என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி...
என்ன எப்ப பார்த்தாலும் அற இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தானா என்று கேட்பவர்களுக்கு, இன்று ஒரு புதிய முயற்சி.
தமிழ் திரைப்படப் பாடல்களிலும் மிக மிக இனிமையான, இலக்கிய தரம் உள்ள பாடல்கள் உண்டு.
பாடல்களின் இசைப் பின்னணி, பாடுபவர்களின் குரல், அந்தப் பாடலுக்கு நடித்தவர்களின் பின்னணி, பாவங்கள், அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம் என்று பல விடயங்கள் குறுக்கிடுவதால், பாடலின் முழு அர்த்தத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
எனக்குப் பிடித்த சில பாடல்களை, உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.
முதல் பாடல், அந்தமான் காதலி படத்தில், கண்ணதாசன் எழுதிய "நினைவாலே சிலை செய்து" என்ற பாடல்.
நாம் கடையெழு வள்ளல்களைப் பற்றி பேசும் போது, முல்லைக்கு தேர் தந்தான், மயிலுக்கு போர்வை தந்தான் என்றெல்லாம் படிக்கிறோம். அதெல்லாம் என்ன பெரிய கொடை. என் காதலி முல்லைப் பூவுக்காக தன் கூந்தலையே தந்திருக்கிறாள். தேர் என்ன பெரிய தேர், தன் தலையையே கொடுத்தவள் என் காதலி.
முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
குழந்தையை கையில் வைத்து இருந்தால் கை வலிக்கிறது. கீழே இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது என்பார்கள்.
என் மனைவி குழந்தையை ஒரு கணம் கூட கீழே விட மாட்டாள். எப்போதும் கையிலேயே தூக்கிக் கொண்டு நடப்பாள். அவ்வளவு அன்பு.
"பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ".
பெண்களின் குரல் இயற்கையிலேயே இனிமையாக இருக்கும். அதுவும் காலையில் எழுந்து, முகம் கழுவி, பொட்டு வச்சு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே காப்பி போடுவது, காலை சமையல் செய்வது என்று இருக்கும் போது அந்த குரலின் இனிமை ...ஒரு பூபாள இராகம் மாதிரி வந்து என் காதில் விழுகிறது. அதைக் கேட்ட பின் தான் நான் எழுவேன்....
"அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்"
ரொம்ப நேரம் கண் விழித்து வேலை செய்தால் கண்கள் சிவந்து போய் விடும். அயல் நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சொல்வார்கள், "red eye flight" என்று. தூங்காமல் பயணம் செய்தால் கண்கள் சிவந்து போய் விடும்.
ஒரு சில மணி நேரத்துக்கே அப்படி என்றால், நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் கண் மூடாமல் இருந்தால் எப்படி இருக்கும்.
போன காதலன் வரவில்லை. அவன் வரவை ஒவ்வொரு நாளும் அவள் எதிர் நோக்கி இருக்கிறாள். எங்கே கண் மூடினால், அந்த நேரத்தில் அவன் வந்து விடுவான், அவன் வரும் போது அவனை பார்க்க முடியாமல் போய் விடுமோ, அந்த நொடியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், கண் மூடாமல் அவன் வரும் வழி பார்த்து காத்து இருக்கிறாள்.
அப்படி இருந்ததில் அவளின் கண்கள் சிவந்து போய் விட்டன. எப்படி ? ஏதோ ஒரு ஓரத்தில் அல்ல. முழு கண்ணும் சிவந்து போய் விட்டது.
"செவ்வானம் ஆனேன் உனைத் தேடித் தேடி"
கோல மாவில் கோலம் போட்டால் நன்றாக பளிச்சென்று வெள்ளையாக இருக்கும். கண்ணீரில் உள்ள உப்பு காய்ந்து போனாலும், அது வெள்ளையாக காட்சி தரும். அவள் அழுது அழுது, கண்ணீர் கன்னத்தின் வழி ஓடி, காய்ந்து, அந்த உப்பு பொறிந்த கன்னம், அதில் கோலம் போட்ட மாதிரி இருக்கிறதாம்.
"கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்"
கோவில் கட்டும் போது அதில் வைக்க வேண்டிய சிலைகளும் செய்வார்கள். சிலைகள் செய்து முடித்த பின், கோவில் வேலை பாக்கி இருக்கும். சிலை வெளியே, வெயிலில், மழையில் கிடக்கும். அதை யாரும் வணங்குவது இல்லை. அதற்கு ஒரு பூஜை, அபிஷேகம் எல்லாம் கிடையாது. அதே சிலை, கோவிலுக்குள் பிரதிஷ்டை பண்ணிய பின், எல்லோரும் பக்தியோடு வணங்குவார்கள்.
அவளுடைய நினைவையே சிலையாக செய்து வைத்துக் கொண்டு அவன் காத்து இருக்கிறான். அவளோடு பேசியது, விளையாடியது, கட்டிப் பிடித்தது, என்று ஒவ்வொரு நினைவும் ஒரு சிலை போல் தத்ரூபமாக அவன் மனதில் இருக்கிறது. என்ன பலன்? அவள் இல்லாத அவளின் நினைவால் ஒரு பலனும் இல்லை. அவள் வந்து விட்டால், அவளோடு அவற்றை சொல்லி சொல்லி மகிழலாம்.
"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்,
திருக் கோவிலே ஓடி வா"
நீ தான் கோவில். நீ இருந்தால்தான் என் நினைவுகளுக்கு, ஒரு அர்த்தம் பிறக்கும்.
ஊரை விட்டுப் போனவன் இன்னும் வரவில்லை. என்ன ஆனானோ என்று தெரியவில்லை. தெருவில் போகும் அவனைப் போன்ற சாயலில் உள்ள ஆண்களை பார்க்கும் போது அவளுக்கு மனதுக்குள் ஒரு ஆசை, அது அவனாக இருக்கக் கூடாதா என்று. அவள் மனதில், அவன் எப்போதும் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறான். பார்க்கும் இடம் எல்லாம் அவனாகவே தெரிகிறது. அவள் இருக்கும் வரை அவனும் இருப்பான்.
"என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி"
அவள் கண்கள் அவன் இருக்கிறான், இருக்கிறான், அங்கே இருக்கிறான், அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ என்று அவன் உயிரோடு இருப்பதாகவே கருதிக் கொண்டு பார்த்து அலைகிறது.
வாய் தான் பாடும். கண்களும் பாடும்.
கண் மூடி இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
உள்ளுக்குள் ஏதோ உருகி ஓடுவது போல் இருக்கும்.
Arumai
ReplyDelete