Wednesday, June 12, 2013

பிரகலாதன் - துடித்திலன், திருப் பெயர் மறவாதான்

பிரகலாதன் - துடித்திலன், திருப் பெயர் மறவாதான்


பிரகலாதனை தூக்கி தீயில் போடுங்கள் என்றான் இரணியன்.

அந்தத் தீ அவனை சுடவில்லை. மாறாக குளிர்ந்தது.

இரணியனின் வீரர்கள் , "உன் மகனை தீ சுடவில்லை , அடுத்து என்ன செய்வது " என்று கேட்டார்கள்.

இரணியனுக்கு பயங்கர கோபம் ?

முதலில் அந்த "அக்னி தேவனை கையை காலை கட்டி சிறையில் தள்ளுங்கள் , அந்த பிரகலாதனை சிறையில் தள்ளி நஞ்சு கொண்ட பாம்புகளை கொண்டு கடிக்க விடுங்கள்"  என்று ஆணையிட்டான்

ஆணவம் எப்படி கண்ணை மறைக்கிறது. பெத்த பிள்ளையை கொல்லத் தூண்டுகிறது.

இரணியன் நினைத்த மாத்திரத்தில் அனந்தன் முதலிய பாம்புகள் வந்து நின்றன. "அவனைப்  போய் கடியுங்கள் " என்று அவற்றை ஏவினான்.

அந்த பாம்புகளும் அவற்றின் பல் பதியும் படி கடித்தன.

பிரகலாதன் - பயந்தானா ? வலியால் துடித்தானா ? அவன் முகம் மாறியதா ?

கம்பன் மட்டுமே சொல்ல முடியும் அதை. பாடலைப் படியுங்கள்

பாடல்


அனந்தனே முதலாகிய நாகங்கள்,  "அருள் என்கொல் ?" என, அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினில்; நெருப்பு உகு பகு வாயால், 
வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல், வாள் எயிறு உற ஊன்றி, 
சினம் தம் மீக்கொள, கடித்தன; துடித்திலன், திருப் பெயர் மறவாதான்.

பொருள் 



அனந்தனே முதலாகிய நாகங்கள் = அனந்தன் முதலிய நாகங்கள்

"அருள் என்கொல் ?" என = உன் அருள் (=ஆணை) என்ன என்று

அன்னான் = அவன், அதாவது இரணியன்

நினைந்த மாத்திரத்து எய்தின = நினைத்த உடன் வந்து நின்றன

நொய்தினில் = ஒரு நொடியில், உடனே

நெருப்பு உகு பகு வாயால் = நெருப்பை கக்கும் பிளந்த வாயால்

வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல் = இங்கு தான் கம்பன் நிற்கிறான். வரைந்து வைத்தது போல் உள்ள மேனியை கொண்ட பிரகலாதன் மேல். அது என்ன வரைந்து வைத்த மேனி ?

முதலாவது - அந்த பாம்புகளை கண்டு அவன் கொஞ்சமும் பயப் படவில்லை. வரைந்து வைத்த ஓவியம் போல இருந்தான்.

இரண்டாவது - இயற்கையில் தோன்றும் எதுவும் நாளடைவில் மூப்பு அடையும், வாடும், மறைந்து விடும். வரைந்து வைத்த ஓவியம் என்றும் அப்படியே இருக்கும். பிரகலாதனின் உருவம் அவ்வளவு அழியாத அழகாக இருந்ததாம். படத்தில் உள்ள மோனோ லிசா இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.

மூன்றாவது - படமோ, சிற்பமோ செய்யும் போது ஏதாவது தவறு இருந்தால் அழித்து விட்டு மீண்டும் செய்து கொள்ள முடியும். எல்லா குறைகளையும் நீக்கி குறையே இல்லாத ஒரு ஓவியத்தையோ சிற்பத்தையோ உருவாக்க முடியும். இயற்க்கை கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.



வாள் எயிறு உற ஊன்றி = கூறிய பற்கள் வலிக்கும் படி ஊன்றி

சினம் தம் மீக்கொள = மிகுந்த சினத்துடன்

கடித்தன = கடித்தன

துடித்திலன் = வேறு யாராவதாய் இருந்தால் துடித்திருப்பார்கள். பிரகலாதன் துடிக்கவில்லை

திருப் பெயர் மறவாதான் = இறைவனின் பெயரை அந்த சந்தர்ப்பத்திலும் மறவாதவன்.


2 comments:

  1. வரைந்து வைத்த மேனி விளக்கம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது.

    ReplyDelete
  2. நான் பல குழந்தைகளைப் பார்க்கும்போது, சித்திரம் போல இருப்பதாக எண்ணியிருக்கிறேன் - குற்றம், குறை இல்லாது, மனத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இருப்பதால். உன் விளக்கம் அருமையானது. இன்னொரு முறை எனக்கு அந்த நினைவு வரும்போது, உன் விளக்கமும் சேர்ந்து நினைவுக்கு வரும்.

    ReplyDelete