Pages

Tuesday, October 17, 2023

திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல்

 திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல் 


ஈகை, அதாவது மற்றவர்களுக்கு கொடுப்பது, நல்லது. 


சரி. ஏற்றுக் கொள்ளலாம். 


வாங்குவது நல்லதா? ஒருவர் நமக்கு ஏதோ ஒன்றைத் தருகிறார் என்றால், அதை வாங்கிக் கொள்வது நல்லதா? ஈகை என்றால் கொடுப்பதும், வாங்குவதும் இருக்கும் தானே. வாங்க யாரும் இல்லை என்றால் எப்படி ஈகை ஒன்று இருக்க முடியும்?


என்ன ஒரு சிக்கல். 


வள்ளுவர் சொல்கிறார், 


"வாங்குவது நல்லது என்று யாரவது சொன்னாலும், அதை வாங்காமல் இருப்பது நல்லது. கொடுப்பது தீமை என்று யாராவது சொன்னாலும், கொடுக்காமல் இருக்கக் கூடாது" 


பாடல்  


நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_17.html

(pl click the above link to continue reading)



நல்லாறு = ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி 


எனினும் = என்றாலும் 


கொளல்தீது = மற்றவர் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்வது தீது 


மேல்உலகம் = சொர்கமே 


இல்லெனினும் = இல்லை என்றாலும் 


ஈதலே நன்று = கொடுப்பதே சிறந்தது 


எனினும் என்ற சொல்லுக்கு "என்று சொல்பவர்கள் இருந்தாலும்" என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


வாங்குவது நல்லது, கொடுப்பது தீது என்று யாராவது சொன்னாலும், அதை நம்பக் கூடாது. வாங்குவது தீது, கொடுப்பது நல்லது என்கிறார். 


"எனினும்" என்பதில், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள், ஒருவேளை "சொன்னாலும்" என்று பொருள் கொள்ள வேண்டும். 


சில மதங்களில், அல்லது சில மத உட் பிரிவுகளில் பிச்சை பெற்று வாழ்வது சிறந்தது என்று ஒரு சமய கோட்பாடாகவே சொல்லப் படுகிறது. இந்த குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் யாசகம் பெற்றுத்தான் வாழ வேண்டும் என்று விதி செய்கிறது. 


வள்ளுவர் அதை மறுக்கிறார். நல்லது என்று சமயம் கூறினாலும், அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினாலும், "கொள்வது தீது" என்கிறார். 


உழைக்காமல், பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது ஏற்புடையது அல்ல என்பது அவர் கருத்து. 


மேலும், 


எதற்காக ஈகை செய்ய வேண்டும்? அப்படிச் செய்வது புண்ணியம், அப்படி புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அது ஈகையா? ஒன்றை எதிர்பார்த்து செய்வது ஈகை அல்ல. வியாபாரம். 


"மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று". சொர்க்கம் இல்லை என்றால், ஈகை செய்யக் கூடாதா? ஈகை செய்வதை நிறுத்தி விடவேண்டுமா?


இல்லை, ஈகை செய்வது சமுதாயக் கடமை. அதற்கு ஒரு பலன் இல்லை என்றாலும் செய்யத்தான் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. 


பிற்காலத்தில் அறிவியல் வளரலாம். சொர்க்கம் என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நிரூபணம் செய்யப் படலாம். அப்போது என்ன செய்வது? சொர்க்கம் இல்லை என்றால் ஈகை நின்று விடுமே. 


அதை யோசித்து வள்ளுவர் சொல்கிறார், "மேல் உலகம் இல்லை என்றாலும் ஈதல் செய்வது நல்லது" என்று. 


எனவே, யார் என்ன சொன்னாலும், எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஏற்பது இகழ்ச்சி, ஈகை செய்வது கடமை. 


 



No comments:

Post a Comment