திருக்குறள் - மறைந்து இருந்து பறவையைப் பிடித்தால் போல்
போலிச் சாமியார்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? போலியாக துறவி வேடம் போடுவதால் அவர்களுக்கு என்ன பயன்? என்ன இலாபம் கிடைக்கிறது? ஏதோ ஒன்று கிடைப்பதால்தானே அவர்கள் அந்தப் போலி வேடத்தைப் போடுகிறார்கள் ?
முதலில், மக்கள் மத்தியில் ஒரு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் கிடைக்கிறது. அவர்களைப் பார்க்க மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
இரண்டாவது, செல்வம். மக்கள் காணிக்கை என்ற பெயரில் தங்கள் செல்வத்தை அந்தப் போலிச் சாமியார்களுக்கு தருகிறார்கள். இன்று கூட துறவிகள் என்று சொல்பவர்கள் பெரிய சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். நிலம், தங்கம், வங்கியில் கோடிக்கணக்கான பணம், என்று பெரிய மிராசுதார்கள் போல் இருக்கிறார்கள்.
மூன்றாவது, பெண்கள். iஇது பற்றி மேலும் சொல்ல வேண்டாம்.
துறவி என்ற போர்வையில் மறைந்து கொண்டு, அவர்கள் இவற்றை எல்லாம் அடைகிறார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால், புதரில் மறைந்து இருந்து வேடன் பறவைகளை வலை விரித்துப் பிடிப்பது போல இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பாடல்
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று
பொருள்
தவம்மறைந்து = தவ வேடத்தின் பின் மறைந்து கொண்டு
அல்லவை செய்தல் = அந்த தவக் கோலத்துக்கு ஒவ்வாதன செய்தல்
புதல்மறைந்து = புதரில் மறைந்து இருந்து
வேட்டுவன் = வேடன்
புள்சிமிழ்த்து அற்று = பறவைகளைப் பிடிப்பது போல
பறவைகளுக்குத் தெரியாது வேடன் மறைந்து இருக்கிறான் என்று. தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.
இன்றும் கூட பல சாமியார்களை பார்க்கப் போகும் சாதாரண மக்களைக் கேட்டால் "அவர் போல உண்டா, அவர் சொல்வது அப்படியே நடக்கும், அவர் ஒரு நடமாடும் தெய்வம்" என்றுதான் சொல்லுவார்கள்.
வேடத்தின் பின் இருக்கும் வேடனை அவர்களுக்குத் தெரியாது. அப்பாவி மக்கள்.
போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
No comments:
Post a Comment