புறநானுறு - வாழ்வின் போக்கு
வாழும் போது பல இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள், தடைகள் வரும். வந்தால் என்ன செய்வது ?
கோவிலுக்குப் போய் இறைவன வழிபட்டால் அந்தத் துன்பங்கள் விலகிவிடுமா?
யாகம், வேள்வி செய்தால் போகுமா?
தான, தர்மம் செய்தால் போய் விடுமா?
என்ன செய்தால் வந்த துன்பம் போகும்?
என்ன செய்தாலும் போகாது? துன்பம் வாழ்வின் ஒரு பகுதி. அது வரும், இருக்கும். போகும். தனி மனித முயற்சியால் விலகும் என்பது ஒரு தோற்றமே அல்லாது அது உண்மையா?
மலையின் மேல் பெரிய மழை பெய்கிறது. அது ஒன்று சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக வருகிறது. அதில் சில மரக் கட்டைகள் அடித்து வரப்படுகின்றன. அந்தக் கட்டைகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்போது அந்த கட்டைகள் நினைக்கும், எப்படியாவது இந்த ஆர்பரிக்கும் ஆற்றின் ஓட்டத்தில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று நினைக்கும். இப்படியே போனால் அங்கே ஒரு பாறையில் மோத வேண்டும், இங்கே ஒரு கரையில் இடிக்க வேண்டும், மலை மேல் இருந்து கீழே விழ வேண்டும், இறுதியில் துண்டு துண்டாக உடைந்து கடலில் உருத் தெரியாமல் அழிய வேண்டும்.
முடியுமா? அந்த மரக் கட்டைகள் என்ன நினைத்தாலும், எத்தனை அழுதாலும், எத்தனை பிரார்த்தனை செய்தாலும், தன் முயற்சியால் கரை ஏறி வர முடியுமா?
வாழ்வில் துன்பம் ஒரு பகுதி. அதை நீக்கி வாழ முடியாது. வாழ்வின் போக்கில் போக வேண்டியது தான். இன்பம், வரும். துன்பம் வரும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.
இதைத்தான் கணியன் பூங்குன்றனார் புறத்தொகையில் கூறுகிறார்.
பாடல்
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின்
பொருள்
கல் = கற்கள்
பொரு = பொருந்திய, அல்லது கற்களில் பொருதி (மோதி)
திரங்கு = இறங்கி வரும்
மல்லற் பேர்யாற்று = பெரிய ஆற்றின்
நீர்வழிப் = நீரின் வழியில், ஆற்றின் ஓட்டத்தில்
படூஉம் = மிதந்து வரும்
புணைபோல் = மரக்கட்டை போல்
ஆருயிர் = அருமையான உயிர்
முறைவழிப் படூஉ = அதன் வழியில் போகும்
மென்பது = என்பது
திறவோர் = அறிஞர்
காட்சியிற் = அறிவில்
றெளிந்தன மாகலின் = அறிந்தோம் என்பதால்
பெரியவர்கள் கண்டு உணர்ந்த சொன்னதை நாம் அறிந்து கொண்டதால்.
ஆறு, வாழ்க்கை.
மரக் கட்டை, நம் வாழ்க்கை
ஆறு அலைக்கழிப்பது - வாழ்வில் அங்கும் இங்கும் அலைவது.
மரக் கட்டையின் கையில் என்ன இருக்கிறது?
ஆறு அமைதியாக இருந்தால் - வாழ்வு சுகம் என்று நினைப்பது.
ஆற்று சுழலில் அகப்பட்டுக் கொண்டால் - ஐயோ, முறையோ என்று அழுவது.
வேறு என்ன செய்ய முடியும் ?
No comments:
Post a Comment