குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ
நிறைய பலசரக்கு கடைகளில், உணவு விடுதிகளில் பார்த்து இருக்கலாம், கண்ணன் படம் போட்டு, அவன் முன்னால் அர்ஜுனன் மண்டியிட்டு உபதேசம் கேட்பது போல் ஒரு படம் இருக்கும்.
அந்த படத்திற்கு பக்கத்தில்
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்"
- ஸ்ரீ கிருஷணர், பகவத் கீதை
என்று போட்டு இருக்கும்.
கீதையில் எந்த அத்யாயம், எத்தனாவது சுலோகம் என்று போட்டு இருக்காது.
காரணம் என்ன?
கீதையில் அப்படி ஒரு சுலோகம் இல்லை.
எதையாவது போட்டுவிட்டு, அடியில் கிருஷ்ணர், இராமர் விவேகானந்தர் என்று எழுதிவிடுவது.
மேற்கண்ட வாசகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் சொன்னதாகவும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.
சரி, அது போகட்டும். யார் சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல.
சொன்னது சரிதானா என்று பார்ப்போம்.
நடந்தது எல்லாமே நன்றாகவே நடந்ததா?
உங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் நல்லவையாகவே நடந்ததா?
யாருக்குமே அப்படி ஒரு வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பில்லை.
வாழ்க்கை என்றால் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும்.
குண்டலகேசி சொல்கிறது
"எது இறக்க வேண்டுமோ, அது இறக்கும் (அல்லது அழியும்). எது பிறக்க வேண்டுமோ, அது பிறக்கும். யார் எதைப் பெற வேண்டுமோ, அதை அவர்கள் பெறுவார்கள். யார் எதை இழக்க வேண்டுமோ, அதை அவர்கள் இழப்பார்கள். இதை அறிந்து கொண்டவர்கள், அழவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்று இருப்பது நல்லது"
என்று.
பாடல்
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் இழப்பை இழக்கும்
அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும்என்று உரைப்பது நன்று.
பொருள்
மறிப = அழிய வேண்டியது
மறியும் = அழியும்
மலிர்ப = மலர வேண்டியது
மலிரும் = மலரும்
பெறுப பெறும் = பெற வேண்டியவர்கள் பெறுவார்கள்
இழப்பை இழக்கும் = இழக்க வேண்டியவர்கள், இழப்பார்கள்
அறிவார் = அதை அறிந்தவர்
அழுங்கார் = துன்பத்தில் மூழ்கி விட மாட்டார்கள்
உவவார் = இன்பத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்
உறுவது உறும்என்று = எது நடக்கணுமோ, அது நடக்கும் என்று
உரைப்பது நன்று = சொல்லுவது சிறந்தது
வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் கூடாது.
No comments:
Post a Comment