கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண
https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_9.html
தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு புலம்புகிறான்.
அவன் புலம்புவது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு பட்சிக்கும், ஒரு சக்ரவத்திக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு இருக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது.
நண்பர்களுக்குள்ளேயே ஒருவன் விரைவில் பெரிய இடத்தை அடைந்து விட்டால், மற்றவர்கள் மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். "அவன் பெரிய ஆள் .." என்று அவனிடம் உள்ள பழைய நெருக்கம் குறைந்துவிடும்.
அப்படி இருக்க ஒரு பறவைக்கும், ஒரு பெரிய சக்ரவத்திக்கும் இடையே இப்படி ஒரு நட்பா என்று நம்மை வியக்க வைக்கிறது.
உண்மையான நட்பில் உயர்வு தாழ்வு இல்லை.
இப்போது சடாயுவின் புலம்பலுக்கு வருவோம்.
சடாயு
"தயரதா, என் நண்பனே, நீ ஏன் என்னை விட்டுப் போனாய் என்று எனக்குத் தெரியும். நீ இறந்து போனால் நானும் இறப்பேனா என்று என் நட்பின் ஆழத்தை அறியவே நீ என்னை விட்டுப் போய் விட்டாய். என்ன செய்ய. நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேனே. காரணம், நான் ஒரு விலங்கு என்பதலா? ஒரு வேளை நான் ஒரு மனிதப் பிறவியாய் இருந்திருந்தால் நீ உயிர் துறந்த போது நானும் உயிரை துறந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்"
புலம்புகிறார்.
பாடல்
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்
தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க, நிலையாத
நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண நடந்தனையோ? நாயகனே!
தீவினையேன், நண்பின் நின்றும்
விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;
இன்னும் உயிர் விட்டிலேனால்.
பொருள்
அலங்காரம் = அழகானது
என = என்று
உலகுக்கு = இந்த உலகத்துக்கு
அமுது அளிக்கும் = அமுதை வழங்கும்
தனிக் குடையாய்! = சிறந்த வெண் கொற்ற குடையை உடையவனே
ஆழி சூழ்ந்த = கடல் சூழ்ந்த
நிலம் = இந்த உலகம்
காவல் அது கிடக்க = காவல் இன்றி கிடக்க (நீ இல்லாததால்)
நிலையாத = ஒரு நிலையில் நிற்காத
நிலை உடையேன் = மனதை உடைய என்
நேய நெஞ்சின் = அன்பு கொண்ட மனத்தின்
நலம் காண = பெருமையை, உறுதியைக் காண
நடந்தனையோ? = என்னை விட்டு பிரிந்து போனாயோ ?
நாயகனே! = தலைவனே
தீவினையேன், = தீய வினை உடையவனான நான்
நண்பின் நின்றும் = நட்பு இருந்தாலும்
விலங்கு ஆனேன் = விலங்காக இருக்கின்றேன்
ஆகலினால் = ஆதலினால், எனவே
விலங்கினேன் = விலகி இருக்கிறேன்
இன்னும் உயிர் விட்டிலேனால் = இன்னும் உயிரை விடாமல் இருக்கிறேன்
தன்னைத் தானே நொந்து கொள்கிறார்.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட, வீட்டில் கணவன்/மனைவி/பிள்ளைகள் என்று உறவாட நேரம் இல்லமால் தவிக்கிறார்கள்.
ஒரு சக்கரவர்த்தி எப்படி நேரம் ஒதுக்கி ஒரு பறவையோடு நட்பு பாராட்டி இருக்க முடியும்.
நேரம் இல்லை என்று நாம் சொல்லுவது எல்லாம் ஒரு சாக்கு.
அன்பிருந்தால், நேரம் இருக்கும்.