Pages

Thursday, October 24, 2024

திருக்குறள் - ஆவது போலக் கெடும்

 திருக்குறள் - ஆவது போலக் கெடும் 


என்னதான் அறம் சொன்னாலும், ஊருக்குள்ள அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான். ஆள், அம்பு, சேனை, அதிகாரம், புகழ் என்று அனுபவிக்கிறார்கள். உண்மை, நேர்மை, அறம் என்று வாழ்பவர்கள் அப்படி ஒன்றும் பெரிதாக பலன் அடைந்த மாதிரி தெரியவில்லை. 


இதை எல்லாம் பார்க்கும் போது, என்ன பெரிய அறம், நாமும் குறுக்கு வழியில் சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்ற சலிப்பு யாருக்கும் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"தீய வழியில் வரும் செல்வம், முதலில் பெரிதாக வளர்வது போல் தோன்றும். ஆனால், பின்னாளில், பெரிய கேட்டினைத் தரும்"


என்று. 


பாடல் 


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்


பொருள் 


களவினால் = களவின் மூலம் 


ஆகிய ஆக்கம் = உண்டாக்கிய செல்வம் 


அளவிறந்து = அளவில்லாமல் 


ஆவது = பெருகி வருவது  


போலக்  = போலத் தோன்றி 


கெடும் = பின்னாளில் அழியும் 


ஆமா, என்ன பெரிய கெடுதல். எல்லாம் நல்லாத்தான் இருக்கிறார்கள்....


தவறுகள், களவு செய்வதற்கு முன்னால், ஒருவனிடம் ஏதோ கொஞ்சம் பொருள் இருக்கும். மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்பட்டு தவறான வழியில் சென்று பொருள் தேட ஆரம்பித்தால், தவறான வழியில் வந்த செல்வம் மட்டும் அல்ல, முதலில் சேர்த்து வைத்து இருந்த செல்வமும் போய் விடும்.  raid வந்தால், எது எந்த பணம் என்றா பார்ப்பார்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் விடுவார்கள். 


அது ஒரு கெடுதல். 


தவறான வழியில் போவதன் முன் ஊருக்குள் நல்ல பேர் இல்லாவிட்டாலும், கெட்ட பேர் இருக்காது. தவறான வழியில் பொருள் தேடி, போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டால், இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய் விடும். செய்பவனின் மரியாதை மட்டும் அல்ல, அவனுடைய பெற்றோர், உடன் பிறப்பு, மனைவி, பிள்ளைகள் அனைவரின் மரியாதையும் போய் விடும். 


அடுத்த கெடுதல். 


தீய வழியில் பொருள் தேட முனையும் போது சில பல பாவங்களை செய்ய நேரிடும். அந்த வழி அறத்தில் இருந்து ஒருவனை விலக்கி பாவ வழியில் செலுத்தும். புண்ணியம் குறைந்து பாவம் கூடும்.


இந்தப் பிறவியில் பழி சுமந்தது போக வரும் பிறவியில் இந்த பாவத்தை அனுபவிக்க துன்பப்பட நேரிடும்.  இந்த வாழ்க்கையையும் கெடுக்கும். இனி வரப் போகும் வாழ்க்கையையும் கெடுக்கும். 


இந்தப் பிறவியில் கார், பெரிய வீடு, என்று சொகுசாக வாழ்ந்தாலும், அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பானோ, யார் அறிவார். 


ஜென்ம ஜென்மத்துக்கும் துன்பத்தைத் தேடித் தரும் அந்தப் பொருள் தேவையா?  


"அளவிறந்து கெடும்"...அளவில்லாமல் கெடும். எவ்வளவு கெடுதல் என்று சொல்ல முடியாது. அவ்வளவு கெடுதல் வந்து சேரும். 


யோசிக்க வேண்டிய விடயம். 


2 comments:

  1. வள்ளுவர் சொல்லி விடலாம். ஆனால் உலக நடப்பில் இப்படி தெரியவில்லையே!

    ReplyDelete
  2. சத்தியேந்திரன்November 28, 2024 at 8:39 PM

    இரண்டு ஆயிரம் வருடங்களுக்கு அறம் குறைந்தவர்க்கு கூறப்பட்டது. இக்காலத்தில் அறம் என்றால் என்ன எனக்கேட்கும் நிலை. அப்படி ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது

    ReplyDelete