Pages

Wednesday, October 18, 2023

நீதி நெறி விளக்கம் - கல்வி

 நீதி நெறி விளக்கம் - கல்வி 


ஒரு பொருளைச் சிறப்பித்து கூற வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைச் சொல்லி, அது போல இது இருக்கிறது என்று கூறுவது மரபு. 


உதாரணமாக, ஒரு பெண்ணின் முகம் அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், அது நிலவு போல இருக்கிறது, தாமரை மலர் போல இருக்கிறது என்று சொல்வது மரபு. 



கல்வின்னா என்ன, அதை அடைவதால் என்ன பலன், என்ன சுகம், அது இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று எப்படி விளக்குவது? படித்து அறிவு பெற்றால் நல்லது என்று சொன்னால் என்ன புரியும்?  மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான். 


அதைவிட சிறந்த ஒன்றை உதாரணமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்.


கல்வியை விட சிறந்தது எது ?


ஒருவனுக்கு வாழ்வில் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது எது என்று சிந்திக்கிறார். 


அன்புள்ள மனைவி, அருமையான பிள்ளைகள், தேவையான அளவு செல்வம்.. இதைத் தவிர வேறு என்ன என்ன வேண்டும். கல்வி இந்த மூன்றுக்கும் ஒப்பானது என்கிறார். 


பாடல் 



கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்

செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்

செல்வமும் உண்டு சிலர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_18.html


(pl click the above link to continue reading)



கல்வியே = கல்விதான் ஒருவனுக்கு 


கற்பு உடைப் பெண்டிர்  = கற்பு உள்ள மனைவி 


அப்பெண்டிர்க்குச் = அந்த அன்பான மனைவியின் 


செல்வப் புதல்வனே = அருமையான பிள்ளையே 


தீங்கவியாச் = கல்வியால் பிறக்கும் அழகான கவிதை 


சொல்வளம் = அந்தக் கவிதையில் உள்ள சொல் வளம் (அர்த்தம், அழகு, நயம்) 


மல்லல் வெறுக்கை = மிகுந்த செல்வம் 


யா = அவை 


மாண் அவை மண்ணுறுத்தும் = மற்றவருக்குச் சொல்லுதல் 


செல்வமும் = அந்த செல்வமும் 


உண்டு சிலர்க்கு = உண்டு சிலருக்கு 


அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், செல்வச் சிறப்பு இது ஒரு புறம். 


கல்வி, கல்வியால் விளையும் கவிதை, அந்தக் கவிதையை சபையில் மற்றவர்க்கு சொல்லும் ஆற்றல் இது மறு புறம். 


அன்பான மனைவி இருந்தாலும், பிள்ளை இல்லாவிட்டால் அந்த இல்லறம் சிறக்குமா?  கணவன் மனைவி அன்பாகத்தான் இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்றால் எவ்வளவு தவிக்கிறார்கள். எத்தனை கோவில், எத்தனை மருத்துவம் ? 


செல்வம் இருக்கலாம். அதை மற்றவருக்கு கொடுக்கும் குணம் எத்தனை பேருக்கு இருக்கும். படிப்பார்கள். இரசிப்பார்கள். அதை மற்றவர்களோடு அவர்களுக்கு புரியும்படி சொல்லும் திறம் எத்தனை பேருக்கு இருக்கும். 


கல்வி கற்றால் மட்டும் போதாது, அதை கவிதை/கட்டுரை போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்  ஆற்றலும் வேண்டும். அப்போதுதான் கல்வி பூரணப்படும் என்கிறார். 


மனைவியும் வேண்டும், பிள்ளைகளும் வேண்டும், செல்வமும் வேண்டும், அந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படவும் வேண்டும். 


கல்வியும் வேண்டும், அது கவிதை, கட்டுரையாக வெளிப்படவும் வேண்டும், அதுவும் மற்றவர்களுக்கு பயன்படவும் வேண்டும். 




1 comment: