திருக்குறள் - பொருளும், அருளும்
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினாலும், திறமையாலும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆனவர்கள் உண்டு. பெரிய செல்வந்தர்கள் கூட தொழிலில் நட்டப்பட்டு, இருப்பதை எல்லாம் இழந்து, பின் மறுபடியும் பொருள் ஈட்டி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களும் உண்டு.
பொருள் இல்லாவிட்டால் பரவாயில்லை. எப்படியாவது சம்பாதித்து விடலாம். நிறைய பேர் அப்படி சம்பாதித்துக் காட்டி இருக்கிறார்கள்.
ஆனால், அருள் இல்லாவிட்டால், ஒருக்காலும் மீண்டும் அருள் உடையவர்களாக ஆக முடியாது என்கிறார் வள்ளுவர்.
பாடல்
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது
பொருள்
பொருளற்றார் = பொருள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள்
பூப்பர் ஒருகால் = ஒரு காலத்தில் செல்வத்தை சம்பாதித்து விட முடியும்
அருளற்றார் = அருள் இல்லாதவர்கள்
அற்றார் = அருள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்
மற்று ஆதல் அரிது = மீண்டும் அருள் உடையவர்களாக மாறுவது கடினம்.
ஏன் அருள் இல்லாதவர்கள் மீண்டும் அருள் உள்ளவர்களாக மாற முடியாது?
அருள் இல்லாதவர்கள், அருள் அற்ற வழிகளில் சென்று பல பாவங்களைச் செய்வார்கள். தீயவர்களோடு சேர்ந்து கொண்டு அருள் அற்ற செயல்களைச் செய்வார்கள்.
அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அவர்கள் மீள நினைத்தால் கூட, கூட்டாளிகள் விட மாட்டார்கள். எங்கே இவன் வெளியே போய் நம்மைக் காட்டி கொடுத்து விடுவானோ என்று அஞ்சி அவனை வெளியே விட மாட்டார்கள்.
மேலும், அருள் அற்ற தீய செயல்களை செய்யும் போது, ஒருவன் அறியாமலேயே அவனுக்கு அதில் ஒரு உருசி வந்து விடும். ஒரு முறை இலஞ்சம் வாங்கி பொருள் சேர்த்து விட்டால், "அட, இது எளிய வழியாக இருக்கிறதே...இப்படியே இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன " என்று தோன்றும். நிறைய செய்வான். மாட்டிக் கொள்வான். சிறை செல்ல வேண்டி வரும். எங்கிருந்து மீள்வது?
இப்போதைக்கு கொஞ்சம் அப்படி இப்படி இருந்து பணம் சேர்ப்போம். பின்னால், நன்கொடை, கோவில், அன்ன தானம் என்று செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார் வள்ளுவர்.
அந்தப் பாதையில் போகாதே. போனால் திரும்பி வர மாட்டாய் என்று.
அருள் அற்ற எந்த செயலை செய்யவும் அஞ்ச வேண்டும். இது நம்மை எங்கே கொண்டு செல்லுமோ, திரும்பி வர முடியாதே என்று அஞ்ச வேண்டும்.
சிலருக்குத் தோன்றும், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று.
முயன்று பார்க்க வேண்டும். செல் போன் பார்ப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா? காப்பி குடிப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?
எனவே, அருள் அற்ற வழியில் ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது.
உங்கள் பதிவுகளனைத்தையும் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. அரும்பணி தொடர்க!
ReplyDeleteஅருமை
ReplyDelete