கலித்தொகை - எனக்கு எப்படித் தெரியும் ?
அவளோடு இனிக்க இனிக்க பேசி, காதல் செய்து, அவளைக் கூடிக் கலந்த பின் அவளை விட்டு பொருள் தேடி வெளிநாடு சென்று விடுகிறான். இன்று போல் அன்று தொலைபேசி, மின் அஞ்சல், whatsapp எல்லாம் கிடையாது.
அவனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. அவள் பதறுகிறாள். ஒரு வேளை வர மாட்டானோ? வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே இருந்து விடுவானோ? என்னை மறந்து இருப்பானோ என்றெலாம் அவள் கவலைப்படுகிறாள்.
" நீ என்ன அன்று மென்மையாக பேசி, சிரித்து, கலந்த போது, அது எல்லாம் பொய்யாகப் போகும் என்று எனக்கு எப்படித் தெரியும். இன்று ஊரே நம்மைப் பற்றிப் பேசுகிறது. உன் மனம் கல் மனம் தான் போல் இருக்கிறது. சுட்டெரிக்கும் இந்த உச்சி வெயிலை விட கொடுமையான பாலை நிலத்தின் வழியே நீ செல்கிறாய். இப்படி என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனம் வந்தது. பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாத உன்னை எப்படி ஒரு நல்ல ஆண் மகன் என்று நான் சொல்ல முடியும் ?
நீ போ. உன் இஷ்டத்துக்குப் போய் கொள். போயி, அறம் அல்லாத செய்து (என் மேல் அன்பு இல்லாததால் அது அறம் அல்லாதது) நிறைய பொருள் சேர். அது தானே உனக்கு வேண்டும்? அப்படி ஓடி ஓடி பொருள் சேர்க்கும் போது, நம் ஊரில் இருந்து யாராவது அங்கு வந்தால், அவர்களிடம் என்னைப் பற்றி விசாரிக்காதே. விசாரித்தால் உன் பொருள் சேர்க்கும் வினை தடை படும். ஏன் தெரியுமா? நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் உன்னிடம் சொல்லுவார்கள். அந்தக் கவலை உன்னை வருத்தும். உன் ஊக்கம் குறையும்...."
ஒரு இளம் பெண்ணின் கவலை, ஏக்கம், பயம், வெறுப்பு, சந்தேகம் எல்லாம் குழைத்து குழைத்து தீட்டிய பாடல்.
பாடல்
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; 5
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின், 10
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.
செவ்விய = நேரம், தருணம், என்னோடு பழகிய அந்தக் காலத்தில்
தீவிய சொல்லி = இனிமையாகப் பேசி
அவற்றொடு = அப்படி பேசிக் கொண்டே
பைய = மெல்ல
முயங்கிய = என்னோடு கலந்த
அஞ்ஞான்று = அன்று
அவை எல்லாம் = அது எல்லாம் (பேசியதும், பழகியதும்)
பொய்யாதல் = பொய்யாகும்
யான் = நான்
யாங்கு அறிகோ மற்று? = நான் எப்படி அறிவேன் (அவ்வளவு வெகுளி)
ஐய! = ஐயனே
அகல் நகர் = ஊர் எல்லாம்
கொள்ளா = பேசி மாளாமல்
அலர் = புறம் பேசுதல்
தலைத் தந்து = வாய்ப்பு தந்து (ஊருக்கே தெரியும். எல்லோரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள்)
பகல் முனி = உச்சி வெயிலை விட
வெஞ் சுரம் = கடுமையான
உள்ளல் அறிந்தேன்; = உன் உள்ளத்தை இன்று அறிந்து கொண்டேன்
மகன் அல்லை மன்ற = ஒரு பெண்ணின் தவிப்பை, அன்பை அறிந்து கொள்ள முடியாத உன்னை ஆண் மகன் என்று கூற மாட்டேன்
இனி செல் = இனி நீ போ
இனிச் சென்று = நீ போயி
நீ செய்யும் வினை முற்றி = உன் வேலையை பார்த்துக் கொண்டு
அன்பு = அன்பும்
அற மாறி = அறமும் மாறி
'யாம் உள்ளத் துறந்தவள் = "என் உள்ளத்தை விட்டு நான் தூர எறிந்தவள்"
பண்பும் அறிதிரோ?' = "எப்படி இருக்கிறாள்"
என்று = என்று
வருவாரை = நம் ஊரில் இருந்து அங்கு வருபவர்களை
என் திறம் = என்னைப் பற்றி
யாதும் வினவல் = எதுவும் கேட்காதே
வினவின் = கேட்டால்
பகலின் விளங்கு = பகலை விட சிறந்து ஒளி விடும்
நின் செம்மல் = உன் பெருமை
சிதைய = சிதையும்
தவல் = குறைபடும்
அருஞ் செய் = அருமையான உன் வேலை
வினை முற்றாமல் = முற்றுப் பெறாமல்
ஆண்டு ஓர் = அப்படி ஒரு
அவலம் = துன்பம்
படுதலும் உண்டு = நிகழ்வும் வாய்ப்பு இருக்கிறது
உன் வேலை தடை படும் ஏன் என்றால், நான் உன் பிரிவைத் தாங்காமல் இறந்து விட்டேன் என்று சொல்லுவார்கள். அதைக் கேட்டு உன் முனைப்பு தடைபடும் என்கிறாள்.
படித்த பின் மனம் கனக்கிறது அல்லவா?
எப்படிக் குமைகிறாள் !
ReplyDelete