திருவருட்பா - வாலிலேன்
உணவு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ, அதுவே அளவு அதிகமானால் பல துன்பங்களுக்கு இடமாகிப் போகிறது.
உணவில் நாட்டம் அதிகமாக அதிகமாக, மற்றவற்றில் புத்தி போவது இல்லை.
உணவில் சிறு பற்று வந்துவிட்டால் கூட போதும், அது நாளடைவில் பெரிதாக வளர்ந்து விடும்.
"காலையில் எழுந்தவுடன் ஒரு வாய் காப்பி குடிக்காமல் எனக்கு ஒரு வேலையும் ஓடாது" என்று பெரிய சாதனை போல் சொல்லுபவர்களை கேட்டு இருக்கிறேன்.
சில நாள் வீட்டில் செய்த உணவு மிகுந்து விடும். அதைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்து உண்ணும் எண்ணம் வராது. அதை குளிர் சாதன பெட்டியில் (fridge) வைத்து இரண்டு மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி உண்பவர்களும் உண்டு.
வள்ளலார் சொல்கிறார்,
"நெல் குதிர் போல் என் வயிற்றில் சோற்றை அள்ளிப் போடுகிறேன். பழங்களை உண்டு அதன் தோலில் ஒரு துளியைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். எனக்கு ஒரு வால் இல்லை. இருந்து இருந்தால் நான் காட்டில் வாழும் விலங்கோடு ஒன்றாக இருக்கத் தகுந்தவன். இப்படி ஆகி விட்டேனே, இறைவா நான் என்ன செய்வேன்" என்று.
பாடல்
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே
பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை
தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
பொருள்
பாலிலே கலந்த சோறெனில் = பாலில் கலந்த சோறு என்றா
விரைந்தே = வேகமாகச் சென்று
பத்தியால் = மிகுந்த ஆர்வத்துடன்
ஒருபெரு வயிற்றுச் = பெரிய வயிறு
சாலிலே = பெரிய வாயகன்ற பாத்திரம். நெல்லு போட்டு வைப்பார்கள்.
அடைக்கத் தடைபடேன் = அள்ளி அள்ளிப் போட்டு, ஒரு அளவில்லாமல் உள்ளே போடுவேன்
வாழை, தகுபலா மா = வாழை, பலா, மாம் பழம்
முதற் பழத்தின் = போன்ற பழங்களை தின்று விட்டு,
தோலிலே எனினும் = அவற்றின் தோலில்
கிள்ளிஓர் சிறிதும் = நகத்தால் கிள்ளி ஒரு சிறிய துணுக்கைக் கூட
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் வராது எனக்கு
வாலிலேன் = எனக்கு வால் இல்லை
இருக்கில் = இருந்திருந்தால்
வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. வால் இல்லாத ஒரே காரணத்தால் நாட்டில் இருக்கிறேன். நான் ஒரு வால் இல்லாத வன விலங்கு
என்செய்வேன் எந்தாய் = நான் என்ன செய்வது இறைவா
முதலில் வேறு சோறு. அப்புறம் அதில் கொஞ்சம் பால் விட்டு உண்பது. பின் சோற்றில் பாலை விடுவதற்கு பதில் பாலில் சோற்றை விடுவது என்று ஆகி விடுகிறது.
" பாலிலே கலந்த சோறெனில்"....பாலில் கலந்த சோறு என்கிறார்.
வீட்டில் நல்ல பண்டங்கள் செய்தால், நாலு பேருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். எல்லாம் எனக்கே என்று தீபாவளி, பொங்கலுக்கு செய்த தின் பண்டங்களை பத்து நாள் வைத்து உண்ணக் கூடாது.
பசித்தவர்க்கு கொஞ்சம் உணவு கொடுத்து உண்டால் அவர்கள் பசி தீர்வது மட்டும் அல்ல, நாம் உண்பதும் குறையும்.
ஐயா,
ReplyDeleteதயைகூர்ந்து திருவாதிரை பதிகம் பொருள் எழுதவும். குறிப்பாக கீழ்கண்ட வரி
“குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்“