Pages

Tuesday, February 13, 2024

திருக்குறள் - அருளற்றானின் அறம்

 திருக்குறள் - அருளற்றானின் அறம் 


பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். 


அந்த தர்ம காரியங்களுக்குப் பின்னால் இருப்பது உயிர்கள் மேல் உள்ள அருள் அல்ல. என்னிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்ட, அரசியல் செல்வாக்குப் பெற, தனக்குப் புகழ் சேர்க்க என்று பல காரணங்கள் இருக்கும். 


அவர்கள் செய்வதெல்லாம் அறத்தில் சேராது. அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது அறத்தில் சேராது.  


அது எப்படி என்றால், சில சமயம் சில மடையர்கள் வாயில் இருந்து அபூர்வமாக சில நல்ல தத்துவங்கள் வருவதைப் போல. போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள். "அட...இது இவனுக்கு எப்படித் தெரியும்" என்று ஆச்சரியப்படுவோம். அது அவன் இயற்கை அறிவு அல்ல. ஏதோ வந்து விழுந்தது. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 


ஏறல் எழுத்துப் போல என்பார்கள். கடற்கரையில் நண்டு அங்கும் இங்கும் அலையும். சில சமயம் அதன் தடம் 'ட' மாதிரி இருக்கும், சில சமயம் 'ப' மாதிரி இருக்கும். உடனே, "ஆஹா, இந்த நண்டுக்கு தமிழ் தெரியும்" என்று யாராவது சொல்லுவார்களா? 


அது போல முட்டாள் சொல்லும் மெய்ப் பொருளும், அருள் இல்லாதவன் செய்யும் அறமும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்


பொருள் 


தெருளாதான் = தெளிவு இல்லாதவன் 


மெய்ப்பொருள் = உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்ட உண்மைப் பொருளை 


கண்டற்றால் = கண்டு சொன்னால் 


தேரின் = நினைத்துப் பார்த்தால் 


அருளாதான் = அருள் இல்லாதவன் 


செய்யும் அறம் = செய்யும் அறம் போன்றது 


ஓட்டு வேண்டும் என்று தலைக்கு இவ்வளவு பணம் என்று ஒரு அரசியல்வாதி கொடுக்கலாம். அது அறமா?  இல்லை. 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 


என்றார் வள்ளலார்.  அவர் ஒன்றும் செய்யவில்லை. வாடினார். அது அவர் அந்த பயிரின் மேல் கொண்ட அருள். 


அருள்தான் அடிப்படை. அதன் வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். செயலை வைத்து தீர்மானிக்க முடியாது. மனதை வைத்து தீர்மானிக்க வேண்டும். 




3 comments:

  1. Sabaash 👏👏👏

    ReplyDelete
  2. பேருக்காக ஒரு பள்ளி கட்டினாலும் அதன் பயன் நன்மையை தரும்போது, தெருளாதான் கண்ட மெய்ப்பொருள் என்று கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விள‌க்க‌ம்

      Delete