திருக்குறள் - தவம் - தவம் என்றால் என்ன ?
https://interestingtamilpoems.blogspot.com/2024/05/blog-post_16.html
தவம் என்றால் என்ன ?
தச்சு வேலை என்றால் என்ன என்று கேட்டால் எப்படிச் சொல்வது? தச்சர் ஒருவர் வேலை செய்யும்போது, அதைக் காட்டி, தச்சு வேலை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விளங்க வைக்கலாம்.
அதுபோல தவம் என்றால் என்ன என்று கேட்டால் தவம் செய்பவர்களைக் காட்டி அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் தவம் என்று புரிய வைக்கலாம்.
தவம் செய்பவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்?
தவம் செய்பவர்கள் இரண்டு வேலை செய்வார்கள்.
முதலாவது, தங்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வார்கள்.
இரண்டாவது, மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள்.
தவம் என்றால் இந்த இரண்டும் தான்.
பாடல்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
பொருள்
உற்றநோய் = வந்த துன்பத்தை
நோன்றல் = பொறுத்துக் கொள்ளுதல்
உயிர்க்குறுகண் = உயிர்க்கு + உறுகண் = உயிர்களுக்கு துன்பம்
செய்யாமை = செய்யாமல் இருத்தல்
அற்றே = அதுவே
தவத்திற்கு உரு = தவத்தின் அடையாளம், வடிவம்.
சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
நமக்கு துன்பம் பல வழிகளில் வருகிறது.
உடல் ஆரோக்கியம், பணத் தட்டுபாடு, உறவுகளில் சிக்கல், பிள்ளைகளால், கணவன்/மனைவி உறவில் பிரச்சனை, வேலை பார்க்கும் இடத்தில் வரும் துன்பங்கள், என்று எவ்வளவோ வழிகளில் துன்பம் வருகிறது.
துன்பம் வந்தால் என்ன செய்கிறோம்.
வருந்துகிறோம், அதற்கு யார் காரணம் என்று அறிந்து அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். வெறுப்பு வருகிறது. இது எப்படா முடியும் என்று ஒரு பதட்டம் வருகிறது. அமைதியாக இருக்க முடியவில்லை.
வள்ளுவர் சொல்கிறார், "துன்பம் வந்தால், சரி வந்து விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். சீறி விழக் கூடாது. கோபப் படக்கூடாது. எரிச்சல் கொள்ளக் கூடாது. அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நடக்கட்டும். என்று அந்த துன்பத்தை ஏற்க பழக்கிக் கொள்ள வேண்டும். "
சரி, துன்பம் வந்தால் எப்படி அதை ஏற்றுக் கொள்வது. துன்பம் வந்தால், ஒன்று அதை எதிர்த்து நிற்போம், அல்லது ஓடிவிட முயல்வோம். ஏற்றுக் கொள்வது எப்படி?
அதற்குப் பழக்கம் வேண்டும்.
பழக பழக வந்து விடும்.
சரி, துன்பம் வந்தால் அதை ஏற்றுப் பழகலாம். வரவில்லை என்றால் எப்படிப் பழகுவது?
அதற்குத்தான் விரதம் என்று வைத்தார்கள். உண்ணா விரதம், மௌன விரதம், தூங்கா விரதம் என்று பல இருக்கின்றன. வலிந்து, சாப்பிடாமல் இருப்பது. பசி துன்பம்தான். அந்தத் துன்பத்தை ஏற்றுப் பழக்கம் பண்ணிக் கொண்டால், ஏனைய துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.
தானே வலிய சென்று சில துன்பங்களை ஏற்றுப் பழகிக் கொண்டால், எதிர்பாராத துன்பங்கள் வரும் போது அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விடும். "நான் பார்க்காத துன்பமா" என்று என்று தோன்றும்.
பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.
நான் துன்பத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக மற்ற உயிர்களை துன்பப் படுத்தக் கூடாது. நான் விரதம் இருக்கலாம். அதற்காக வீட்டில் உள்ள எல்லோரையும் படுத்தக் கூடாது.
வாழ்வில் எதைச் சாதிக்க வேண்டும் என்றால் துன்பம் வரத்தான் செய்யும். துன்பத்தை ஏற்கும் பக்குவம் இல்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. சாதனை இல்லை என்றால் இன்பம் இல்லை. சாதனைகள் இன்பத்தைத் தரும். எனவே, தவம் இன்பத்தைத் தரும்.
படிப்பது துன்பம்.
வேலை பார்ப்பது துன்பம்.
துன்பத்தைக் கண்டு துவண்டுவிட்டால், சாதனை வராது. சாதனை இல்லாவிட்டால் வாழ்வு சிறக்காது. எனவே வாழ்வு சிறக்க வேண்டும் என்றால், சாதிக்க வேண்டும், அதற்கு துன்பத்தை சகித்துப் பழக வேண்டும்.
அதுதான் தவம்.
இன்றில் இருந்து நாலு மாடி ஏறுங்கள், சர்க்கரை போடாமல் காப்பி டீ குடித்துப் பாருங்கள், ஒரு வேளை உணவைக் குறையுங்கள், சில மணி நேரமாவது செல் போனை பார்ப்பது இல்லை என்று முடிவு எடுங்கள், சுவையான இனிப்பான சாப்பிடும் பொருள்களைத் தவிருங்கள்.
அதுதான் தவம். அதைச் செய்தால், நீங்களும் தவசீலர் தான்.