கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2
இராமன் வானர சேனைகளோடு இந்தியாவின் தென் கோடிக்கு வந்து விட்டான். இனி கடல்தான் இருக்கிறது. கடலைத் தாண்ட வேண்டும். ஒரு ஆள் தாண்டினால் போதாது. எழுபது வெள்ளம் வானர சேனையை அந்தக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
சாதரணமான காரியமா?
மிகப் பெரிய வேலை. சிக்கலானதும் கூட.
இராமனின் மனநிலை என்ன. அவன் நாடு பிடிக்க புறப்பட்டவன் அல்ல. மனைவியை பறி கொடுத்து, அந்தக் கவலையில் இருக்கிறான்.
நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம்.
தளர்ந்து போய் இருப்போம். ஒரு சின்ன விடயம் கொஞ்சம் மாறிப் போனால் கூட சோர்ந்து விடுகிறோம். "ஆமா, அது கிடக்குது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ...இப்ப அது ரொம்ப முக்கியமா" என்று அலுத்துக் கொள்வோம்.
கவலை ஒரு புறம் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலை மிகப் பெரியதாக இருந்தாலும், மனம் தளராமல் இராமன் அதை செய்து முடிக்கிறான்.
இராமன் செய்து முடித்தான் என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டு மேலே போய் விடுகிறோம். அவன் எந்த அளவு மனத் துயரத்தில் இருந்தான் என்று கம்பன் பின்னால் காட்டுவான். பார்ப்போம்.
சீதை போன்ற அன்பான மனைவியை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு துயரம். அந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும், எடுத்துக் கொண்ட வேலையை இராமன் சரியாக செய்து முடிக்கிறான்.
அது ஒரு பாடம்.
பாடல்
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,
வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,
பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த
ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/2.html
(pl click the above link to continue reading)
ஊழி திரியும் காலத்தும் = ஊழித் தீ பிடித்து எரியும் காலத்திலும்
உலையா = மாறாத, சிதையாத
நிலைய = நிலையான
உயர் கிரியும் = உயர்ந்த மலையும் (இமய மலை)
வாழி வற்றா மறி கடலும்= என்றும் வாழும் வற்றாத பெரிய கடலும் (இந்தியப் பெருங் கடல்)
மண்ணும் = அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மண், இந்திய நிலப் பரப்பு
வட பால் வான் தோய = வடக்குப் பக்கம் உயர்ந்து வானத்தைத் தொட
பாழித் = பெருமை உள்ள
தெற்கு உள்ளன கிரியும் = தெற்குப் புறம் உள்ள மலை (விந்திய மலை)
நிலனும் தாழ = தென் இந்தியாவும் தாழ
பரந்து எழுந்த = புறப்பட்டு எழுந்த
ஏழு-பத்தின் = எழுபது
பெரு வெள்ளம் = வெள்ளம் என்பது இங்கே பெரிய கணக்கில் அடங்காத என்று பொருளில் வந்தது. பெரு வெள்ளம் என்றால் எண்ணில் அடங்கா
மகர வெள்ளத்து இறுத்ததால் = மீன்கள் நிறைந்த தென் கடற்கரையை அடைந்தது.
கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.
பெரிய படை வந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். மற்ற புலவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் - கடல் போன்ற பெரிய படை, இதுவரை யாரும் காணாத பெரிய படை, அந்த படை நடந்து வந்த தூசி வானைத் தொட்டது என்றெல்லாம் எழுதி இருப்பார்கள்.
கம்பன் அவ்வளவு சாதாரண புலவன் இல்லை.
அவன் சொல்கிறான்
"இவ்வளவு பெரிய படை வடக்கில் இருந்து தெற்கில் வந்து விட்டது. எனவே, தெற்கில் பாரம் அதிகம் ஆகி தென் புறம் தாழ்ந்து விட்டது. அதனால் வட புறம் உயர்ந்து விட்டது. இமய மலையும் அது சார்ந்த இடங்களும் மேலே ஏறி வானைத் தொட்டது, விந்திய மலையும் அது சார்ந்த தென் பகுதியும் தாழுந்து விட்டது"
என்று.
கற்பனை பண்ணிப் பாருங்கள். முழு இந்தியாவை ஒரு சீசா பலகை போல ஆக்கிக் காட்டுகிறான். இந்த பிரமாண்டத்தை நம்மால் சிந்திக்க முடியுமா?
மனம் விரிய வேண்டும். சின்ன சின்ன விடயங்களை விட்டு விட்டு மனம் இப்படி ஒரு பிரமாண்டத்தை யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்க யோசிக்க மனம் விரியும். இப்படி பழக பழக எல்லாவற்றிலும் பெரிய இறைவனை உணர முடியும்.
மேலும் சிந்திப்போம்.
Conclusion is awesome 👍🏻
ReplyDeletevery nice narrative
ReplyDelete