திருக்குறள் - கள்ளாமை - ஆங்கே வீழ்வார்
பிறர் பொருளை அடைய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அந்த மாதிரி கார் வேண்டும், அது போல ஒரு வீடு வேண்டும், அந்த மாதிரி நகை வேண்டும் என்றெல்லாம் ஏன் தோன்றுகிறது?
உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பதால், இல்லாததைக் கொண்டு வா என்கிறது மனம்.
சரி, ஆசைப் பட்டதை அடைந்து விட்டால் போதும் என்று நிற்குமா என்றால் இல்லை. ஒன்றை அடைந்தால் அதை விட பெரியதற்கு ஆசைப் படுகிறது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பறக்கிறது.
ஒரு கட்டத்தில் தன் சொந்த உழைப்பினால் வேண்டியதை எல்லாம் அடைய முடியாது என்ற நிலை வரும் போது, ஒன்று தவறான வழியில் செல்லலாமா என்று மனம் சிந்திக்கிறது. அல்லது, நம்மால் முடியாது என்று அயர்ந்து, துவண்டு விடுகிறது. இரண்டுமே நல்லது இல்லை.
வள்ளுவர் சொல்கிறார்
அளவு அல்லாத தீய செயல்களை செய்தவர் உடனே வீழ்வார், அழிவர். யார் என்றால் களவைத் தவிர பிற ஒன்றை அறியாதவர்கள்.
பாடல்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
பொருள்
அளவல்ல = அளவு அல்லாதது.
செய்தாங்கே = செய்து உடனே
வீவர் = வீழ்வார், அழிவார்
களவல்ல = களவைத் தவிர
மற்றைய = பிற ஒன்றை
தேற்றா தவர் = அறியாதவர்
அது என்ன அளவு அல்லாதது ?
நல்லது எது, கெட்டது எது என்று அளந்து அறியும் அறிவு. அந்த அறிவு இல்லாதவர் செய்து உடனே கெடுவர்.
எதைச் செய்து?
களவைச் செய்து உடனே கெடுவர்.
பரிமேலழகர் சொல்கிறார், களவு செய்வோம் என்று நினைப்பதும் செயல் தான். நினைக்கும் செயல். நினைத்தவுடனே வீழ்வர், "ஆங்கே" வீழ்வர் என்றால் உடனே.
நாம் நிஜ வாழ்வில் அப்படி நிகழ்வதாக காண்பதில்லை. கையும் களவுமாக பிடிபட்டால் கூட, நீதி மன்றம், வழக்கு, வக்கீல், வாய்தா, சாட்சி, என்று இழுத்துக் கொண்டே போகும். எங்கே உடனே தண்டனை கிடைக்கிறது?
முன்பே வள்ளுவர் சொல்லி இருக்கிறார், "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்ப்பின், தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்று. அதற்கு ரொம்ப நேரம் ஆகாது.
சரி, இது எதற்கு இந்த களவைப் பற்றி நாம் இவ்வளவு சிந்திக்க வேண்டும்? நாம் களவு செய்வதே இல்லை. களவு செய்யும் எண்ணமும் இல்லை. எதற்கு இதைப் போட்டு படிக்க வேண்டும்.
நாம் நேரடியாக களவு செய்வது இல்லைதான்.
இருந்தும், பல விதங்களில் நாம் களவு செய்கிறோம்.
உதாரணமாக,
நாம் பெறும் ஊதியத்துக்கு ஒவ்வொரு நாளும் அதற்கு உரிய வேலை செய்கிறோமா? வேலை செய்தாலும், வாங்கிய பணத்துக்கு உரிய பலனை முதலாளிக்களுக்கு தருகிறோமா? நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு என்பது ரூபாய் அளவு வேலை செய்தால், மீதி இருபது ரூபாய் களவுதான்.
வீட்டில் வேலை செய்பவர்கள், அவர்கள் செய்யும் வேலைக்கு உரிய ஊதியம் தருகிறோமா? இல்லை என்றால், எவ்வளவு குறைத்துக் கொடுக்கிறோமோ அவ்வளவு களவுதான்.
நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, பிறருக்கு கிடைக்க வேண்டிய ஒன்றை இலஞ்சம் கொடுத்து நாம் தட்டிப் பறித்தால் அதுவும் களவுதான்.
உறவில் கூட, பெறுவது அதிகமாகவும், கொடுப்பது குறைவாகவும் இருந்தால், அந்த இடைவெளி களவுதான்.
களவு என்றால் ஏதோ ஓட்டைப் பிரித்து இரவில் உள்ளே இறங்கி, திருடுவது மாத்திரம் அல்ல.
நமக்குச் சொந்தம் இல்லாத எதை எடுத்துக் கொண்டாலும் அது களவுதான்.
எவ்வளவு களவு செய்கிறோம்.
கள்ளாமை துறவிக்கு மட்டும் அல்ல, இல்லறத்தில் உள்ளவற்கும்தான்.
No comments:
Post a Comment