Tuesday, January 21, 2025

திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது

 திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது 


களவு செய்வார்க்கும், களவு செய்யாதாருக்கும் என்ன வேறுபாடு?  


இந்த உயிர் எங்கே தங்கி இருக்கிறது?


உயிர் உடம்பில் தங்கி இருக்கிறது. 


களவு செய்பவர்களுக்கும், அவர்கள் உடம்பு அவர்கள் உயிரை தள்ளி விடுமாம். அதாவது உடம்பு உயிரை விட்டுவிடும் என்கிறார் வள்ளுவர். 


சரி, களவு செய்யாதவர்களுக்கு மரணமே கிடையாதா? அவர்கள் சாகவே மாட்டார்களா? அப்படி என்றால் இதுவரை களவு செய்யாதவர் யாருமே இல்லையா? என்று கேட்டால், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


களவு செய்யாமல் இருப்பவர்கள், உயிரை விட்டாலும், அது விண்ணுலகம் சென்று தேவர்களில் ஒருவராக மாறி சாகா நிலை அடையும் என்கிறார். 


பாடல் 


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு


பொருள் 


கள்வார்க்குத் = களவு செய்பவர்களுக்கு 


தள்ளும் = வெளியே தள்ளி விடும் 


உயிர்நிலை = உயிர் நிலைத்து நிற்கும் உடல்.  அதாவது, உடல் உயிரை விட்டு விடும். 


கள்ளார்க்குத் = களவு செய்யாதவர்களுக்கு 


தள்ளாது = வெளியே தள்ளாது. அதாவது உள்ளே ஏற்றுக் கொள்ளும். எது?


புத்தேள் உலகு = விண்ணுலகு. 



அவர்களை விண்ணுலகம் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளும். 


சரி, களவு செய்பவர்களை ஏன் அவர்கள் உடல் அவர்களின் உயிரை தள்ளிவிடும் என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். களவு செய்பவர்களை அரசன் தண்டிப்பான். சிறையில் போடுவான். உடல் நலியும். சீக்கிரம் உயிரை விடும். 


களவு செய்தால் இந்தப் பிறவியிலேயே உடலும் உயிரும் பிரிந்து நிற்கும். களவு செய்யாவிட்டால், உயிர் பிரிந்த பின்னும், தேவர் உலகில் நீங்கா இடம் பெறலாம். 


இத்துடன் இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


அடுத்து என்ன அதிகாரம் என்றால்.....



No comments:

Post a Comment