Monday, January 20, 2025

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_20.html


அடக்கம் நல்லதா?  


நம் அறநெறி இலக்கியங்கள் எல்லாம் அடக்கமாக இருக்க வேண்டும், ஆணவம் கூடாது என்று தான் சொல்லித் தருகின்றன. 


இருந்தும், சிலர் இதில் இருந்து மாறுபடுகிறார்கள். 


அவை அடக்கம், அடக்கம், பணிவு என்று சொல்லிச் சொல்லி, நம் மக்கள் ஒரு மன உறுதி இல்லாமலலேயே வளர்ந்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். 


என்ன செய்தாலும், அது பத்தாது, இன்னும் நல்லா செய்யணும், இதெல்லாம் பெரிசா, இதை விட எவ்வளவோ பேர் எவ்வளவோ அதிகமாகச் செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுமே அல்லாமல், நாம் நன்றாகச் செய்தோம் என்ற எண்ணமே வராது. 


அது மட்டும் அல்ல, வேறு யார் நன்றாகச் செய்தாலும் பாராட்ட மனம் வராது. தான் செய்ததையே பாராட்டாத ஒரு ஆள் மற்றவர் செய்வதை எப்படி பாராட்டுவார்.


மனைவி வேலை மெனக்கெட்டு ஏதாவது உணவு தயாரித்து இருப்பாள். மாடு வைக்கோல் தின்பது மாதிரி தின்று விட்டுப் போய் விடுவார் கணவன். ஒரு வார்த்தை அதைப் பற்றி பேசுவது கிடையாது. அப்படியே வலிந்து "எப்படி இருக்கு " என்று கேட்டால் "எங்க அம்மா செய்வது போல இல்லை " என்று குற்றம் வேறு சொல்வது. 


காரணம் என்ன?  


தன் பெருமையை தானே சொல்லிக் கொள்ளக் கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும் என்று மூளைச் சலவை செய்து விடுவதால் வரும் வினை என்று ஒரு சாரார் இந்த அடக்க உணர்வை ஏற்றுக் கொள்வது இல்லை. 


உன்னை நீயே உயர்த்திப் பிடிக்காவிட்டால் உலகில் வேறு யார் உன்னைப் பாராட்டுவார்கள் என்பது அவர்கள் வாதம். 


நளவெண்பா பாட வந்த புகழேந்திப் புலவர் அவையடக்கம் பாடுகிறார். 


"நள மகாராஜாவின் வரலாற்றை நான் கூறுவது என்பது சினம் கொண்ட பலமான யானையை ஒரு தாமரை நூலினால் கட்டுவது போல...எப்படி அது முடியாதோ இதுவும் முடியாது. எனவே என் இந்தச் செயலை ஆன்றோர் பொறுத்து அருள வேண்டும்" என்று பணிவோடு கூறுகிறார். 


பாடல் 



வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தன்

தந்துவினால் கட்டச் சமைவதொக்கும்-பைந்தொடையில்

தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்கதையை

யான்பாடல் உற்ற இது.


பொருள் 



வெந்தறுகண் = கோபம் கொண்ட வலிமையான  

வேழத்தை = யானையை


வேரிக் = மணம் நிறைந்த 


கமலத்தன் = தாமரை மலரின் 


தந்துவினால் = நூலினால் 


கட்டச் சமைவதொக்கும் = கட்டி வைப்பதற்கு ஒப்பாகும் 


பைந்தொடையில் = மலர்களில்  (மணம் நிறைந்த மலர்க் கொடி)


தேன்பாடும் = தேனை உண்டு பாட்டுப் பாடும் 


தார் = மாலை அணிந்த 


நளன்தன் = நள மகாராஜாவின் 


 தெய்வத் திருக்கதையை = தெய்வத் தன்மை வாய்ந்த உயர்ந்த கதையை 


யான்பாடல் உற்ற இது = நான் பாட நினைத்தது 


யாராவது கேட்டால் நான் நல்லவன், திறமை உள்ளவன், அறிவாளி என்று சொல்ல வேண்டுமா அல்லது அடக்கமாக எனக்கு ஒண்ணும் தெரியாது, நான் கற்றது கை மண் அளவு அடக்கமாக பதில் சொல்ல வேண்டுமா? எதைச் சொன்னால் வாழ்வில் முன்னேற முடியும்?



 

No comments:

Post a Comment