திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும்.
ஒப்புரவு என்றால் ஊருக்கு நல்லது செய்வது. தனி மனிதனுக்கு அல்ல, ஊருக்கு.
சரி, ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இறங்கினால், நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் சீக்கிரம் கரைந்து போய் விடாதா? அப்புறம் நமக்கு யார் உதவி செய்வார்கள்? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி வரும்.
இந்த மாதிரி சந்தேகம் வரும் போது நாம் இரண்டு விதத்தில் அதைப் போக்கிக் கொள்ளலாம்.
முதலாவது, இதுவரை அப்படி நாட்டுக்கு நல்லதுசெய்து ஏழையாகி துன்பப் பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆராயலாம். நாட்டுக்கு நல்லது செய்து நொடித்துப் போனவர் யார்?
எனக்குத் தெரிந்து கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நாட்டுக்காக தன் செல்வம் அனைத்தையும் கொடுத்து, சிறையில் கிடந்து துன்பப்பட்டார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், சொத்தோடு சுகமாக வாழ்ந்து இருக்கலாம்.
பணம் போனது என்னவோ உண்மைதான். அவர் வாங்கிய கப்பலும் போனது. வியாபாரம் நொடித்துப் போனது. இனிய வாழ்நாளை சிறையில் கழித்தார்.
என்ன ஆயிற்று?
இந்தத் தமிழனம் உள்ள வரை, அவர் புகழ் நிலைத்து நிற்கும் அல்லவா? ஒரு வேளை அவர் இது ஒன்றையும் செய்யாமல் இருந்து இருந்தால் அப்படி ஒரு ஆள் இருந்தார் என்றே தெரியாமல் போய் இருக்கும்.
இன்னொருவர், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். தன் சொந்த செலவில் ஊர் ஊராக சுற்றி அலைந்து, படாத பாடு பட்டு பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றினார். அவர் அப்படி ஊருக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எவ்வளவு நாம் இழந்து இருப்போம்.
தேடினால் இன்னும் பலர் கிடைக்கலாம். ஊருக்கு நல்லது செய்து வருந்தியவர் யாரும் இல்லை
இன்னொரு வகை, இதையெல்லாம் ஆராய்ந்து ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம்..
வள்ளுவர் சொல்கிறார்,
"ஒப்புரவு செய்வதானால் வறுமை வரும் என்று யாராவது சொன்னால், அந்த வறுமையை தன்னைக் விற்றாவது பெற வேண்டும்"
என்று.
பாடல்
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_10.html
(please click the above link to continue reading)
ஒப்புரவி னால் = ஒப்புரவு செய்வதானால்
வரும் = வருவது
கேடெனின்= கேடு என்றால்
அஃதொருவன் = அந்தக் கேட்டினை ஒருவன்
விற்றுக்கோள் = விலைக்கு வாங்கிக் கொள்ளும்
தக்கது உடைத்து = தகுதி உடையது
இந்த குறளுக்கு பரிமேலழகர் மிக நுணுக்கமாக உரை செய்து இருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம்.
"ஒப்புரவி னால்வரும் கேடெனின் " = ஒப்புரவு செய்வதனால் கேடு வரும் என்று கூறினால். "கூறினால்" என்றால் யார் கூறினார் என்ற கேள்வி வரும் அல்லவா. அப்படி ஒரு வேளை யாரவாது கூறினால் என்று பொருள் சொல்கிறார்.
அதாவது, யாரும் சொல்ல மாட்டர்கள். ஆனால், சில வம்பு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு வேளை கேட்கலாம். அப்படி யாராவது கூறினால்....
"விற்றுக்கோள் தக்கது உடைத்து": அந்த கேட்டினை விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடைத்து.. அவன் தான் ஒப்புரவு செய்து, எல்லாம் இழந்து நிற்கிறானே. அவன் எதை விற்பான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் சொல்கிறார். "தன்னை விற்றாவது" அந்த செயலை செய்ய வேண்டும்.
தன்னை விற்று செய்யும் காரியம் உலகில் ஒன்றும் இல்லை. எனவே, அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பதை குறிப்பால் உணர்த்தினார்.
இந்தக் குறளோடு, இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது.
நாளை, இதன் தொப்புரையை காண்போம்.
No comments:
Post a Comment