்ந்து நட்பு கொண்டவர்கள், நண்பர்கள் எத்தனை முறை பிழை செய்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். 


பாடல் 


செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-

வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post.html


(please click the above link to continue reading)



செறுத்தோறு = செறுத்தல் என்றால் அடக்குதல், தடுத்தல் என்று பொருள். இங்கே, ஒவ்வொரு முறையும் கரையை  


 உடைப்பினும் = உடைத்துக் கொண்டு வெளியே சென்றாலும் 


செம் புனலோடு = செம்மையான நீரோடு (சிறந்த நீரோடு) 


ஊடார் = யாரும் கோபம் கொள்ள மாட்டார்கள் 


மறுத்தும் = மீண்டும் 


 சிறைசெய்வர் = அணை கட்டுவார்கள் வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். 


நீர் = தண்ணீரை 


நசைஇ வாழ்நர் = விரும்பி, அண்டி வாழ்பவர்கள் 


வெறுப்ப வெறுப்பச் = மீண்டும் மீண்டும் வெறுக்கத் தக்க செயல்களை 


 செயினும் = செய்தாலும் 


பொறுப்பரே = பொறுத்துக் கொள்வார்களே 


தாம் = அவர்களே 


வேண்டிக்  = விரும்பி 


கொண்டார் தொடர்பு = கொண்டவர்களின் தொடர்பை 


நண்பர்கள் தவறு செய்வார்கள். நாம் விரும்பாத காரியங்களை செய்வார்கள்.  அதற்காக அவர்களை விட்டு விட முடியாது. 


இது உறவுக்கும் பொருந்தும். 


புதிதாக வரும் உறவுகள் சில சிக்கலாக இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வெட்டி விட முடியாது. 


நட்பு, உறவு என்றால் சில சமயம் அப்படித்தான் இருக்கும். சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும். 



1 comment: