விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்
உறவும் நட்பும் நல்லதா?
நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா? தனி மரம் தோப்பாகுமா? என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கிறோம்.
அது சரிதானா?
நட்பினாலும், உறவினாலும் அழிவு வருவது இல்லையா? என்று விவேக சிந்தாமணி கேள்வி எழுப்புகிறது.
பாடல்
அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்
இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ
சீர் பிரித்த பின்
அருமையும் பெருமைதானும் அறிந்து உடன் படுவர் தம்மால்
இருமைம் ஒருமையாகி இன்புறற்கு ஏதுவுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் நட்பால்
ஒருமையில் நரகம் எய்தும் ஏதுவே வேய் உயரு மன்னோ
பொருள்
அருமையும் = அருமையான, சிறப்பான
பெருமைதானும் = பெருமைகளும்
அறிந்து = அறிந்து
உடன் படுவர் தம்மால் = நட்பாக இருப்பவர்களால்
இருமையும் = இந்தப் பிறவியும், மறு பிறவியும்
ஒருமையாகி = ஒன்றாகி
இன்புறற்கு = இன்பம் அடைவதற்கு
ஏதுவுண்டாம் = வழி உண்டு
பரிவிலாச் = பரிவு, பாசம் இல்லாதா
சகுனி போலப் = சகுனியைப் போல
பண்பு கெட்டவர்கள் நட்பால் = பண்பு இல்லாதவர்கள் நட்பினால்
ஒருமையில் = உறுதியாக
நரகம் எய்தும் ஏதுவே = நரகத்தை அடையும் வழி அதுவே
வேய் உயரு மன்னோ = மூங்கில்கள் உயர்ந்த காட்டினை உள்ள நாட்டினை ஆளும் அரசனே
அறிவும், பெருமையும் உள்ள நண்பர்களால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகுனி போன்ற நண்பர்கள் வாய்த்தால் வாழ்க்கை நரகமாகி விடும்.
நாம் அந்த எல்லைகைளைத் தொட வேண்டாம்.
இன்றைய சகுனிகள் நம் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பவர்கள். கண்ட கண்ட whatsapp ஐ forward செய்பவர்களும் சகுனிகள்தான். நம் நேரத்தை வீணடிப்பவர்கள். நாம் அந்த நேரத்தை வேறு நல்ல வழியில் செலவிட்டு இருந்தால், நமக்கு நன்மைகள் கிடைத்து இருக்கும். அதை தடுப்பவர்கள் அந்த சகுனிகள்.
வெட்டிப் பேச்சு, அரட்டை, தவறான செய்திகளை பரப்புவது, பேசுவது இதெல்லாம் கூட சகுனித்தனம் தான்.
நாம் அப்படி ஏதாவது செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம்மால் நம் நண்பர்கள் பயன் அடைகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்வை நாம் இனிமையாக்குகிரோமா என்று சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment