Pages

Saturday, January 20, 2024

திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம்

 திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_20.html


திருக்குறள் என்ற நூலை மூன்று பெரும் பிரிவுகளாக வள்ளுவர் பிரிக்கிறார். 


அறம்

பொருள் 

இன்பம் 


என்று. இந்த மூன்றுக்கும் பால் என்று பெயர். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால். 


அறத்துப் பாலை மூன்று  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். 


பாயிர இயல், இல்லறவியல், துறவறவியல் என அப்பிரிவுகள் அழைக்கப்படும். 


நாம் பாயிரம், இல்லறம் பற்றி சிந்தித்து விட்டோம். 


இனி துறவுக்குள் நுழைகிறோம்.


துறவறம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். விரதம், ஞானம் என்று. 


இதில், விரதத்தில் பலவிதமான விரதங்கள் உண்டு என்றாலும் அதில் சிறப்பான சிலவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார். 


அதில் முதலாவது அருளுடைமை. 


அருளுடைமை என்றால் என்ன?


நமக்கு தொடர்பு உள்ளவர்கள் மேல் நாம் காட்டும் கருணை, பரிவு அன்பு எனப்படும். என் மனைவி/கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தோர் இதில் அடங்குவர்.


தொடர்பு இல்லாதவர்கள் மேல் காட்டும் கருணை அருள் எனப்படும். என் பையனுக்கு ஒரு மிட்டாய் வாங்கித் தருகிறேன். அதை ருசித்து அவன் மகிழ்கிறான். அதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். அப்போது அந்தக் கடை வாசலில் ஒரு ஏழைப் பையன் ஏக்கத்தோடு என் மகன் மிட்டாய் சாப்பிடுவதை பார்க்கிறான். அந்த ஏழைப் பையன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித்தந்தால் அது அருள். 


என் மகன் மேல் நான் செலுத்துவது அன்பு. 

அந்த ஏழைப் பையன் மேல் நான் செலுத்துவது அருள். 


அதில் முதல் குறள்

பாடல் 


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள


பொருள் 


அருட்செல்வம் = அருளாகிய செல்வம் 


செல்வத்துள் செல்வம் = செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் 


பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம் 


பூரியார் கண்ணும் உள = இழிந்தவர் இடத்திலும் இருக்கும் 


மேலோட்டமாய் பார்த்தால் மிக எளிமையான, பெரிய ஆழ்ந்த அர்த்தம் இல்லாத குறள் போலத் தெரியும். 


வாருங்கள்,உள்ளே செல்வோம். 


பொருள் செல்வம் புரிகிறது. வீடு, மனை, நகை, கார், வங்கிக் கணக்குகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


அது என்ன அருள் செல்வம்?  அருள் செய்யலாம். அது எப்படி செல்வமாக முடியும்?


செல்வம் என்றால் என்ன? ஏதோ ஒருவிதத்தில் நமக்கு இன்பம் தருவதைத்தானே நாம் செல்வம் என்போம். நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எப்ப அதை எடுத்தாலும் ஏதாவது ஒரு கோளாறு. ஓடுவது கிடையாது, ரொம்ப சத்தம் வரும், பிரேக் பிடிக்காது என்று இருந்தால், அதை செல்வம் என்போமா? "இந்தச் சனியனை கட்டிக்கொண்டு ..." என்று சலிப்போம் அல்லவா?  செல்வம் என்றால் சுகம் தர வேண்டும். 


பொருள் செல்வத்தால் சுகம் வரும். ஆனால், சிக்கலும் வரும். பயம் வரும். சில சமயம் அது நம்மை விட்டுப் போய் விடலாம். 


ஆனால், அனைத்து உயிர்களையும் போற்றி, அவைகளுக்கு நன்மை தருவதால் வரும் இன்பம் இருக்கிறதே, சுகம் இருக்கிறதே, அது தான் அருளலால் வரும் செல்வம். அது இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கு நன்மை தருவது. வீடு பேற்றையும் தரும். எனவே, அருளை செல்வம் என்றார். 


சரி, அதை செல்வம் என்று ஏற்றுக் கொண்டாலும், மற்ற எல்லா செல்வத்தையும் விட, இதுதான் உயர்ந்த செல்வம் என்று எப்படி கூற முடியும்?


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். தெருவில் நம் வண்டியைப் பார்த்து மற்றவர்கள் வியப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்கிறோம். வீடு, கார், நகை எல்லாம் அப்படித்தான்.


ஆனால், அதே போல் கார் நிறைய பேரிடம் இருந்தால் என்ன ஆகும். நாம் சாதாரண ஆளாகி விடுவோம். அதில் ஒரு பெருமையும் இல்லை. பணமும் பொருளும் யார் வேண்டுமானாலும் சேர்த்து விடலாம். திருடன், அயோக்கியன் இடம் கூட பெரும் செல்வம் இருக்க வாய்ப்பு உண்டு. 


இந்த அருளாகிய செல்வம் இருக்கிறதே, அது எல்லோரிடமும் இருக்காது. 


அருள் செல்வம் பெற முதலில் அறிவு வேண்டும். மன மாசுகள் நீங்க வேண்டும், அன்பு நிறைய வேண்டும், அருள் பெருக வேண்டும்.  எளிதான காரியம் அல்ல. ஒருவனிடம் அருள் செல்வம் இருக்கிறது என்றால், அது மற்றவர்களால் எளிதாக அடைய முடியாத செல்வம். எனவே அது உயர்ந்த செல்வம். 


அது மட்டும் அல்ல, எவ்வளவு பொருள் சேர்த்தாலும், நாம் இறந்த பின் அதில் ஒரு குன்றுமணியைக் கூட கொண்டு செல்ல முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் செல்ல முடியும். 


ஆனால், அருள் செல்வம் இருக்கிறதே, அது மறுமைக்கும் பயன் தரும். 


எனவே அது உயர்ந்த செல்வம். 


மேலும் சிந்திப்போம். 




2 comments:

  1. விளக்கம் விரிவாக எளிதாக உள்ளது.

    ReplyDelete