Pages

Sunday, January 21, 2024

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

 

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_21.html



தமிழில் பல புலவர்கள் பாடிய பாடல்கள், ஒரு தனிப்பட்ட நூலாக அல்லாமல் தனிப்பாடல் திரட்டாக இருக்கின்றன. மிகவும் சுவையான, எளிமையான பாடல்கள். 


அதில் பலபட்டடைச் செக்கநாதப் புலவர் என்பவர் என்பவர் பாடிய ஒரு அழகான பாடல். 


ஒரு பெரிய ஆளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால், அந்த வீட்டு அம்மாவைப் பிடித்து, "ஐயாகிட்ட நீங்க தான் எப்படியாவது எடுத்துச் சொல்லி, இதை நடத்திக் கொடுக்கணும்" என்று சிலர் வீட்டுத் தலைவி மூலம் காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பார்கள். 


அவ்வளவு ஏன், பையன் கொஞ்சம் பணம் வேண்டும் என்றால், அம்மாவிடம் சொல்லி,  "அப்பா கிட்ட சொல்லி எனக்கு பணம் வாங்கித்தா" என்று கேட்பது இல்லையா? 


அம்மாவுக்கு இளகிய மனது. அப்பாவுக்கு கொஞ்சம் கரடு முரடான மனது. 


சொக்கநாத புலவர் பார்வதியிடம் கூறுகிறார்....


"முத்துப் பந்தலின் கீழ் மென்மையான பஞ்சனை மேல் உன் அருகில் வந்து "எனக்கு ஒரு முத்தம் தா " என்று உன் கணவன் உன்னைக் கொஞ்சும் போது, நீ அவரிடம் என் குறைகளை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்லேன். சொன்னால் உன் வாய் முத்து உதிர்ந்து விடுமா ?"


பாடல் 

 


"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,

     உன் அருகு இருந்து,

"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்

     வேளையில், நித்தம் நித்தம்

வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்

     மெல்ல மெல்லச் சொன்னால்,

வாய்முத்தம் சிந்திவிடுமோ?

     நெல்வேலி வடிவன்னையே."



பொருள் 

"ஆய்முத்துப்  = ஆராய்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் கோர்த்த 


பந்தரின் = பந்தலின் கீழ் 


மெல்லணை = மெல்லிய படுக்கை 


மீது  = மேல் 


உன் அருகு இருந்து = உனது அருகில் வந்து 


"நீ முத்தம் தா"  என்று = நீ முத்தம் தா  என்று 


 அவர் கொஞ்சும் = அவர் உன்னைக் கொஞ்சும் போது 


வேளையில் = அந்த வேளையில் 


நித்தம் நித்தம் = தினமும் 


வேய்முத்தரோடு = மூங்கில் முத்து போன்ற சிவனிடம் 


என் குறைகள் எல்லாம் = என்னுடைய குறைகள் எல்லாம் 


மெல்ல மெல்லச் சொன்னால் = மெல்ல மெல்ல சொன்னால் 


வாய்முத்தம் = உன் வாயில் உள்ள முத்தம் 


சிந்திவிடுமோ? = சிந்தி விடுமோ ?



     நெல்வேலி வடிவன்னையே."


1 comment:

  1. முத்து முத்தல் என்று வருவது அழகாக இருக்கிறது

    ReplyDelete