Pages

Thursday, October 5, 2023

திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்

 திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்


ஒப்புரவு, அதாவது பொதுநலம் என்பது கட்டாயமா? எல்லோரும் செய்ய வேண்டுமா? செல்வம் இருப்பவர்கள், அரசியல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களால் செய்ய முடியும். 


சாதாரண மக்களால் செய்ய முடியுமா? நம் வீட்டை பார்க்கவே நமக்கு செல்வம் இல்லை. இதில் எங்கிருந்து ஊருக்கு நல்லது செய்வது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். 


இந்த வாதம் சரி என்று எடுத்துக் கொண்டால், உலகில் யாருமே செய்ய மாட்டார்கள். ஆயிரம் உரூபாய் உள்ளவன், பத்தாயிரம் இருப்பவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான் பத்தாயிரம் உள்ளவன், இலட்சம் உள்ளவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான். இப்படி போய்க் கொண்டே இருந்தால், உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனிடம் கேட்டால், நான் எவ்வளவு வரி கொடுக்கிறேன். அந்த வரி எல்லாம் அரசாங்கம் பொது நன்மைக்குத்தானே செலவழிக்கிறது. அதற்கு மேலும் வேறு நான் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேட்பான். 


இதை அறிந்த வள்ளுவர் சொல்கிறார், 


ஒப்புரவு என்பது கடமை இல்லை. சட்டம் இல்லை. யாரும் ஒருவர் மீது திணிக்க முடியாது.. ஆனால், நீயே சுற்றிமுற்றிப் பார். நீ சார்ந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார். அதை உயர்த்துவது அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவர் கடமை என்று உனக்கே புரியும். நீ செய், நான் செய் என்பதிற்கு பதில், எல்லோரும் செய்ய வேண்டும் என்ற இயற்கை அறிவு தானே வரும் உனக்கு. அந்த அறிவில் இருந்து நீ செய்வாய் என்கிறார். 


பாடல் 



இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_5.html

(pl click the above link to continue reading)



இடனில் = இடம் + இல் = இடம் இல்லாத. அதாவது ஒப்புரவு செய்ய இடம் இல்லமால், செல்வம் இல்லாமல் 


பருவத்தும் = இருக்கின்ற காலத்திலும் 


 ஒப்புரவிற்கு = ஒப்புரவு செய்ய 


 ஒல்கார் = தயங்க மாட்டார்கள் 


கடனறி = கடன் (கடமை) + அறி = அது கடமை என்று 


காட்சி யவர் = கண்டு கொண்டவர்கள், அறிந்தவர்கள்


அதாவது, ஒப்புரவு என்பது ஒவ்வொருவரது கடமை. 


பணம் இல்லை என்றால் என்ன? மனம் இருந்தால் போதும். அருகில் உள்ள பள்ளியில் சென்று பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம், வருடம் இரண்டு முறையாவது இரத்த தானம் செய்யலாம், தெருவில் நடந்து செல்லும் போது, பெரிய கல் சாலையில் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிப் விட்டுப் போகலாம், குப்பையை கண்ட இடத்தில் போடாமல், சுத்தமாக வைத்து இருக்கலாம், முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கலாம்...இதெல்லாம் சமுதாய நன்மை கருதித்தான்.


என்னிடம் பணம் இருக்கிறது என்று 24 மணி நேரமும் குளிர் சாதனத்தை ஓடவிடாமல், குறைத்து செலவழிக்கலாம். 


வீட்டில் ஏதோ விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்துக்கு ஒரு வேளை உணவை இலவசமாகத் தரலாம். ஒரு இடத்தில் எல்லோரும் இதைச் செய்தால், வருடம் முழுவதும் அந்த பிள்ளைகள் பசியால் வாடாமல் இருக்கும். 


இப்படி ஆயிரம் வழியில் ஒப்புரவு செய்யலாம்.. 



சமுதாய அக்கறை என்பது பணம் மூலம் தானம் செய்வது மட்டும் அல்ல. எவ்வளவோ வழியில் செய்யலாம். செய்ய வேண்டும். அது கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 




2 comments: