திருக்குறள் - பற்றற்றேம் என்பார்
ஒரு தவறு செய்தால் அதனால் என்ன விளையும் என்று தெரிந்தால் தவறு செய்ய மாட்டோம் அல்லவா?
கொலை செய்தால் தூக்கில் போடுவார்கள் என்று தெரிந்ததால் கொலை செய்ய அஞ்சுவார்கள். கொலை செய்தால் நூறு ரூபாய் அபராதம் என்று இருந்தால் நிறைய கொலை செய்வார்கள் அல்லவா?
உண்மையிலேயே துறவு மேற்கொள்ளாமல், துறந்து விட்டோம் என்று பொய் வேடம் போட்டால் என்ன ஆகும் ? அதன் விளைவு என்ன?
வள்ளுவர் கூறுகிறார், "பொய்யாக துறவி வேடம் போடலாம், அதனால் பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கலாம். ஆனால், பின்னால் ஐயோ இதை ஏன் செய்தோம் என்று நினைத்து நினைத்து வருந்துவாய்" என்று.
பாடல்
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்
பொருள்
பற்றற்றேம் = பற்றுகளை விட்டு விட்டேன்
என்பார் = என்று சொல்லுவார்
படிற்றொழுக்கம் = மறைந்து செய்யும் செயல்கள்
எற்றெற்றென்று = எற்று எற்று என்று. ஏன் செய்தோம், ஏன் செய்தோம் என்று
ஏதம் = துன்பம்
பலவும் தரும் = பலவற்றையும் தரும்.
அது என்ன துன்பம் என்று சொல்லவில்லை.
ஏன் சொல்லவில்லை என்று யோசிக்கலாம்.
இந்த மாதிரி துன்பங்கள் வரும் என்று ஒருவேளை சொல்லி இருந்தால், "அவ்வளவுதானே, நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று சில பேர் கிளம்பி விடுவார்கள்.
மாறாக, "செய்யாதே, செய்தால் என்னவெல்லாம் துன்பம் வரும் என்று எனக்கே தெரியாது" என்று சொல்லி பயமுறுத்துகிறார் வள்ளுவர்.
இதில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கும் போல என்று அந்தத் தவற்றினை செய்ய நினைப்பவன் கொஞ்சம் அஞ்சி பின் வாங்கலாம்.
மேலும்,
"பற்றற்றம் என்பார்" என்பதில், பற்றை விடமால், விட்டுவிட்டேன் என்று சொல்லுபவர்கள் என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். வாயால் சொல்லுவார்கள். உண்மையில் விட்டிருக்க மாட்டார்கள் என்று பொருள். பற்றுகளை விட்டவன் ஏன் அதைச் சொல்லிக் கொண்டு திரியப் போகிறான்? "ஹா அவர் பெரிய துறவி" என்று எல்லோரும் புகழ வேண்டும் என்ற ஆசையினால், பற்றினால் தானே சொல்லித் திரிவார்கள்? உண்மையிலேயே பற்றினை விட்டவன் ஊரெல்லாம் சொல்லித் திரிய மாட்டான்.
பட்டினத்தார் "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே" என்ற ஒரு வாசகத்தை படித்தவுடன் துறவியானார். அவரின் கணக்கப் பிள்ளை அவரிடம் வந்து "இந்த சொத்தெலாம் என்ன செய்யட்டும் " என்று கேட்டார்.
பட்டினத்தார், யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொலல்வில்லை.
"எல்லாத்தையும் எடுத்து தெருவில் போடு யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொண்டு போகட்டும் "என்றார். பற்றினை விட்டு விட்டால் பின் அந்தப் பொருள் யாருக்குப் போனால் என்ன?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
துறப்பதைத் தவிர வாழ்வில் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்ன? வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் துறவறத்தை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இருந்தும், கணவன், மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், வீடு வாசல் என்று மனம் பற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படியா, விடமாட்டாயா, இந்தா பிடி துன்பம் என்று வாழ்க்கை துன்பத்தைத் தருகிறது. இல்லை, அப்படியும் விடமாட்டேன் என்று அடம் பிடித்தால் மேலும் மேலும் துன்பத்தைத் தந்து கொண்டே இருக்கிறது. பற்றை விடும் வரை வாழ்க்கை விடுவதில்லை நம்மை.
இதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு நல்லது.
விட மாட்டேன், அது எப்படி விட முடியும் என்று இறுகப் பற்றிக் கொண்டு இருந்தால், அடி விழுந்து கொண்டே இருக்கும். பிடியை விடும் வரை அடி தொடரும்.
துறவறம், எளிதான அடுத்த படி.
No comments:
Post a Comment