திருக்குறள் - எது எங்கு நிற்கும்
https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post.html
எவ்வளவோ படிக்கிறோம், எவ்வளவோ கேட்கிறோம்.
படிக்கும் போதும், கேட்கும் போதும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அதை அப்படியே கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
ஆனால் முடிவதில்லை.
மனம் பழைய வழியிலேயே போகிறது.
ஏன்?
ஒன்றைச் செய்வதினால் வரும் நன்மை, செய்யாமல் விடுவதினால் வரும் தீமை என்ற இரண்டு மட்டும் புரிந்தால் போதாது.
நன்மையின் அளவு என்ன, தீமையின் அளவு என்ன என்று தெரிய வேண்டும். அளவு தெரிந்தால், கடைபிடிப்பது எளிது.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஐஸ் கிரீம் சாப்பிடுவது இன்பமாக இருக்கிறது. அதில் உள்ள துன்பம் தெரிகிறதா என்றால் இல்லை. அதில் என்ன துன்பம் இருக்கிறது என்று சொல்லுவோம்.
அதுவே, ஒரு சர்க்கரை நோயாளியிடம் அந்த ஐஸ் கிரீமை கொடுத்தால் காத தூரம் ஓடுவார். ஏன்? அதனால் வரும் தீமை அவருக்கு நன்றாகத் தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு கூடும் என்று துல்லியமாகத் தெரியும். எத்தனை கிராம் மாத்திரை சாப்பிட வேண்டி வரும் என்று தெரியும். தலை சுற்றல், வியர்வை, படபடப்பு போன்ற உடல் உபாதைகள் அவருக்குத் தெரியும். எனவே, அதை உண்ணாமல் இருப்பது சுகம் என்று இருப்பார்.
தவறு செய்வதின் விளைவு முழுமையாகத் தெரிந்தால், அளந்து, அது என்ன அளவு என்று தெரிந்தால் தவறு செய்வதில் நாட்டமே வராது. அதை செய்யாமல் இருப்பது எவ்வளவு சுகம் என்று தெரியும்.
அந்த அளவு இல்லை என்றால், "செய்தால் என்ன, ஒரு முறைதானே" என்று மனம் ஓடும்.
வள்ளுவர் சொல்கிறார்
"எதையும் ஆராய்ந்து, விளைவுகளை அளந்து அறிந்தவன் மனதில் எப்படி அறம் நிலைத்து நிற்குமோ, அது போல் களவையும், அதன் சுவையையும் அறிந்தவர் மனதில் வஞ்சனை நிலைத்து நிற்கும்"
பாடல்
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு
பொருள்
அளவுஅறிந்தார் = எதையும் ஆராய்ந்து, அளந்து அறிந்தவர்
நெஞ்சத்து = மனதில்
அறம்போல நிற்கும் = அறம் எப்படி நிலைத்து நிற்குமோ அது போல
களவுஅறிந்தார் = களவு செய்வதை மேற்கொண்டவர்
நெஞ்சில் = மனதில்
கரவு = வஞ்சனை
களவு எண்ணம் மனதில் வந்து விட்டால்,யாரை எப்படி ஏமாற்றலாம், எப்படி அவர்கள் பொருளை அவர்கள் அறியாமல் பறித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் ஓடும். அதில் சந்தேகமே இல்லை. அது எந்த அளவுக்கு உறுதியானது என்றால் அளவு அறிந்தவர் மனதில் அறம் எவ்வாறு நிலைத்து நிற்குமோ அந்த அளவு என்கிறார்.
நாம் இரண்டாம் பகுதியை சற்று விட்டு விடுவோம். நமக்கு களவில் நாட்டம் இல்லை. களவினால் வரும் பொருள் நல்லது செய்யாது என்று நாம் நம்புபவர்கள்.
முதலாவது பகுதி நமக்கு முக்கியமானது.
அற வழியில் நிற்க மனம் ஆசைப் பட்டாலும், பெரும்பாலும் முடிவது இல்லை. ஒரு விரதம் இருக்க முடிகிறதா? ஒரு வேளை காப்பியை விட முடிகிறதா?
காரணம், விளைவின் ஆழம் தெரியாமை. மேலோட்டமாகத் தெரியும். அல்லது, அது பற்றிய சிந்தனை கிடையாது. முன்னோர்கள் சொன்னார்கள், புத்தகத்தில் எழுதி இருக்கிறது, பரம்பரையாக இப்படித்தான் செய்து வருகிறார்கள் என்ற அளவில் தெரியுமே தவிர செயலின் உண்மையான நீள அகலம் தெரியாது.
தெரிந்தால், அறத்தை கடை பிடிப்பது அவ்வளவு எளிது.
துறவறத்தின் இன்ப எல்லைகள் புரியாமையால் இல்லறத்தில் மனிதன் கிடந்து உழல்கிறான்.
புரிந்தவன், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறான்.
அருமை
ReplyDelete