கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன்
உணர்சிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம்தான். இருந்தாலும், நாம் சில உணர்ச்சிகளை பெண்களுக்கு உள்ளது என்றும், சிலவற்றை ஆண்களுக்கு உள்ளது என்றும் சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்.
உதாரணமாக, ஆண் பிள்ளை அழக் கூடாது. சிறு வயதில் அழுதால் கூட "..சீ, என்ன இது பொம்பள பிள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்வார்கள். நாளடைவில் அழுவது அசிங்கம் என்று அந்தப் பையன் புரிந்து கொள்கிறான். அழுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்கிறான். அது மட்டும் அல்ல, தான் அழுதால் பலவீனம் என்று நினைத்தால் பரவாயில்லை. அழுகை என்பதே பலவீனம் என்று நினைக்கிறான். நாளை அவன் மனைவி அழுதாலும், அவள் பலவீனமானவள் என்று எடை போடும் அவன் மனது.
அது மட்டும் அல்ல, ஒரு துக்கம், கவலை என்றால் வெளியே சொல்லக் கூடாது, தைரியமாக இரு என்று சொல்லி வளர்க்கப் படுகிறான். சிறு வயதில் சரி. வயதாகும் போது பெரிய பிரச்சனைகள் வரும் போது, தனக்குத் தானே மனதில் வைத்துக் கொண்டு புளுங்குவான். மனைவி கேட்டால் கூட, "சும்மா இரு, ஒண்ணும் இல்ல" என்று எரிந்து விழுவான்.
இராமன் தனித்து நிற்கிறான். வானர படையை கொண்டு வந்தாகி விட்டது. இலங்கைக்குப் போக வேண்டும்.
கடலைப் பார்க்கிறான். சீதையை பிரிந்த துயர் அவனை வாட்டுகிறது.
எவ்வளவு பெரிய, வலிமையான ஆளாக இருந்தாலும், மனைவியைப் பிரிந்த துயர் அவனுக்கும் இருக்கும் தானே.
இரவெல்லாம் தூக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்து விட்டான். இன்னும் சூரியன் வெளி வரவில்லை. இராமன் வெளியே வந்து பார்க்கிறான். தாமரை மலர்கள் இன்னும் விரிய வில்லை...பொழுது இன்னும் சரியாக புலரவில்லை ....
பாடல்
பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்
சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_9.html
(pl click the above link to continue reading)
பொங்கிப் பரந்த = பொங்கி, பெரிதாக உள்ள
பெருஞ்சேனை = பெரிய சேனை, பெரிய படை
புறத்தும் அகத்தும் = உள்ளும் வெளியும், எங்க பார்த்தாலும்
புடைசுற்றச் = சுற்றி நிற்க
சங்கின் = சங்கைப் போல
பொலிந்த = பொலிவான, அழகான
கையாளைப் = கைகளை உடைய சீதையைப்
பிரிந்த பின்பு= பிரிந்த பின்பு
தமக்கு இனமாம் = தனக்கு நிகரனா (எது எதற்கு நிகர் என்று பின்னால் பார்ப்போம்)
கொங்கின் பொலிந்த = தேன் நிறைந்து விளங்கும்
தாமரையின் = தாமரைப் பூக்கள்
குழுவும் = கூட்டம் அத்தனையும்
துயில்வு உற்று = தூங்கி
இதழ் குவிக்கும் = இதழ் மூடி இருக்கும்
கங்குல் பொழுதும்= இரவு நேரத்திலும்
துயிலாத கண்ணன் = தூக்கம் வராத கண்களை உள்ள இராமன்
கடலைக் கண்ணுற்றான் = கடலை பார்த்தான்
கண்களுக்கு தாமரையை உவமையாக சொல்வார்கள். அதிகாலையில் குவிந்து இருக்கும் தாமரை மலர். தாமரை கூட தூங்குகிறது. இராமனின் கண்கள் தூக்கம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன.
எந்த ஒரு மன நிலையில் இருந்து யுத்தம் செய்யப் போகிறான் என்று கம்பன் காட்டுகிறான்.
இராமனின் சோகத்தை பாட்டில் வழிய விட இருக்கிறான் கம்பன்.
அவற்றையும் காண்போம்.
No comments:
Post a Comment